நண்பர் வேலு குடும்பத்துடன் இன்று பனைமலைப்பேட்டைகோவிலுக்கு போயிருந்தோம்.
விநாயகர் சன்னதியில் "பாலும் தெளி தேனும் சொல்லு வைபவ்" என்று அவன் அம்மா அவனிடம் சொல்ல சொன்னதும், ஸ்ரீஹரி சொல்ல ஆரம்பித்தான். (பாதி தான் சொன்னான்). இவனுக்கு இது தெரியும் என்பது அப்போது தான் எனக்கு தெரியும்.
வீட்டுக்கு வந்ததும் நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். மகிழ்ந்த அவர், "சொல்லு கண்ணு" என்று அவனிடம் கேட்டார். முன்பு போலவே பாதி மட்டும் சொல்லி தயங்கி நின்றான். தொடர்ச்சியை அம்மா ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல, இவனும் கூடவே சொல்லி வந்தான்.
"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று அவர் முடிக்க, இவன் "தங்க கட்டி மூன்றும் தா" என்று முடித்தான்.
தங்கம் என்று இவனை கொஞ்சுவதால் அது தான் தெரிந்து இருக்கிறது. நாளை முதல் தமிழே என்றும் கொஞ்ச வேண்டும். 😄