ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவை



ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.
எரிச்சல்கொள்ளத் தேவை இல்லை.


எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!


- நாவிஷ் செந்தில்குமார்

நன்றி: ஆனந்த விகடன் / 08 02 2012 இதழ்

ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 12, 2012

சுவாமி விவேகானந்தர்


அமெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் (John D. Rockefeller). அமெரிக்காவின் மொத்த படிம எண்ணை (Fossil Fuel - Petrol, Diesel) வர்த்தகத்தில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். பெரும் கோடீஸ்வரர்.  

அப்படிப்பட்ட மனிதர் மன உளைச்சலாலும், படபடப்பாலும், உறக்கமின்றி அவதிப் பட்டார். அவரிடம் அவரது நண்பர், தனக்கு தெரிந்த ஒரு சாமியார் இந்தியாவிலிருந்து வந்து இருப்பதாகவும் அவரிடம் போனால் ஏதாவது தீர்வு கிடைக்கலாம் என கூறி சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லரை அழைத்து போனார்.

சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லர் தனது பிரச்சினையை கூற, கேட்டுக் கொண்டவர், "உங்கள் பணத்தை ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுங்கள். உங்கள் பிரச்சினை சரியாகும்" என அறிவுரை கூறினார். அதை கேட்டு, இப்படி சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் ராக்பெல்லர்.

ஆனால் விவேகானந்தரின் ஆளுமை மெல்ல மெல்ல அவரை சிந்தனையில் ஆழ்த்த, ராக்பெல்லர் தனது பணத்தை ஏழை எளியவர்களுக்காக செலவழித்தார். அவரே ஆச்சரியப்படும்படி தனது பிரச்சினையில் இருந்து அவர் மீண்டார்.

பின் விவேகானந்தரை சந்தித்த ராக்பெல்லர், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காக தனக்கு நன்றி சொல்லும் படி விவேகானந்தரை கேட்டுக் கொண்டார். புன்னகைத்த படி விவேகானந்தர் சொன்னார், "நன்றி சொல்ல வேண்டியது நானல்ல". உண்மையை உணர்ந்த ராக்பெல்லர் விவேகானந்தரிடம் நன்றி கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சுமார் 55 கோடி டாலர் அளவிற்கு நன்கொடை அளித்தார். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ராக்பெல்லர் பவுண்டேஷனின் பணி பிரமிக்க தக்கது. இன்றும் அது தனது பணியை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

காலம் பல கோடீஸ்வரர்களை கடந்திருக்கிறது. ஆனால் ஒரு  கோடீஸ்வரரை கொடை வள்ளலாக சரித்திரத்தில் நிலைக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர். 

முனைவர் எஸ்.சந்திரா அவர்கள் எழுதிய "அறிஞர்கள் வாழ்வில்" என்ற புத்தகத்திலிருந்து - வெளியீடு : விகடன் பிரசுரம்.


ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

பிருந்தாவனில் வந்த கடவுள்

நான் மிகவும் மதிக்கும் பதிவர் ஒருவர் எழுதிய கதை என்னை சங்கடப்படுத்தியதால் இந்த கதையை பதிவிடுகிறேன். இது நாகூர் ரூமி அவர்கள் எழுதி, கல்கி இதழில் (04/09/2011) வெளியானது. இந்த கதையின் முடிவில் உங்கள் கண்ணோரம் நீர் பூத்தால் நீங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள்.




ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

தூரத்தில் வரும்போதே உட்கார்ந்திருந்த பலர் தங்கள் பிருஷ்டங்களை அள்ளிக்கொண்டு எழுந்தார்கள். ரயிலை நோக்கி முன்னேறினார்கள். அமீர் உட்கார்ந்திருக்கவில்லை. நின்றுகொண்டுதானிருந்தான். உட்காருவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அவனால் உட்காரமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.

ஆங்காங்கு ‘சிமெண்ட் பென்ச்’கள் இருந்தன என்றாலும் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் அப்படி ஏதும் இல்லை. ஆனால் மேல் கூரையிலிருந்து இறங்கிய இரும்புத் தூண்களைச் சுற்றி திண்ணை மாதிரி அறுகோணவடிவில் சிமென்டில் கட்டியிருந்தார்கள். அதன்மீது மக்களும் தங்கள் லக்கேஜுகளையும் வைத்து அவர்களும் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களைப் போல அவனும் செய்ய முயன்றபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. அதாவது சூரியன் என்பது வானத்தில் இருப்பது மட்டுமல்ல, ரயில்வே நிலையங்களின் அறுகோணவடிவ சிமென்ட் தரையின் கீழும் இருப்பதுதான் என்பதுதான். மாலையைக் கடந்து அன்றைய நாள் இரவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோதும் காற்றில் கலந்திருந்த வெம்மையில் ஏற்கனவே தலைபூரா உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தது. இதில் அந்த தரையில் உட்கார்ந்து தன் பின்பக்கத்தையும் வெந்துபோகவிடுவதில் விருப்பமில்லாமல்தான் அவன் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால் எந்த உணர்வும் அற்றவர்களைப்போல பெண்களும் அந்த அறுகோணத் திண்ணையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததுதான் அவனை ஆச்சரியப்படுத்தியது. பெண்கள் மென்மையானவர்கள் என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. நிச்சயமாக ‘அதை’ வைத்துமட்டும் இருக்காது என்பது புரிந்தது. 

வழக்கம்போல அந்த பிச்சைக்காரன் “தம்பி, தம்பி” என்று சொல்லிக் கொண்டு ஊனமான ஒரு கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு வந்து காசுகேட்டான். கிட்டத்தட்ட இருபது வருஷமாக அவனைப் பார்க்கிறான் அமீர். எந்த மாற்றமும் இல்லை. அவனுடைய கையைப் போலவே அவனுடைய வாழ்க்கையும் ஒரு இன்ச்கூட வளரவில்லை.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அமீருக்கு ரொம்ப கோபம் வந்தது. அவனை அப்படியே ரயில் வரும்போது உதைத்து சாகடித்தால் என்ன என்று தோன்றியது அமீருக்கு. சோம்பேறி நாய். பிச்சையெடுப்பதில் சுகம் கண்டுவிட்டது. சும்மா பேண்ட் ஷர்ட் போட்டிருந்தால் ‘அண்ணே’, ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தால் ‘தம்பி’. கையாலேயே அவனுக்கு இல்லை என்று சொல்லி வழக்கம்போல விரட்டினான். அப்போதுதான் ரயில் வந்து சேர்ந்தது.   

ஏற்கனவே நினைவுப் பெட்டியில் போட்டுவைத்திருந்த அனுபவங்களிலிருந்து ஒன்றை உருவிப் பார்த்துவிட்டு, இந்த இடத்தில்தான் எஸ்.சிக்ஸ் கோச் வந்து நிற்கும் என்று அனுமானித்தவனாக ஒரு இடத்தில் போய் நின்றான் அமீர். அந்த இடத்தில் சரியாக எஸ்.ஒன் கோச் வந்து நின்றதும் தண்டவாளங்கள் அவனைப் பார்த்து நகைத்து ஒலியெழுப்பின.

அதை உதாசீனப் படுத்தியவனாக தன் செவ்வக வடிவ ‘பேக்’கை தூக்கிக்கொண்டு ஓடினான் எஸ்.சிக்ஸை நோக்கி. தோள் பை இடது தோளிலேயே எப்போதும் இருந்ததால் அதைத் தனியாக தூக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. பெட்டிக்கு உள்ளே போனதும்தான் மூச்சே வந்தது. இனி அடுத்த வேலை எழுபத்தி இரண்டாம் எண்ணுள்ள இருக்கையைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதுதான். அப்பாடா என்றது மனது. முன்பொருமுறை – இல்லையில்லை பலமுறை – ‘ரிசர்வ்’ செய்யாமல் போய் பட்ட கஷ்டம் ஞாபகம் வந்தது.

ரயில் கிளம்பிவிட்டது. அவனைப் போலவே பல பயணிகள் இடம் கண்டுபிடிக்கும் வேட்டையில் மும்முரமாக இருந்தார்கள். ஒருவழியாக அவன் கண்டுபிடித்தபோது அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது.

மகாவீரர்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவனாக தனது டிக்கெட்டைக் காட்டினான். நல்ல வேளையாக அதற்கு மேல் எதுவும் பிரச்சனை ஏற்படவில்லை. எதிரில் உட்கார்ந்திருந்த அவளது குடும்பத்தினர் ஏதோ சொல்ல அவள் உடனே எழுந்து அங்கு சென்றுவிட்டாள். அங்கு போய் உட்கார்ந்ததும் சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.

வழக்கம்போல தன் ‘பேக்’கை காலுக்குக் கீழே கால் படும்படியாக வைத்துக்கொண்டு தோள்பையை தொடையின் மீது போட்டுக்கொண்டு அமர்ந்தான். வியர்த்து விட்டிருந்தது. பின்பக்க பாக்கெட்டில் இருந்த சென்ட் தடவிய கர்சீஃபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். வியர்வையைத் துடைக்கும்போது ஒருவித குளிர்ச்சியை கழுத்து உணர்ந்தது. அது இன்பமான உண்மையான குளிர்ச்சி அல்ல. ப்ளாஸ்டிக் பூக்களிலிருந்து வாசம் வருவது மாதிரி.

சுற்றிமுற்றிப் பார்த்தான். தன் பக்கத்தில் ஒருவரும் அவர் பக்கத்தில் ஒரு பெண்ணும். எதிரில் ஒரு அம்மா ஒரு குழந்தையுடன். அவள் பக்கத்தில் ஒருத்தர். ஒரு இடம் காலியாகத்தான் இருந்தது. அந்த மார்வாடி அம்மா ஏன் அந்த இடத்தில் உட்காராமல் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தாள் என்று பதிலில்லாத ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டான்.

அந்த அம்மாவை மீண்டும் பார்த்தான். அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி  தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடி இந்த உலகத்தைப் பார்க்காமல் இருப்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷயம் என்று தோன்றியது. ஆனால் அதை இந்த உலகம் பார்க்காமல் இருக்கும்போதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல அவன் கண்ணை மூடிய அந்தக் கணமே யாரோ அவன் தொடையில் இடித்துப் புரியவைத்தார்கள். தன் பக்கத்து சீட்டில் இருந்தவர்தான். ஏதோ அவசரம் போல. எழுந்து சென்றவர் போகும் அவசரத்தில் அவனைக் கலைத்து விட்டுச் சென்றிருக்கிறார். மறுபடியும் நிம்மதியாகக் கண்களை மூடவேண்டுமெனில் அவர் திரும்பி வராமல் இருக்க வேண்டும்.

அது சொல்ல முடியாது. அப்படியே வராவிட்டாலும் ஓரத்தில் அவன் உட்கார்ந்திருந்ததால் காஃபி டீ போன்ற போகின்ற வருகின்ற எல்லாருமே அவனை இடித்துக்கொண்டு போகின்ற வாய்ப்பு உண்டு என்பதால் கண்களை மூடுவதை ஒத்திப்போட்டான். இருக்கவே இருக்கிறார் ஜே.கிருஷ்னமூர்த்தி என்று தோள்பையைத் திறந்து  “தெரிந்ததிலிருந்து விடுதலை” என்ற சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவருடைய புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

அழகான அட்டை. கரும் பச்சையில் கீழ்ப்பகுதி. லைட்டான பச்சையில் மேல் பகுதி. கீழே கட்டம் கட்டி ஜே.கே.யின் படம். பக்கவாட்டில். அவரைப் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. ஜாதி மதங்கள் போன்ற எல்லாம் அடையாளங்களையும் மீறிய முகங்கள் அவை. உண்மையின் அழகு மட்டுமே அதில் தெரிகிறது. தனக்குள் புன்னகைத்தபடி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

“சார், இது என்ன புக் பாக்கலாமா?”.

கேள்வி கேட்டவர் எதிரில் இருந்தவர்தான். இப்போதுதான் புத்தகத்தையே திறந்திருந்தான். அதற்குள் என்ன உபத்திரவம் இது என்று தலையைத் தூக்கினான். ஒன்றும் சொல்லாமல் புத்தகத்தை அவரிடம் கொடுத்தான். அவர் அதன் தலைப்பை ஒரு நோட்டம் விட்டவுடனேயே “அடடே, Freedom from the Known அருமையான புத்தகமாயிற்றே. சார் நான் ஜே.கே.யோட ரசிகன் சார். அவரோட முப்பது புஸ்தகம் இதுவரைக்கும் படிச்சிருக்கேன் சார். கேஸட்ஸ்கூட கேட்டிருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும் சார். நீங்க ஜே.கே. விரும்பி படிப்பிங்களா சார்?”

படபடவென பேசிவிட்டார். மனிதர்களின் அறிவுத்தாகம் அவன் மண்டையைக் காய வைத்தது. என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான். “நானும் படிச்சிருக்கேன்” என்றான் பட்டும்படாமல்.

அவர் விடுவதாக இல்லை. ‘’பார்த்திங்களா சார், இதுதான் தெய்வத்தோட அருள்ங்கறது. எப்படி நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோம் பாத்திங்களா?” என்றார்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவரை எப்படி உடைப்பது என்று யோசித்தான். மனிதர்களை கடவுளை வைத்து எளிதாக உடைத்துவிடலாம் என்று தோன்றியது.

"தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது. எனக்கதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.

அவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஆடித்தான் போய்விட்டார். திடீரென்று வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு மவுனம் அவரைக் கவ்வியது. கடவுளை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்ட ஒரு நன்றிகெட்டவன் கையால் தொட்ட புத்தகத்தை வாங்கிவிட்டோமே என்று தோன்றியது போலிருந்தது அவர் மேற்கொண்டு அமீரைப் பார்த்த பார்வை.

திடீரென்று அவரது கண்களில் ஒரு ஒளி தோன்றியது. அவனை மடக்குவதற்கான ஆயுதம் கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. சற்று நிமிர்ந்து கொண்டார். தைரியமும் நம்பிக்கையும் வரும்போது மனிதர்களின் உடல் தானாகவே நிமிர்ந்துகொள்கிறது.

“சார், தப்பா நெனச்சுக்காதிங்க, அப்ப நீங்க ஏன் ஜே.கே.யைப் படிக்கிறீங்க?”

எங்க படிச்சேன்? படிக்க ஆரம்பிச்ச உடனேயேதான் கேள்வி கேட்டு நிறுத்திவிட்டீர்களே என்று சொல்லமுடியவில்லை. ஒரு கணம் அமீரும் யோசித்தான்.

“ஏன் ஜே.கே.யைப் படிக்கிறேன்னா கேட்டிங்க? அவர் ரொம்ப அழகா இருக்காரு. அதனாலதான்” என்றான்.

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொன்ன பதிலைவிட மோசமான பதிலாக அது இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை அவருக்கு. கண்ணாடியைக் கழற்றினார். துடைத்துக் கொண்டார். ஒரு மோசமான நீல நிறத்தில் ஒரு பேண்ட் போட்டிருந்தார். சட்டையை வெளியில் விட்டிருந்தார். அரைக்கை சட்டை. அது ரொம்பவும் அழுக்காக இருந்தது. அவர் கைகள்கூட அழுக்காகத்தான் இருந்தன. குளித்தாரா என்பது தெரியவில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவருக்குள் இருந்த கடவுளும் அழுக்காகத்தான் நிச்சயம் வியர்வையில் புழுங்கிக்கொண்டிருப்பார் என்று தோன்றியது அமீருக்கு.

“அப்ப அசிங்கமா இருந்தா ஜே.கே. படிக்க மாட்டிங்களா? கடவுள் இல்லைன்னு முடிவுக்கே வந்துட்டிங்களா சார்?”

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.  வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில் ‘சார்’ போட்டுப்போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

ஒவ்வொரு சாப்பாட்டு அய்ட்டமாக எடுத்தெடுத்து இலையில் வைப்பதைப் போல இருவரும் கடவுளைப் பற்றிய தங்களது கருத்துக்களை எடுத்தெடுத்து வைத்தனர். கடவுள் சார்பாகப் பேசியவர் பரமஹம்சர், விவேகானந்தர், முகமது நபி, வேதங்கள், கீதை, பைபிள், குர்ஆன் என்று எல்லா நூல்களிலும் ஞானிகளின் வாழ்விலிருந்தும் உதாரணங்களையும் வசனங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார்.

ஃப்ரெட்ரிக் நீட்சேயின் மறுப்புக்கும் வெறுப்புக்கும் தக்க பதில் சொல்லும் இயேசு கிறிஸ்துவைப் போல அவர் பேசிக்கொண்டே சென்றார். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பத்து நிமிஷத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துவிடும் என்று தோன்றியதால் அதோடு கடவுளை ‘கட்’ பண்ணுவது நல்லது என்று அமீர் முடிவு செய்தான். அந்த நேரத்தில்தான் அந்த உலக அதிசயம் நடந்தது.

ஒரு சின்ன பையன். ஒரு ஐந்தாறு வயதுக்குள்தான் இருக்கும். ஒரு காலியான பிஸ்லேரி பாட்டிலின் மீது ஏறி அதை இழுத்து இழுத்து சவாரி செய்துகொண்டே வந்தான். ஊனமுற்ற சின்னப்பையன். கூட யாருமில்லாமல் தனியாகத்தான் பிச்சை கேட்டுகொண்டே வந்தான். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. ஒல்லியான தனது கைகளை தூக்கிக்காட்டி “பசிக்கிது” என்று சொல்லிக்கொண்டே வந்தான். சிலர் சில்லரை போட்டனர்.  சிலர் சும்மா பார்க்காதமாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத்தேடியபோதுதான் அது நடந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தை தான் பெற்ற பிள்ளையின் முகத்தை துடைப்பதைப் போல துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒரு ‘யூஸ்-அன்-த்ரோ’ தட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

ஊட்டும்போது அவள் யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ தன் கடமையைச் செய்வது போலச் செய்தாள். ஊட்டி முடித்த பிறகு பையன் வாயை அவளே கழுவி விட்டு பின் தனது கர்சீஃபால் துடைத்து விட்டாள். அதற்குள் சென்ட்ரல் வந்துவிட்டிருந்தது. அவனை இறக்கி அந்த பிஸ்லேரி பாட்டில் வாகனத்தின் மீது மறுபடி ஏற்றிவிட்டு அவள் தன் அடிடாஸ் என்று போட்ட பையைத் தூக்கிக் கொண்டு இறங்கிப் போனாள்.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் சென்றிருந்தாள். இதுதான் சமயம் என்று அமீரும் ஜே.கே.யின் ரசிகரிடமிருந்து தப்பித்து வெளியில் வந்தான்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி  நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

காவல் தெய்வம்!!!



பூட்டி இருந்தது கோவில்.
உள்ளே இருந்தது
காவல் தெய்வம்!
                       
                       -ரா.சுப்பிரமணி


ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 08, 2011

அடி உதவுவது போல...



இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்!
வாங்கிக்கொள்....
 
வள்ளுவனிடம்.
                           
                            - அறிவுமதி

http://arivumathi.wordpress.com/ கடைசி மழைத்துளி..
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 10, 2011

பேரறிஞர் அண்ணா...




3 Idiots திரைப் படத்தில் ஒரு காட்சி. ஒரு கல்லூரி. அதன் முதல்வர், வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகையில், ஒரு சமன்பாட்டை கரும் பலகையில் எழுதுவார். எப்படி என்றால், சூத்திரத்தின் ஆரம்பத்தை இடது கையாலும், சமன் குறிக்கு பிறகு வருவதை வலது கையாலும் ஒரே நேரத்தில் எழுதுவார். கவனிக்கும் படியான இந்த நிகழ்ச்சி, அவரது மேதமையை சொல்லுவதற்காக கொஞ்சம் மிகைப் படுத்தி சினிமாத் தனத்தோடு சொல்லப் பட்டதாகவே நான் நினைத்தேன். நிஜத்தில் இது சாத்தியம் என்பதாக நான் கேள்விப் பட்டது கூட இல்லை. கவனகம்  நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். (கவனகம் / அவதானம்  - ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது. தசாவதானி பத்து வேலைகள் செய்வார். சதாவதானி நூறு வேலைகள் செய்வார்) சிறப்பான முறையில் மனதை பயிற்சி செய்தால் கவனகம் சாத்தியம். ஆனால்.. (மீதி முடிவில்)


... உண்மையிலேயே தமிழை வளர்க்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் என்னை கவர்ந்தவர், உபய வேதாந்த வேளுக்குடி வரதாச்சாரியார். இவரது புதல்வரான வேளுக்குடி கிருஷ்ணனும் தந்தைக்கு சளைக்காமல் உபன்யாசம் செய்கிறார். ஆண்டாளின் "மாலே மணிவண்ணா" என்ற பாசுரத்தில் வரும் "மாலே" என்ற ஒரு சொல்லுக்கு மட்டும், ஒன்றரை மணி நேரம் வியாக்கியானம் தருவார் வேளுக்குடி.

இவர் தனது முதல் நூலை எழுதிய பொது அவருக்கு வயது 18. அதன் பெயர், 'திவ்ய பிரபந்த வைபவம்'. சென்ற ஆண்டோடு இதை எழுதி நூறு ஆண்டுகள் முடிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த "அண்ணா" எழுதிய நூல்களின் எண்ணிக்கை 1207. (மிக அறிய பொக்கிஷமான இந்நூல்களை இப்போது நாம் எங்கே பார்க்க முடியும்?). ஒன்பது வயதிலேயே கம்ப ராமாயணத்தையும், திவ்ய பிரபந்தத்தையும் கரைத்து குடித்தவர் அண்ணா. இவருடைய இன்னொரு சிறப்பு, வலது கை, இடது கை என இரு கை களாலும் எழுதுவார். அதுவும் ஒரே நேரத்தில். வலது கையால் தமிழில் கிருஷ்ண வியாக்கியானம். இடது கையால் சமஸ்கிருதத்தில் ராம சரிதை.

ஒரு மனிதரால் இது சாத்தியமா என யோசித்துப் பாருங்கள். இது ஏதோ கட்டு கதை அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட நம்மோடு வாழ்ந்தவர். இரண்டு கைகளாலும் இரண்டு வெவ்வேறு பிரதிகளை எழுதக் கூடிய ஒருவர் இது வரை மனித சரிதத்தில் உண்டா? ஜாக்கிசானையும், மடோனாவையும் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, நம் கண் முன் வாழ்ந்த இந்த மேதையை எப்படி தெரியாமல் போயிற்று?

ஒரு பத்திரிகை என்றால் அதில் எத்தனை பேர் வேலை செய்வார்கள்? ஆனால், அண்ணா நடத்திய பத்திரிகையில் அவரே ஆசிரியர், அவரே ப்ரூப் ரீடர், அவரே டெஸ்பாட்ச் கிளார்க், அவரே அதன் எல்லா பக்கங்களிலும் எழுதுபவர். 'பத்திரிகை' என்று தவறாக சொல்லி விட்டேன். தவறு. அவர் இப்படி தன்னந்தனியாக நான்கு பத்திரிக்கைகளை 32 ஆண்டுகளாக நடத்தினார். சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் வைதீக மனோஹரா, தெலுங்கில் ராமானுஜ பத்திரிக்கா, தமிழில் ஸ்ரீ ராமானுஜன்.

தமிழர்களின் மறதி என்ற பொது வியாதியால் மறக்கடிக்கப் பட்ட இந்த 'அண்ணா'வின் முழுப் பெயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.

[இந்த அண்ணா காலமானது எப்போது என கூகிளில் தேடினேன். ஹாலிவுட் நடிகை எப்போது ஒன்பதாவது திருமணம் செய்து கொண்டார் என்ற விபரம் தேதியோடு கிடைக்கிறது. ஆனால், அண்ணா பற்றிய வாழ்கை குறிப்புகள் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் தேடி, பல்வேறு நண்பர்களிடம் விசாரித்து தெரிந்த விவரம், அண்ணா பிறந்தது 1891. காலமானது 1983.]

- சாரு நிவேதிதா / துக்ளக் 30.03.2011 இதழ்.


...ஒரு சரியான வார்த்தை கிடைக்காமல் திணறிய அனுபவம் பெரும் பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் [ஒரே ஒரு விஷயம் எழுதும் போதே..]. அப்படி இருக்கும் போது இரண்டு கைகளாலும் இரு வேறு விஷயங்கள், இரண்டு மொழிகளில்...சாத்தியமே இல்லை. சாத்தியப் படுத்தி இருக்கிறார் என்றால் அவர் சாமானியர் இல்லை. அவருக்கு வணக்கங்கள்.
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 15, 2011

கேட்டது கிடைத்தது!!!




1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்குரிய அய்யா திரு.கிருஷ்ணன் அவர்கள் "எண்பது, ஒன்பது... எண்ணூறு, தொண்ணூறு... எட்டாயிரம், தொள்ளாயிரம்... எண்பதினாயிரம், ஒன்பதினாயிரம்... இது தானே சரி. எப்படி எல்லாம் வரிசை மாறி வருகிறது?" என ஒரு கேள்வி கேட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எத்தனையோ கணித ஆசிரியர்கள் சொல்லாத பதிலை, நான் சற்றும் எதிர்பாராமல் என் தாய் தமிழ் சொன்னது. சுமார் இருபது ஆண்டு தேடல் இனிதே நிறைவடைந்தது.  [என் கணித ஆசிரியர் அய்யா கிருஷ்ணன் அவர்கள் இந்த பதிலால் மகிழ்ந்தது என் மகிழ்ச்சிக்கு மகிழ்வளித்தது] 


தமிழக அரசின் அரசவை புலவராக இருந்த திருக்குறளில் தோய்ந்த அனுபவம் உடைய பதின் கவனகர் அய்யா திரு.பெ.இராமையா அவர்களது மேடை நிகழ்வில் கேட்கப் பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் அடங்கிய புத்தகத்திலிருந்து...

......பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த பெற்றுள்ள சொல் "தொண்டு" என்பதாகும். தொண்டு என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது ஓட்டைகளை கொண்டது. 

இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழெனக் காலென பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
                                                     - பரிபாடல் 3 , வரி 75 -79


"தொண்டு" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...
                                                    - தொல்காப்பியம், 1358


"தொண்டு" படு திவவின் முண்டக நல்யாழ்.
                                                    - மலைபடு  கடாம் - 21


இந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப் பெற்றுவிட்டது. இந்த 'தொண்டு' என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாக சொல்லிப் பாருங்கள். ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும். அதாவது,

எட்டு
தொண்டு (சறுக்கிய சொல்)
பத்து.


எண்பது
தொண்பது (இது தான் இன்றைய ஒன்பது)
நூறு

எண்ணூறு
தொண்ணூறு
ஆயிரம்

எண்ணாயிரம்
தொள்ளாயிரம்
பத்தாயிரம்

எண்பதினாயிரம்
தொண்பதினாயிரம் 
இலட்சம்.

ஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ந்ததால் அதை நிரப்ப, எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது, ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்து இருந்த தொண்ணூறு என்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.

உங்களிடம் என் அன்பான வேண்டுகோள். இனிமேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களை காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலை சரி செய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.

நன்றி: கேட்டதும் கிடைத்ததும் - கவனகர் முழக்கம். 044 - 24490826  

ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 07, 2011

அன்புமயமாதல்...




குழந்தையுடன்
கோயிலுக்குச் சென்றேன்

பூக்காரப் பெண்
கூடுதல் ரோஜா கொடுத்தாள்


பிள்ளையாரை வணங்கிய பெரியவர்
பிள்ளையின் கன்னம் கிள்ளிப்போனார்


கற்பூர ஆரத்தி ஒற்றி
குங்குமம் இட்டுவிட்டார் குருக்கள்


பிறிதொருவர் பிரசாதம் அளித்து
புன்னகைத்தார்


அவ்வேளையில்
அம்மனின் மார்பிலும் சுரந்திருக்கலாம்
பிள்ளைக்கான பால்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்


நன்றி - ஆனந்த விகடன் / 12 ஜன 2011 இதழ்.
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசித்து படித்தது... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Related Posts Plugin for WordPress, Blogger...