சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

பிருந்தாவனில் வந்த கடவுள்

நான் மிகவும் மதிக்கும் பதிவர் ஒருவர் எழுதிய கதை என்னை சங்கடப்படுத்தியதால் இந்த கதையை பதிவிடுகிறேன். இது நாகூர் ரூமி அவர்கள் எழுதி, கல்கி இதழில் (04/09/2011) வெளியானது. இந்த கதையின் முடிவில் உங்கள் கண்ணோரம் நீர் பூத்தால் நீங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள்.




ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

தூரத்தில் வரும்போதே உட்கார்ந்திருந்த பலர் தங்கள் பிருஷ்டங்களை அள்ளிக்கொண்டு எழுந்தார்கள். ரயிலை நோக்கி முன்னேறினார்கள். அமீர் உட்கார்ந்திருக்கவில்லை. நின்றுகொண்டுதானிருந்தான். உட்காருவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அவனால் உட்காரமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.

ஆங்காங்கு ‘சிமெண்ட் பென்ச்’கள் இருந்தன என்றாலும் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் அப்படி ஏதும் இல்லை. ஆனால் மேல் கூரையிலிருந்து இறங்கிய இரும்புத் தூண்களைச் சுற்றி திண்ணை மாதிரி அறுகோணவடிவில் சிமென்டில் கட்டியிருந்தார்கள். அதன்மீது மக்களும் தங்கள் லக்கேஜுகளையும் வைத்து அவர்களும் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களைப் போல அவனும் செய்ய முயன்றபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. அதாவது சூரியன் என்பது வானத்தில் இருப்பது மட்டுமல்ல, ரயில்வே நிலையங்களின் அறுகோணவடிவ சிமென்ட் தரையின் கீழும் இருப்பதுதான் என்பதுதான். மாலையைக் கடந்து அன்றைய நாள் இரவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோதும் காற்றில் கலந்திருந்த வெம்மையில் ஏற்கனவே தலைபூரா உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தது. இதில் அந்த தரையில் உட்கார்ந்து தன் பின்பக்கத்தையும் வெந்துபோகவிடுவதில் விருப்பமில்லாமல்தான் அவன் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால் எந்த உணர்வும் அற்றவர்களைப்போல பெண்களும் அந்த அறுகோணத் திண்ணையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததுதான் அவனை ஆச்சரியப்படுத்தியது. பெண்கள் மென்மையானவர்கள் என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. நிச்சயமாக ‘அதை’ வைத்துமட்டும் இருக்காது என்பது புரிந்தது. 

வழக்கம்போல அந்த பிச்சைக்காரன் “தம்பி, தம்பி” என்று சொல்லிக் கொண்டு ஊனமான ஒரு கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு வந்து காசுகேட்டான். கிட்டத்தட்ட இருபது வருஷமாக அவனைப் பார்க்கிறான் அமீர். எந்த மாற்றமும் இல்லை. அவனுடைய கையைப் போலவே அவனுடைய வாழ்க்கையும் ஒரு இன்ச்கூட வளரவில்லை.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அமீருக்கு ரொம்ப கோபம் வந்தது. அவனை அப்படியே ரயில் வரும்போது உதைத்து சாகடித்தால் என்ன என்று தோன்றியது அமீருக்கு. சோம்பேறி நாய். பிச்சையெடுப்பதில் சுகம் கண்டுவிட்டது. சும்மா பேண்ட் ஷர்ட் போட்டிருந்தால் ‘அண்ணே’, ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தால் ‘தம்பி’. கையாலேயே அவனுக்கு இல்லை என்று சொல்லி வழக்கம்போல விரட்டினான். அப்போதுதான் ரயில் வந்து சேர்ந்தது.   

ஏற்கனவே நினைவுப் பெட்டியில் போட்டுவைத்திருந்த அனுபவங்களிலிருந்து ஒன்றை உருவிப் பார்த்துவிட்டு, இந்த இடத்தில்தான் எஸ்.சிக்ஸ் கோச் வந்து நிற்கும் என்று அனுமானித்தவனாக ஒரு இடத்தில் போய் நின்றான் அமீர். அந்த இடத்தில் சரியாக எஸ்.ஒன் கோச் வந்து நின்றதும் தண்டவாளங்கள் அவனைப் பார்த்து நகைத்து ஒலியெழுப்பின.

அதை உதாசீனப் படுத்தியவனாக தன் செவ்வக வடிவ ‘பேக்’கை தூக்கிக்கொண்டு ஓடினான் எஸ்.சிக்ஸை நோக்கி. தோள் பை இடது தோளிலேயே எப்போதும் இருந்ததால் அதைத் தனியாக தூக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. பெட்டிக்கு உள்ளே போனதும்தான் மூச்சே வந்தது. இனி அடுத்த வேலை எழுபத்தி இரண்டாம் எண்ணுள்ள இருக்கையைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதுதான். அப்பாடா என்றது மனது. முன்பொருமுறை – இல்லையில்லை பலமுறை – ‘ரிசர்வ்’ செய்யாமல் போய் பட்ட கஷ்டம் ஞாபகம் வந்தது.

ரயில் கிளம்பிவிட்டது. அவனைப் போலவே பல பயணிகள் இடம் கண்டுபிடிக்கும் வேட்டையில் மும்முரமாக இருந்தார்கள். ஒருவழியாக அவன் கண்டுபிடித்தபோது அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது.

மகாவீரர்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவனாக தனது டிக்கெட்டைக் காட்டினான். நல்ல வேளையாக அதற்கு மேல் எதுவும் பிரச்சனை ஏற்படவில்லை. எதிரில் உட்கார்ந்திருந்த அவளது குடும்பத்தினர் ஏதோ சொல்ல அவள் உடனே எழுந்து அங்கு சென்றுவிட்டாள். அங்கு போய் உட்கார்ந்ததும் சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.

வழக்கம்போல தன் ‘பேக்’கை காலுக்குக் கீழே கால் படும்படியாக வைத்துக்கொண்டு தோள்பையை தொடையின் மீது போட்டுக்கொண்டு அமர்ந்தான். வியர்த்து விட்டிருந்தது. பின்பக்க பாக்கெட்டில் இருந்த சென்ட் தடவிய கர்சீஃபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். வியர்வையைத் துடைக்கும்போது ஒருவித குளிர்ச்சியை கழுத்து உணர்ந்தது. அது இன்பமான உண்மையான குளிர்ச்சி அல்ல. ப்ளாஸ்டிக் பூக்களிலிருந்து வாசம் வருவது மாதிரி.

சுற்றிமுற்றிப் பார்த்தான். தன் பக்கத்தில் ஒருவரும் அவர் பக்கத்தில் ஒரு பெண்ணும். எதிரில் ஒரு அம்மா ஒரு குழந்தையுடன். அவள் பக்கத்தில் ஒருத்தர். ஒரு இடம் காலியாகத்தான் இருந்தது. அந்த மார்வாடி அம்மா ஏன் அந்த இடத்தில் உட்காராமல் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தாள் என்று பதிலில்லாத ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டான்.

அந்த அம்மாவை மீண்டும் பார்த்தான். அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி  தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடி இந்த உலகத்தைப் பார்க்காமல் இருப்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷயம் என்று தோன்றியது. ஆனால் அதை இந்த உலகம் பார்க்காமல் இருக்கும்போதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல அவன் கண்ணை மூடிய அந்தக் கணமே யாரோ அவன் தொடையில் இடித்துப் புரியவைத்தார்கள். தன் பக்கத்து சீட்டில் இருந்தவர்தான். ஏதோ அவசரம் போல. எழுந்து சென்றவர் போகும் அவசரத்தில் அவனைக் கலைத்து விட்டுச் சென்றிருக்கிறார். மறுபடியும் நிம்மதியாகக் கண்களை மூடவேண்டுமெனில் அவர் திரும்பி வராமல் இருக்க வேண்டும்.

அது சொல்ல முடியாது. அப்படியே வராவிட்டாலும் ஓரத்தில் அவன் உட்கார்ந்திருந்ததால் காஃபி டீ போன்ற போகின்ற வருகின்ற எல்லாருமே அவனை இடித்துக்கொண்டு போகின்ற வாய்ப்பு உண்டு என்பதால் கண்களை மூடுவதை ஒத்திப்போட்டான். இருக்கவே இருக்கிறார் ஜே.கிருஷ்னமூர்த்தி என்று தோள்பையைத் திறந்து  “தெரிந்ததிலிருந்து விடுதலை” என்ற சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவருடைய புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

அழகான அட்டை. கரும் பச்சையில் கீழ்ப்பகுதி. லைட்டான பச்சையில் மேல் பகுதி. கீழே கட்டம் கட்டி ஜே.கே.யின் படம். பக்கவாட்டில். அவரைப் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. ஜாதி மதங்கள் போன்ற எல்லாம் அடையாளங்களையும் மீறிய முகங்கள் அவை. உண்மையின் அழகு மட்டுமே அதில் தெரிகிறது. தனக்குள் புன்னகைத்தபடி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

“சார், இது என்ன புக் பாக்கலாமா?”.

கேள்வி கேட்டவர் எதிரில் இருந்தவர்தான். இப்போதுதான் புத்தகத்தையே திறந்திருந்தான். அதற்குள் என்ன உபத்திரவம் இது என்று தலையைத் தூக்கினான். ஒன்றும் சொல்லாமல் புத்தகத்தை அவரிடம் கொடுத்தான். அவர் அதன் தலைப்பை ஒரு நோட்டம் விட்டவுடனேயே “அடடே, Freedom from the Known அருமையான புத்தகமாயிற்றே. சார் நான் ஜே.கே.யோட ரசிகன் சார். அவரோட முப்பது புஸ்தகம் இதுவரைக்கும் படிச்சிருக்கேன் சார். கேஸட்ஸ்கூட கேட்டிருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும் சார். நீங்க ஜே.கே. விரும்பி படிப்பிங்களா சார்?”

படபடவென பேசிவிட்டார். மனிதர்களின் அறிவுத்தாகம் அவன் மண்டையைக் காய வைத்தது. என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான். “நானும் படிச்சிருக்கேன்” என்றான் பட்டும்படாமல்.

அவர் விடுவதாக இல்லை. ‘’பார்த்திங்களா சார், இதுதான் தெய்வத்தோட அருள்ங்கறது. எப்படி நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோம் பாத்திங்களா?” என்றார்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவரை எப்படி உடைப்பது என்று யோசித்தான். மனிதர்களை கடவுளை வைத்து எளிதாக உடைத்துவிடலாம் என்று தோன்றியது.

"தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது. எனக்கதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.

அவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஆடித்தான் போய்விட்டார். திடீரென்று வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு மவுனம் அவரைக் கவ்வியது. கடவுளை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்ட ஒரு நன்றிகெட்டவன் கையால் தொட்ட புத்தகத்தை வாங்கிவிட்டோமே என்று தோன்றியது போலிருந்தது அவர் மேற்கொண்டு அமீரைப் பார்த்த பார்வை.

திடீரென்று அவரது கண்களில் ஒரு ஒளி தோன்றியது. அவனை மடக்குவதற்கான ஆயுதம் கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. சற்று நிமிர்ந்து கொண்டார். தைரியமும் நம்பிக்கையும் வரும்போது மனிதர்களின் உடல் தானாகவே நிமிர்ந்துகொள்கிறது.

“சார், தப்பா நெனச்சுக்காதிங்க, அப்ப நீங்க ஏன் ஜே.கே.யைப் படிக்கிறீங்க?”

எங்க படிச்சேன்? படிக்க ஆரம்பிச்ச உடனேயேதான் கேள்வி கேட்டு நிறுத்திவிட்டீர்களே என்று சொல்லமுடியவில்லை. ஒரு கணம் அமீரும் யோசித்தான்.

“ஏன் ஜே.கே.யைப் படிக்கிறேன்னா கேட்டிங்க? அவர் ரொம்ப அழகா இருக்காரு. அதனாலதான்” என்றான்.

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொன்ன பதிலைவிட மோசமான பதிலாக அது இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை அவருக்கு. கண்ணாடியைக் கழற்றினார். துடைத்துக் கொண்டார். ஒரு மோசமான நீல நிறத்தில் ஒரு பேண்ட் போட்டிருந்தார். சட்டையை வெளியில் விட்டிருந்தார். அரைக்கை சட்டை. அது ரொம்பவும் அழுக்காக இருந்தது. அவர் கைகள்கூட அழுக்காகத்தான் இருந்தன. குளித்தாரா என்பது தெரியவில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவருக்குள் இருந்த கடவுளும் அழுக்காகத்தான் நிச்சயம் வியர்வையில் புழுங்கிக்கொண்டிருப்பார் என்று தோன்றியது அமீருக்கு.

“அப்ப அசிங்கமா இருந்தா ஜே.கே. படிக்க மாட்டிங்களா? கடவுள் இல்லைன்னு முடிவுக்கே வந்துட்டிங்களா சார்?”

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.  வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில் ‘சார்’ போட்டுப்போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

ஒவ்வொரு சாப்பாட்டு அய்ட்டமாக எடுத்தெடுத்து இலையில் வைப்பதைப் போல இருவரும் கடவுளைப் பற்றிய தங்களது கருத்துக்களை எடுத்தெடுத்து வைத்தனர். கடவுள் சார்பாகப் பேசியவர் பரமஹம்சர், விவேகானந்தர், முகமது நபி, வேதங்கள், கீதை, பைபிள், குர்ஆன் என்று எல்லா நூல்களிலும் ஞானிகளின் வாழ்விலிருந்தும் உதாரணங்களையும் வசனங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார்.

ஃப்ரெட்ரிக் நீட்சேயின் மறுப்புக்கும் வெறுப்புக்கும் தக்க பதில் சொல்லும் இயேசு கிறிஸ்துவைப் போல அவர் பேசிக்கொண்டே சென்றார். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பத்து நிமிஷத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துவிடும் என்று தோன்றியதால் அதோடு கடவுளை ‘கட்’ பண்ணுவது நல்லது என்று அமீர் முடிவு செய்தான். அந்த நேரத்தில்தான் அந்த உலக அதிசயம் நடந்தது.

ஒரு சின்ன பையன். ஒரு ஐந்தாறு வயதுக்குள்தான் இருக்கும். ஒரு காலியான பிஸ்லேரி பாட்டிலின் மீது ஏறி அதை இழுத்து இழுத்து சவாரி செய்துகொண்டே வந்தான். ஊனமுற்ற சின்னப்பையன். கூட யாருமில்லாமல் தனியாகத்தான் பிச்சை கேட்டுகொண்டே வந்தான். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. ஒல்லியான தனது கைகளை தூக்கிக்காட்டி “பசிக்கிது” என்று சொல்லிக்கொண்டே வந்தான். சிலர் சில்லரை போட்டனர்.  சிலர் சும்மா பார்க்காதமாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத்தேடியபோதுதான் அது நடந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தை தான் பெற்ற பிள்ளையின் முகத்தை துடைப்பதைப் போல துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒரு ‘யூஸ்-அன்-த்ரோ’ தட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

ஊட்டும்போது அவள் யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ தன் கடமையைச் செய்வது போலச் செய்தாள். ஊட்டி முடித்த பிறகு பையன் வாயை அவளே கழுவி விட்டு பின் தனது கர்சீஃபால் துடைத்து விட்டாள். அதற்குள் சென்ட்ரல் வந்துவிட்டிருந்தது. அவனை இறக்கி அந்த பிஸ்லேரி பாட்டில் வாகனத்தின் மீது மறுபடி ஏற்றிவிட்டு அவள் தன் அடிடாஸ் என்று போட்ட பையைத் தூக்கிக் கொண்டு இறங்கிப் போனாள்.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் சென்றிருந்தாள். இதுதான் சமயம் என்று அமீரும் ஜே.கே.யின் ரசிகரிடமிருந்து தப்பித்து வெளியில் வந்தான்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி  நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 30, 2011

மகிழ்ச்சி...



மாலை வேளை. வானம் நீர் தூவிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய சுப்பிரமணி உற்சாகமாக காணப்பட்டார். தலை துவட்ட துண்டு கொடுத்து விட்டு காபி போடப் போன மனைவி காயத்ரியிடம் கையோடு வாங்கி வந்திருந்த குலாப் ஜாமூனையும், பூவையும் கொடுத்தார்.

"என்னங்க விசேஷம்? மாசக் கடைசியில இனிப்பெல்லாம் தடபுடலா இருக்கு!" ஆவலுடன் கேட்டாள் காயத்ரி.

"ரொம்ப நாளா வர வேண்டி இருந்த அரியர்ஸ் பணம் இன்னிக்கு வந்துது. அதான்" என்றார்.

"எவ்வளவுங்க!"

"லட்சத்துக்கு நாலாயிரம் கம்மி"

"ஏங்க! தமிழ்நாடு பூரா கிளை வச்சிருக்க அந்த பெரிய நகை கடை நம்ம ஊர்லயும் கடை திறந்திருக்காங்களாம். நல்ல பெரிய கடையாம். மூணு மாடி. தங்கம், வெள்ளி, வைரம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாடியில. நெறைய டிசைன் இருக்காம். செல்வராணி சொன்னாங்க. நானும் என்னோட இந்த சங்கிலிய மாத்தணும்னு எவ்ளோ நாளா நெனச்சிக்கிட்டிருக்கேன். நகை கடைக்கு போகலாமாங்க?" காபியை கொடுத்துக் கொண்டே கேட்டாள் காயத்ரி.

"இந்த சங்கிலிக்கு என்ன, நல்லாத் தானே இருக்கு?"

"இல்லைங்க, இது பத்து வருஷத்துக்கு முன்ன நம்ம கல்யாணத்துக்கு அப்பா அம்மா செஞ்சு போட்டது. இப்போ இத விட அழகா நெறைய டிசைன் வந்துடுச்சி. வைரம் மாதிரியே ஜொலிக்கிற ஜிர்க்கான் கல்லு வச்சு, மரகதம், மாணிக்கம், கெம்பு எல்லாம் வச்சு, ரோடியம் பாலிஷ் போட்டு, பாம்பே கட்டிங், கேரளா மாடல் அப்படின்னு என்னென்னவோ வந்துருக்குங்க. வாங்க போயி பாத்துட்டு வருவோம்" ஆர்வமாக இருந்தாள் காயத்ரி.

நகை கடைக்காரன் ரேஞ்சுக்கு பேசறாளே! என நினைத்துக் கொண்டே, "தங்கம் இப்போ விக்கற வெலையில வாங்கித் தான் ஆகணுமா?" எனக் கேட்டார்.

"என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கறப்ப, கிராம் நானூறு ரூபாய்க்கு வாங்கினோம். இப்போ பாருங்க ஒரு கிராம் ரெண்டாயிரத்து ஏழு நூறு ரூபாவுக்கு விக்குது. தெனமும் ஏறிகிட்டே தான் இருக்கு. ஆனாலும் மக்கள் வாங்கி கிட்டே தான் இருக்காங்க. இப்போ கிரீஸ், அமெரிக்கா, இத்தாலி இங்கல்லாம் பொருளாதார நெருக்கடி இருக்கறதால தங்கம் இன்னும் விலை ஏற்றத்துக்கு தான் வாய்ப்பிருக்கறதா சொல்றாங்க."

நல்ல தெளிவா இருக்கா. ஒன்னும் பேச முடியாது என நினைத்துக் கொண்டே, "சரி போகலாம். நீ சொன்னா சரியாத் தான் இருக்கும்" என்றார்.

"சமத்து" என கணவன் முதுகில் செல்லமாய் தட்டி விட்டு நகை கடைக்கு கிளம்ப ஆயத்தமானாள். வானம் வெளுத்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் நகை கடையில் இருந்தனர்.

ஊழியர்களின் முக மலர்ச்சியும், ஏசியின் குளிர்ச்சியும் கூடவே மஞ்சள் வெளிச்சத்தில் தங்கம் தக தக வென மின்ன தேவ லோகத்தில் இருப்பதாக உணர்ந்தார் சுப்பிரமணி. "இவ்வளவு தங்கம் இந்தியாவுல இருந்துமா நாம வளரும் நாடு?" என ஆச்சரியப் படுமளவிற்கு தங்கத்தை குவித்து வைத்திருந்தார்கள்.

இரண்டு மணி நேரம், இருக்கும் எல்லா நகைகளையும் பார்த்து விட்டு முடிவாக ஒரு சங்கிலியை காயத்ரி தேர்ந்தெடுக்க, பழைய நகையை கொடுத்து கணக்கு போடும் போது, அதன் தரம் குறைவு என கடைக்காரர் அதன் மதிப்பை குறைக்க, கணக்கு சீட்டை வாங்கி பார்த்தார் சுப்பிரமணி. சீனுவாச ராமனுஜம் வந்தால் கூட கணக்கு புரியுமா என்பது சந்தேகம் தான். விளக்கம் கேட்ட போது எப்படி எப்படியெல்லாமோ விளக்கினார்கள், கடைசி வரை புரியவில்லை. வேறு வழி இல்லாமல் இருந்த பணத்தை கொடுத்து விட்டு, குறைந்த பணத்தை நண்பன் பாலுவை கடைக்கு கொண்டு வந்து தர சொல்லி (கடன் தான்) கொடுத்தார் சுப்பிரமணி.

இரண்டு லட்சத்துக்கு மேல விழுங்கிய அந்த சங்கிலி ஏனோ சுப்பிரமணிக்கு நிறைவை தரவில்லை. "இதுக்கா ரெண்டு லட்சம்!?" என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்கி இருந்தது.

வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். நகையை அழகிய பெட்டியில் வைத்துக் கொடுத்தார்கள். கூடவே சாப்பாட்டை சூடாக வைத்திருக்கும் ஹாட் பேக்கை பரிசாக கொடுத்தார்கள். உடனே காயத்ரி உச்சி குளிர்ந்து போனாள். "நாம வழக்கமா வாங்கற கடையில பர்ஸுக்கு மேல எதுவும் தர மாட்டாங்க. ரொம்ப கேட்டா கொஞ்சம் பெரிய பர்ஸா தருவாங்க. ஆனா இங்க நாம கேக்காமயே ஹாட் பெக்கேல்லாம் தராங்க!" சிலாகித்து பேசினாள் காயத்ரி.

நகை கடையிலேயே பார்த்த பாலு, அங்கிருந்து ஹோட்டலுக்கு போன போது அங்கே சந்தித்த இருவர், வேலை செய்யும் இடத்தில் குறைந்தது பத்து பேர், போன் பேசும் போது சிலரிடம் என பார்க்கும் எல்லோரிடத்தும் ஹாட் பேக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

முன்னுறை முக்கியம்




வணக்கங்க, எம் பேரு ராமகிருஷ்ணன். ITI வரைக்கும் படிச்சிருக்கேன். பக்கத்து ஊர் சக்கரை ஆலையில மெஷின் ஆப்பரேட்டரா வேலை செய்யறேன். எம் பொண்டாட்டி செங்கமலம், பெரிய பொண்ணு எட்டாவது படிக்கிறா. சின்னவ ஆறாவது. பூர்வீக சொத்துன்னு எதுவுமில்லைன்னாலும், சம்பாதிச்ச பணத்தில ஒரு வீடு, கொஞ்சம் நிலம், ஒரு வண்டின்னு வசதியாத்தாங்க போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை.

ராமகிருஷ்ணனுக்கு நல்ல மனசுங்க. யாருக்கு கஷ்டம்னாலும் ஓடி வந்து உதவி செய்வான். கஷ்டம்னு கேட்டா காசு குடுப்பான். பொறந்த நாள், தீபாவளி மாதிரி நல்ல நாள்ல அனாத புள்ளைங்களுக்கு சோறு போடுவான். கேசவன் பசங்களுக்கு கூட ஸ்கூல் பீஸ் இவன் தான் கட்டினான். கஷ்டப் பட்டு வளந்தவன் இல்லையா, அதனால மத்தவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு நெனைப்பான். அவன் பிரச்சினையே அது தான். நானா, நான் துளசிங்கம். ராமகிருஷ்ணன் கூட வேலை செய்யறேன்.

ஒருநாள் ஆலையில வேலை செஞ்சுகிட்டிருக்கும் போது துளசிங்கத்துக்கு அடி பட்டுடுச்சு. அடி கொஞ்சம் பலம் தான். ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போனோம். ரத்தம் ஏத்தணும்ன்னாங்க. நான் தான் குடுத்தேன். ரெண்டு நாள் கழிச்சு ஆஸ்பத்திரியிலிருந்து எனக்கு போன் பண்ணாங்க. ICTC ங்கற எடத்துக்கு வர சொன்னாங்க. என்னன்னு தெரியலயே, துளசிங்கத்துக்கு இப்போ பரவயில்லையேன்னு யோசனையோடவே போனேங்க."முன்னுறை இல்லன்னா முடிவுரை எயிட்ஸ்" அப்படின்னு சுவத்துல எழுதி இருந்ததுங்க. கூட்டம் அவ்வளவா இல்லை. டாக்டரை போயி பாத்தேங்க. அவர் சொன்னது தான் என் தலையில இடி விழுந்த மாதிரி ஆகிருச்சு. ஆமாங்க. எனக்கு எயிட்ஸ் இருக்குன்னார். செத்துடலாமான்னு ஒரு நிமிஷம் தோணிச்சு. டாக்டர், குடும்பத்தை ஞாபகப் படுத்தி, இதுவும் சாதாரணமான வியாதி தான். ஒழுங்கா மருந்து சாப்பிட்டா, கூட பத்து வருஷம் இருக்கலாம்னு தைரியம் குடுத்தார். என் குடும்பத்துக்கு என்னை விட்டா யாருங்க இருக்கா. நான் தானே அவங்கள பாத்துக்கணும்.

லாரி டிரைவர் சரவணன், ஒரு நா ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டான். அவன் பொண்டாட்டி சரசு, பொறந்த ஊருல ஆதரிக்க ஆள் இல்லாததால இங்கயே இருந்துட்டா. புள்ள குட்டி எதுவுமில்ல. பாவம், தனியா தான் கஷ்டப்பட்டா. வயல் வேலைக்கு போயி வயித்த கழுவிகிட்டிருந்தா. நம்ம ராமகிருஷ்ணனுக்கு தான் யாரு கஷ்டப் பட்டாலும் ஆவாதே, அதனால அவளுக்கு அப்பப்போ பணம் காசு குடுப்பான். அவன் அதோட நிறுத்தி இருக்கலாம். தயாள குணம் ரொம்ப அதிகமாகி ராமனா இருந்தவன், கிருஷ்ணனாயிட்டான். அவ மூலமா தான் இந்த வியாதி இவனுக்கு வந்துருக்கு. அவ மட்டும் என்ன பண்ணுவா பாவம். சரவணன் லாரிய எங்க பார்க் பண்ணானோ!

டாக்டர் கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவர் சரசுவ கூட்டிகிட்டு வர சொன்னார். அவளையும் பரிசோதிச்சு பாத்துட்டு அவளுக்கும் எயிட்ஸ் இருக்குன்னார். சரசு மூச்சு முட்ட அழுதா. என்னால தானே உனக்கு வந்தது. நான் உன் வாழ்கையை பாழாக்கிட்டேனேன்னு கதறி அழுதா. நம்மால வேற என்னங்க செய்ய முடியும். டாக்டர் அடுத்து சொன்ன விஷயம் கொஞ்சம் பயங்கரமா இருந்தது. செங்கமலத்தையும் கூட்டிகிட்டு வர சொன்னார். செங்கமலத்துக்கு சரசு விஷயம் தெரியாது. ஆனாலும், அவளாவது நல்லா இருக்கணுமே அப்படின்ற நப்பாசையில, எங்கே போறோம்னு எதுவுமே சொல்லாம அவளையும் கூட்டிகிட்டு டாக்ட்டர்ட்ட போனேன். அவளுக்கும் எயிட்ஸ் இருக்குனு டாக்டர் சொல்லிட்டார். சத்தியமா சொல்றேன். சாமியெல்லாம் இல்லீங்க. இருந்தா இப்படி நடக்குமா? ஒரு வாரத்துக்கு அவ யார் கூடவும் பேசலைங்க. என்னால அவ மொகத்த கூட பாக்க முடியல. ஒரு வாரம் கழிச்சு என் கிட்ட சொன்னா, "அவ ஏன் அங்க தனியா கஷ்டப் படணும். அவளையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுங்க". ச்ச! எப்பேர்பட்ட பொண்டாட்டி. இவளுக்கு போய் நான் துரோகம் செஞ்சேனே. இன்னும் ஏழு ஜென்மத்துக்கு எனக்கு நல்ல சாவே வராதுங்க.

சாதாரண ஜுரம் வந்தாலே சரியாக ஒரு மாசம் ஆகும். நிக்காம வயத்தால போகும். ஒரு சின்ன விஷயம்னாலும் உடம்பு தாங்காது. அடிக்கடி ஆஸ்பத்திரி போயி வருவாங்க. இதனால இவங்களுக்கு இந்த வியாதி இருக்கறது அரசால் புரசலா ஊருக்கு தெரிஞ்சு போச்சு. அண்ணே அண்ணேன்னு சுத்தி வந்தவன் எல்லாம் தூர போயிட்டான். அடிக்கடி லீவு போட்டதால வேலை போச்சு. உடம்புல பழைய தெம்பு இல்லாததால, தொடர்ச்சியா எந்த வேலைக்கும் போக முடியல. நிலத்தை வித்து, வண்டியை வித்து சாப்பிட்டாங்க. என்னால முடிஞ்சத அப்பப்போ குடுப்பேன். அதெல்லாம் பத்தாம கஜேந்திரன் கிட்ட கடன் வாங்கினான். கஜேந்திரனா? அவர் ராமகிருஷ்ணனுக்கு பக்கத்து வீட்டுக்காரர். வட்டிக்கு பணம் குடுக்கறவர். வீட்டு பத்திரத்தை வச்சு அப்படி, இப்படின்னு ரெண்டு வருஷத்துல லட்ச ரூபாய்க்கு மேல வாங்கிட்டான். கஜேந்திரனுக்கு பயம் வந்திருக்கும் போல. பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா தங்க இடம் வேணும்னு சொல்லி, இவன் வீட்டை எழுதி வாங்கிட்டார். தர வேண்டிய மீதி காசுக்கு ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்க ஒண்ணுக்கும் உதவாத ஆறு ஏக்கர் நிலத்த இவன் பேருக்கு கிரயம் பண்ணி குடுத்துட்டார்.

நாம யார என்னங்க சொல்ல முடியும்? எல்லாம் விதி. பேசவே பயந்த கிராமத்துல குடியிருக்க வீடு தருவாங்களா? அதான் இங்க பக்கத்து டவுனுக்கு, துளசிங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்துகிட்டு வந்துட்டோம். இங்க நம்ம கதை யாருக்கும் தெரியாதுங்கறதால பிரச்சினை எதுவுமில்லாம நல்லபடியா போயிகிட்டிருக்குது. நான் இப்போ பழ வியாபாரம் செய்யறேன். செங்கமலமும், சரசுவும் வீட்டு வேலை செய்யறாங்க. பசங்க இங்கயே ஸ்கூல்ல படிக்கிறாங்க. பணம் பத்தலன்னா துளசிங்கம் தான் தந்துகிட்டிருக்கான். நாம நல்லா(!) இருந்தா தான் கடவுளுக்கு புடிக்காதே! அங்க கிராமத்துல புதுசா பை-பாஸ் ரோடு வருதாம். நம்ம நிலத்து மேல தான் அது வருதுன்னாங்க. இன்னும் எவ்வளோ கஷ்டப்பட வேண்டி இருக்கோ தெரியலையே. ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா, அடுத்த நாளே செத்துடலாம். ஆனா எப்படி? அந்த நிலம் தான் இருக்கற ஒரே சொத்து, நம்பிக்கை.

ஆனா பாருங்க, ஆறு மாசத்துல சட சடன்னு ரோடு வேலை முடிஞ்சது. ரோடு நிலத்து மேல போகாம நிலத்த ஒட்டி போச்சு. இங்க டவுன்லருந்து மூணு கிலோமீட்டர் ஆச்சா, நல்ல இடம். இத பத்தி என் பிரண்டு கணேசன் கிட்ட சொன்னேன். அவர் ஆடலரசன் ரியல் எஸ்டேட்ல வேலை செய்யறார். அவர் விசாரிச்சுட்டு வந்து "ஏக்கருக்கு ஒரு கோடி வரைக்கும் குடுக்கலாம்" ன்னு சொன்னார்.

அப்புறமென்ன, ஒரு மாசத்துல நிலத்த வித்து பணத்த வாங்கி, சொந்தமா எனக்கும் துளசிக்கும் சேத்து பெரிசா ஒரு வீடு வாங்கி, மீதி பணத்த பேங்க்ல போட்டு, வர்ற வட்டியில சாப்டுகிட்டிருக்கோம். துளசி தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம அதே சக்கர ஆல வேலைக்கே போய்க்கிட்டிருக்கான். வைத்தியமெல்லாம் ஒழுங்கா நடக்குது. புள்ளைங்க நல்ல ஸ்கூல்ல நல்ல படியா படிக்கிறாங்க. மவராசன் மாதிரி மாப்பிள்ளைங்களை எங்க புள்ளைங்களுக்கு கட்டி வைப்போம்ங்கற நம்பிக்கை இருக்கு. நான் இன்னைக்கே செத்துட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல. சத்தியமா சொல்றேன்,  சாமி இருக்குங்க.


சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 03, 2011

எருமையின் எமன்




கதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள் யாவும் உண்மையே.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கோடம்பாக்கம் ஆற்காட் ரோட்டின் போக்குவரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த போது, கைப்பேசி அழைத்தது. சாலையில் வண்டி ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்ற நல்ல விஷயத்தை நான் கடைபிடிக்க முயற்சி செய்வதால், யார் கூப்பிட்டது என்பதை கவனிக்கவில்லை. (கலெக்டரா கூப்பிட்டிருக்கப் போறார்? நம் உயிரை / நல்ல உடலை விடவும் கலெக்டரா முக்கியம்?) வீட்டுக்கு வந்த பின் “யாரோ அழைத்தது குயிலா…” பாடிக்கொண்டே பார்த்தேன். பிரகாஷ் ஆனந்த் கூப்பிட்டிருந்தான்.

பிரகாஷ் ஆனந்த் - தினமும் விழுப்புரத்தில் இருந்து சிங்கார சென்னைக்கு (சிங்காரம் தானே உலக பணக்காரரா இருக்கணும்!) வேலைக்கு வந்து போகும் எனது நண்பன். வார விடுமுறைக்கு நானும் ஊருக்கு போவேன் என்பதால் கூப்பிட்டிருப்பான் என யோசித்துக் கொண்டே அவனை கைப்பேசியில் அழைத்தேன். “ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ல போறேன். வர்றியா?” என்றான். “முயற்சி பண்றேன். முடியலன்னா பாண்டிச்சேரில வர்றேன்” என கூறி வைத்தேன்.

முகம் கழுவி, (துவைக்க வேண்டிய) துணிகளை எடுத்துக் கொண்டு, நண்பன் வெங்கடேசன் உதவியுடன் ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து, கோடம்பாக்கம் மின்வண்டி நிலையத்தில் இறங்கி, விழுப்புரம் வரைக்குமான பயணச்சீட்டு அங்கேயே எடுத்துக் கொண்டு, தாம்பரம் வந்து சேர்ந்த போது மணி மாலை 5.45. ஒன்பதாம் நடைமேடையில் 6.05 க்கு கிளம்ப வேண்டிய விழுப்புரம் பாஸஞ்சர் நின்று கொண்டிருந்தது.

அஞ்சு நிமிஷம் முன்ன வந்திருந்தா ராமேஸ்வரத்த பிடிச்சிருக்கலாம், நினைத்துக் கொண்டே எனது வண்டிக்காக காத்திருந்தேன். அதே தேநீர் வியாபாரி, அதே பார்வை இழந்த பிச்சைக்காரர், அதே காலை சுற்றும் நாய், இதனிடையே அருகிருந்த எல்லோரிடமும் ஓடி சென்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காத்திருத்தலின் அவஸ்த்தையை காணாமல் போகச் செய்திருந்தான். (குழந்தையின் அம்மா, வழியனுப்ப வந்த தனது தகப்பனிடம் பேசிக் கொண்டிருந்தாள்). ஆறு மணிக்கு எட்டாவது நடைமேடைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.

குழந்தையை கவனித்துக் கொண்டே இருந்ததில் கவனிக்க தவறி, சட்டென கவனித்தேன். மணி 6.12. கன்னியாகுமரியும், விழுப்புரம் பாஸஞ்சரும் இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆறு மணிக்கே கன்னியாகுமரி கிளம்பி இருக்கணுமே!, ஏன் இன்னும் கிளம்பல? என்ற சிந்தனையுடன் காதை தீட்டிக் கொண்டு அறிவிப்பை கவனித்தேன். நேரம் குறிப்பிடாமல் தாமதமாக கிளம்பும் என்று மட்டும் சொன்னார்கள். என்ன ஆச்சு என தெரிந்து கொள்ள பிரகாஷ் ஆனந்த்க்கு போன் செய்தேன்.

“பெருங்களத்தூர் கிட்ட டிராக்ல எருமை மாடு வந்து அடிச்சு, ராமேஸ்வரம் எஞ்சினோட பிரேக் வால்வு உடஞ்சு போச்சு. அதான் எல்லா வண்டியும் நிக்குது” என்றான். “ஸ்பேர் எஞ்சின் தாம்பரத்துல இருக்குமாடா” என்றேன். “இல்லைடா, எக்மோர்ல இருந்து வரணும். இல்லன்னா விழுப்புரத்துல இருந்து வரணும்” என்றான்.

கன்னியாகுமரி, அடுத்தது விழுப்புரம் பாஸஞ்சர், அப்புறம் நிஜாமுதீன், அதுக்கப்புறம் தான் பாண்டிச்சேரி. என்னடா இது, எப்போ போய் சேருவோம்னே தெரியலயே, பஸ்ல போலாம்னாலும் இன்னைக்கு நிக்க கூட இடம் கிடைக்காது. மறுநாள் இரத்த தான முகாம் நடத்த வேண்டி இருந்ததால திரும்பியும் போக முடியாது. வேற வழியே இல்லை என காத்திருக்க முடிவு செய்தேன். இந்த களேபரங்களுக்கு நடுவில் என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்த அந்த குழந்தையை தொலைத்து விட்டிருந்தேன்.

நடைமேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது. காற்று வீசவே இல்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் இருந்தோம். அந்த தேநீர் வியாபாரியும், பார்வை இழந்த பிச்சைக்காரரும் தங்கள் வேலையில் மும்முரமாயிருந்தனர். அந்த நாயை காணவில்லை. பிரகாஷ் ஆனந்த் போன் செய்தான்.

“வண்டிய மெதுவா நகத்தி வண்டலூர்ல லூப்ல போட்டுட்டான். இப்போ கன்னியாகுமரி எடுத்திடுவான். நான் அதில தான் போகப்போறேன். நீயும் வர்றதுன்னா வா.” என்றான். “இல்லைடா, நான் சூப்பர் ஃபாஸ்ட் டிக்கட் எடுக்கலடா. பாண்டிச்சேரி, விழுப்புரம் பாஸஞ்சர் எதை முதல்ல எடுக்கறானோ அதில வர்றேன்” என்றேன்.

சரியாக 7.16-க்கு கன்னியாகுமரி கிளம்பியது. கூட்டம் கொஞ்சம் குறைந்தது. லேசாக காற்று வீசியது. 7.30-க்கு விழுப்புரம் பாஸஞ்சர் கிளம்பியது. நான் அதில் ஏறிக்கொண்டேன். எனது பக்கத்தில் கல்லூரி தோழர்கள் மூன்று பேரும், கணனி ஆசாமி ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் விடுமுறைக்காக ஊருக்கு செல்பவர்கள் தான்.

“வழக்கம் போல பஸ்லயே போயிருக்கலாம். இவன் பேச்சை கேட்டு புதுசா டிரெயின்ல வந்தது தப்புடா.” கல்லூரி மாணவன் ஒருவன் குறை பட்டுக் கொண்டான். “ஒம்பது மணிக்கு மேல எங்க ஊருக்கு பஸ் இல்லைடா” கவலைப் பட்டான் இன்னொருவன். “எங்க வீட்டுல தங்கிட்டு காலைல போடா” இது மூன்றாமவன்.

”அஞ்சு டிரெயின் லேட். ஒரு ட்ரெயினுக்கு ஆயிரம் பேர்னு கணக்கு வச்சாலும் ஐயாயிரம் மணி நேரம் வேஸ்ட். இதுக்கெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாதா?” அலுத்துக் கொண்டார் சாஃப்ட்வேர் ஆசாமி.

கிளம்பும் அவசரத்தில் படிக்க புத்தகம் எடுத்து வைக்க மறந்து விட்டேன். எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. நான் மேலே ஏறி படுத்துக் கொண்டேன். ஒருவழியாய் வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்த போது மணி 10.30. ரொம்ப தாமதம் ஆனதால் என்னை அழைத்து செல்ல அப்பா ஸ்டேஷனுக்கே வந்திருந்தார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டதும் அம்மா கேட்டாள், “என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ லேட்?”. நான் நடந்ததையெல்லாம் சொன்னேன்.

அம்மா சொன்னாள், “பாவம்டா மாடு.”

சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Related Posts Plugin for WordPress, Blogger...