வியாழன், பிப்ரவரி 14, 2013

நீயின்றி...




 நீரின்றி அமையாது உலகு என்கிறது வள்ளுவம்.
அது எழுத்து பிழை. உண்மையில்,
நீயின்றி அமையாது உலகு.


செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஒரு விஞ்ஞானி உருவாகிறான்!!!



தன் காதலியின் இமைகள் வண்ணத்துபூச்சியை போல படபடத்ததில் தன் இதயத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து கேயாஸ் தன் தேற்றத்தை (CHAOS THEORY) எழுதி இருக்கலாம்.

தன்னவளின் விழி ஈர்ப்பு விசையிலிருந்து நியுட்டன் புவி ஈர்ப்பு விசையை அறிந்திருக்கலாம்.

தான் தந்த ஒற்றை ரோஜா தன் காதலியின் காதோரம் அமர்ந்து தன் காதலை சொன்னதிலிருந்து தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை ஜகதீஷ் சந்திர போஸ் உணர்ந்திருக்கலாம்.

தன்னவள் விரல் தொட்ட கணத்தில் தன்னுள் ஏற்பட்ட மின்னதிர்விலிருந்து மைக்கேல் பாரடே மின்சாரத்தை புரிந்திருக்கலாம்.

நானும் கூட காதலிக்கிறேன். நாளை நானும் விஞ்ஞானி ஆகலாம்!!!


செவ்வாய், பிப்ரவரி 07, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவை



ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.
எரிச்சல்கொள்ளத் தேவை இல்லை.


எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!


- நாவிஷ் செந்தில்குமார்

நன்றி: ஆனந்த விகடன் / 08 02 2012 இதழ்

செவ்வாய், ஜனவரி 31, 2012

நாணயம் - 2

இந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில், நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமிழில் நாணயம் வெளியிடாமல் தேவநாகரியில் வெளியிட்டதன் காரணம் புரியவில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தமிழில் வெளிவந்த நாணயங்களை தேடத் துவங்கியதன் விளைவு இந்த இடுகை. சங்க காலத்தில் வழக்கிலிருந்த "தமிழ் பிராமி" (நாம் தற்காலம் பயன்படுத்தும் தமிழின் முந்தைய வடிவம்) எழுத்துக்களை, எனக்கு அதன் மீது அறிமுகமோ பரிச்சயமோ இல்லாததால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு நன்கு புரியும் தமிழை மட்டுமே தேடி தொகுத்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என் பார்வைக்கு வராத, நான் இன்னும் அறியாத தமிழ் நாணயங்களை நீங்கள் ஏதேனும் அறிந்து இருந்தால் அது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.



13 - 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் நல்லூர் பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் வெளியிட்ட காசு.


1469 - 1476 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சமர கோலாகலன் (போரிடுவதை விழா போல கொண்டாடுபவன்) வெளியிட்ட நாணயம்.


விஜய நகர பேரரசுக்கு கப்பம் கட்டி காஞ்சிபுரம் முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான பகுதிகளை 1487 - 1512 வரை ஆண்ட மன்னன் கோனேரிராயன் வெளியிட்ட நாணயம்.


கீழே இருப்பவை கிழக்கிந்திய கம்பெனியால் 1807 ஆம் ஆண்டு சென்னையில் அச்சடிக்கப் பட்ட நாணயங்கள்.

பத்து காசு 

இருபது காசு 

நாற்பது காசு 

இரண்டு பணம் 

கால் வராகன் 

அரை வராகன் 

இரண்டு வராகன் (தங்க காசு - எடை 6 கிராம்)


கீழே இருப்பது 1720களில் பிரெஞ்சு அரசால் புதுச்சேரியில் வெளியிடப்பட்ட நாணயங்கள்.

ஒரு துட்டு 

கோழிக்காசு 

இதெல்லாம் பழங்கால நாணயங்கள். தமிழ் நாணயங்கள் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் இங்கல்ல. இலங்கையிலும் சிங்கப்பூரிலும்.
இலங்கை நாணயங்கள்


சிங்கப்பூர் நாணயங்கள்


இதர நாணயங்கள்:


தமிழீழ மீட்பு நிதிக்கென விடுதலை புலிகளால் வெளியிடப்பட்ட தங்க காசு. (இது பொது புழக்கத்தில் விடப் படவில்லை)

இது அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியால் தன்னிச்சையாக பதிப்பிக்கப் பட்ட அதிகாரப்பூர்வமற்ற நாணயங்கள்.


குறிப்பு 1: 

போன இடுகையில் குறிப்பிடப்பட்டிருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்து "ஸ்ரீ விஜயா" நாணயம் அச்சடிக்கப்பட்டது லண்டனில். 

கீழே இருப்பது தொண்டைமான் அரசரின் தர்பார். 1858 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.



குறிப்பு 2 :

மேலே இருக்கும் அத்தனை படங்களும் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை. 


வெள்ளி, ஜனவரி 27, 2012

பயணம் சுகமானது...


குழந்தையை சுமந்து 
நிற்க சிரமப்படும் 
அம்மாக்கள் இருக்கும் வரை 
பேருந்து பயணம் சுகமானது தான்.


சனி, ஜனவரி 21, 2012

கண்டேன் குயிலை...

(இணையத்தில் எடுத்தது)

கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த குயில் தேடல் பதிவை படித்து விட்டு பலரும் நான் பார்த்தது குயில் அல்ல என குயில் குறித்த பல தகவல்களை அளித்திருந்தீர்கள். அதன் மூலம் குயில் படம் பார்க்க முடிந்தாலும், குயிலை பார்க்க முடியாத ஏக்கம் நெஞ்சுக்குள் கூடு கட்டி கூவிக் கொண்டே இருந்தது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் அந்த குயில் தேடல் இடுகையை படித்து விட்டு வளர்மதி அக்கா தொலைபேசினார்கள். "குயிலை பாக்கணும்னா நம்ம வீட்டுக்கு வாங்க. தினமும் காலையில காக்கைக்கு வைக்கிற சாப்பாட குயிலும் வந்து சாப்பிடும். அதனால காலை வேளையில இங்க  வந்தீங்கன்னா நீங்க குயில் பாக்கலாம்" நம்பிக்கை தந்த இந்த வார்த்தைகளே என்னை இறக்கை இல்லாமல் பறக்க செய்தது. இங்கே அவர்கள் வீடு குறித்து அவசியம் சொல்ல வேண்டும். கிண்டியில் டிபென்ஸ் காலணியில் உள்ள அவர்கள் வீட்டின் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவிற்கு மரங்களடர்ந்த பராமரிப்பில்லாத நிலம். பல வித பறவைகளும் சிறு விலங்குகளும் சர்வ சாதாரணமாக வளைய வரும் பிரதேசம். நரக சந்தடிகளுக்கு நடுவே ஒரு சொர்க்க பூமி. சென்னையில் அப்படி ஒரு வீடு ஏழு பிறவி புண்ணியம் செய்தவர்களுக்கு தான் வாய்க்கும்.

ஆனால் அரபிக் கடலோரம் பத்து நாள் நான் பயணம் போனதால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை. திரும்ப வந்ததும் பொங்கல் பண்டிகை களை கட்ட துவங்கி இருந்தது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான மாட்டுப் பொங்கலை ஏதாவது கிராமத்தில் கொண்டாடலாம் என புதுக்கருவாட்சி என்ற கிராமத்திற்கு எனது இருசக்கர தேர் ஏறி சென்றேன். 

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கீழ்வாலை என்னும் இடத்திலிருந்து (கீழ்வாலையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியம் இன்றும் காணக் கிடைக்கிறது) வலப்புறம் நெடுந்தொலைவு உள் சென்றால் புதுக்கருவாட்சி வரும். போகும் வழி எங்கும் பசுமை, பாறை, குன்று என இயற்கை ஆட்சி செய்யும் இடம். மனிதர்கள் நடமாட்டம் அபூர்வமாக தென்படும் பகுதி. அந்த சாலையில்(!) சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தன் கிளை நீட்டி மறித்தபடி நின்றிருந்தது ஒரு ரௌடி மரம். அந்த கிளையை குனிந்து கடக்கும் சாத்தியம் குறித்து யோசித்துக் கொண்டே கிளையை கவனித்த நான், சத்தமின்றி வண்டியை நிறுத்தினேன். கிட்டத்தட்ட கைக்கெட்டும் தூரத்தில் கிளை. கிளையில் நான் பல காலமாக தேடி வந்த குயில். இவ்வளவு அருகில் குயிலை பார்ப்பேன் என கனவிலும் நான் நினைக்கவில்லை. கருப்பாக இருந்தாலும் குயில் மிகவும் அழகாக மைனா அளவுக்கு இருந்தது. (சின்ன குயிலா?). பல படங்களில் பார்த்திருந்தாலும் இது குயிலில்லாமல் வேறு ஏதோ பறவையாக இருக்கவும் வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகத்தில் அதன் குரல் கேட்க காத்திருந்தேன். நான் அசையவே இல்லை. அதுவும் தான்.

சிறிது நேர காத்திருப்பில், எனது தலைக்கவசத்தை நான் கழற்ற முனைந்த போது அது பறந்து அதே மரத்தின் வேறொரு கிளையில் அமர்ந்துக் கொண்டது. நான் இப்போது வசதியாக அமர்ந்து கொண்டு அதை கவனிக்கத் துவங்கினேன். சென்னை புத்தக கண்காட்சியில் பறவை பார்த்தல் என்றொரு புத்தகம் சுமைக்கு பயந்து வாங்காமல் வந்தது நினைவுக்கு வந்தது. சுமார் கால் மணி நேரம் கடந்தும் அது எந்தவிதமான சப்தமும் எழுப்பவில்லை. ஒருவேளை ஊமைக் குயிலாக இருக்குமோ என சந்தேகமும் வந்தது.

அதை கூவ செய்யும் விதமாக நான் அதைப் போலவே சீட்டி அடித்தேன். அது என்னை மதித்ததாகவே தெரியவில்லை. அசையாமல் எங்கேயோ அது பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தல் யாருக்காகவோ அது காத்திருப்பதாக தோன்றியது. 

இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் பொறுமை இழந்து விடுவேன் எனும் சூழலில், அது பொறுமை இழந்தது. விருட்டென கிளம்பி பறக்க துவங்கியது. அதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் கூவிக் கொண்டே பறந்தது. மறுக்கவே வாய்ப்பில்லாமல் அது குயில் தான். 

அடடா... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆளில்லா அந்த காட்டுப் பாதையில் எனது குதியாட்டத்தை எந்த மனிதனாவது பார்த்திருந்தால் என்னை மனநிலை சரியில்லாதவன் என மதிப்பிட்டிருப்பான். 


ஞாயிறு, ஜனவரி 15, 2012

தை திருநாள்...


தை முதல் நாளை பொங்கல் விழாவாக நாம் அனைவரும் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தீபாவளி என்பது நரகாசுரனை கிருஷ்ணர் அழித்ததை நினைவு கூறும் விதமாக, ஒரு தீயவன் அழிந்த மகிழ்ச்சியில் கொண்டாடுகிறோம். அதே போல பொங்கலை எந்த காரணத்திற்காக கொண்டாடுகிறோம் என கேட்டால், நமக்கு உணவு அளிக்கும் இயற்கையை பாராட்டும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகிறோம் என நாம் அனைவரும் சரியாக சொல்லி விடுவோம். ஆனால் வருடத்தின் 365 நாட்களில் எதனால் தை முதல் நாளில் இந்த விழா? விட்டத்தை வெறித்துக் கொண்டு யோசிக்கும் போது இப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்தது. விடை காணும் விதமாக விட்டத்தை விட்டு விலகி வேறு பக்கம் பார்த்து யோசிக்கத் தொடங்கினேன். அப்போது தான் ஒரு விஷயம் புலப் பட்டது.

நம்மை சுற்றி நான்கு திசைகள் இருந்தாலும், நாம் திசைகளை நான்கென பகுத்து வைத்திருந்தாலும், உண்மையில் பிரபஞ்சம் கோள வடிவிலானது(!). இதில் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் நியதிக்குட்பட்டு இயங்குகின்றன. உண்மையில் பூமி சூரியனை சுற்றி வருகிறது. ஆனால் பூமியிலிருந்து கொண்டு சூரியனை கவனிக்கும் போது சூரியன் நகர்வதாக ஒரு காட்சிப் பிழை ஏற்படுகிறது. இதில் சூரியனானது பூமியின் முதல் பாகையிலிருந்து தொண்ணூறாவது பாகை வரை (1 Degree - 90 Degree) நகர்கிறது. அதன் பின் மீண்டும் தொண்ணூறாவது பாகையிலிருந்து முதல் பாகைக்கு நகர்கிறது. தொண்ணூற்று ஓராம் பாகைக்கோ முன்னூற்று அறுபதாம் பாகைக்கோ சூரியன் செல்லாது. ஒன்று முதல் தொண்ணூறு வரையிலான இந்த கோணத்தை தான் நாம் கிழக்கு என்கிறோம். அதே போல 91-180 தெற்கு (கடிகார சுற்றின் படி). 181-270 மேற்கு.  271-360 வடக்கு. அதனால் தான் நான்கு திசைகள். (ஒரு பேச்சுக்கு, சூரியன் அறுபது பாகைகள் மட்டுமே நர்வதாக கொண்டால் திசைகள் ஆறாகி இருக்கும்.)

இதை நாம் மிக எளிதாகவே உணர முடியும். இன்று காலை சூரிய உதயம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, எங்கு நிகழ்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் - இரண்டு மாதங்கள் கழித்து சூரிய உதயம் எங்கு நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயம் சூரியன் கிழக்கிலேயே இடம் மாறி தான் உதிக்கும்.

சூரியன் வளர்வதோ தேய்வதோ இல்லை என்றாலும், ஒரு புரிதலுக்காக மட்டும் இதை நாம் சந்திரனின் வளர்த்தல் தேய்தலோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சூரியனின் ஒன்று முதல் தொண்ணூறாம் பாகை பயணம் - உத்தராயணம் - தை ஒன்றான இன்று தான் தொடங்குகிறது. அதனால் தான் இந்த நாளை விமரிசையாக உலகை வாழ வைக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் நாளாக கொண்டாடுகிறோம்.

இன்று முதல் ஆனி மாத இறுதி வரையிலும் (ஆறு மாதங்கள்), தொண்ணூறு முதல் ஒன்றாம் பாகை வரையிலான திரும்பும் பயணம் - தட்சிணாயனம் - ஆடி முதல் மார்கழி இறுதி வரையிலும் நிகழ்கிறது.

முன் காலங்களில் (பசுமை புரட்சிக்கு முன்), இரண்டு போகம் மட்டுமே விதைப்பார்கள். ஒரு நெல் ஆறு மாதம் வளரும். ஆடிப் பட்டம் தேடி விதை, மற்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் (அறுவடை ஆகி பணம் கையில் இருக்கும்) போன்ற பழ மொழிகளின் வழி நாம் இதை உறுதி செய்யலாம். 

உத்தராயண துவக்கத்தில், தை மாதத்தில் பொங்கல் பண்டிகை மூலம் சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி சொன்ன நாம், தட்சிணாயன துவக்கத்தில், ஆடிப் பெருக்கு பண்டிகை மூலம் நீருக்கும் பூமிக்கும் நன்றி சொல்லி இருக்கிறோம். 

ஆனால் இன்றோ, நதிகள் ஓடிய இடங்களில் மணல் லாரி ஓடுகிறது. இருக்கும் மணலும் கதற கதற கடத்தப் படுகிறது. தண்ணீரால் நிரம்பி இருக்க வேண்டிய ஆறு தண்ணீர் பொட்டலத்தால் நிரம்பி இருக்கிறது. வயலில் செருப்பு போட்டு நடக்க கூடாது எனும் மரியாதை உள்ள மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்படிப் பட்டவர்கள் பலர் அழுது கொண்டே விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மண், கடவுளாக பார்க்கப் பட்ட காலம் போய் காசாக பார்க்கப் படுகிறது. 

இங்கே விவசாயம் இழிந்து போனாலும், ஏதோ ஏழை நாட்டிலிருந்து உணவு தருவிக்கப் படும். அரிசி கிலோ ஆயிரம் ரூபாய் என்றாலும் நாம் வாங்கி, "பொங்கலோ பொங்கல்" என கத்தி நம் "சடங்கை" முடித்து உண்டு விட்டு, தொலைகாட்சியில் அபிமான நட்சத்திரங்களோடு அளவளாவிக் கொண்டிருப்போம்.

எனக்கு சாமியாரின் பூனை நினைவுக்கு வருகிறது.

வியாழன், ஜனவரி 12, 2012

சுவாமி விவேகானந்தர்


அமெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் (John D. Rockefeller). அமெரிக்காவின் மொத்த படிம எண்ணை (Fossil Fuel - Petrol, Diesel) வர்த்தகத்தில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். பெரும் கோடீஸ்வரர்.  

அப்படிப்பட்ட மனிதர் மன உளைச்சலாலும், படபடப்பாலும், உறக்கமின்றி அவதிப் பட்டார். அவரிடம் அவரது நண்பர், தனக்கு தெரிந்த ஒரு சாமியார் இந்தியாவிலிருந்து வந்து இருப்பதாகவும் அவரிடம் போனால் ஏதாவது தீர்வு கிடைக்கலாம் என கூறி சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லரை அழைத்து போனார்.

சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லர் தனது பிரச்சினையை கூற, கேட்டுக் கொண்டவர், "உங்கள் பணத்தை ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுங்கள். உங்கள் பிரச்சினை சரியாகும்" என அறிவுரை கூறினார். அதை கேட்டு, இப்படி சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் ராக்பெல்லர்.

ஆனால் விவேகானந்தரின் ஆளுமை மெல்ல மெல்ல அவரை சிந்தனையில் ஆழ்த்த, ராக்பெல்லர் தனது பணத்தை ஏழை எளியவர்களுக்காக செலவழித்தார். அவரே ஆச்சரியப்படும்படி தனது பிரச்சினையில் இருந்து அவர் மீண்டார்.

பின் விவேகானந்தரை சந்தித்த ராக்பெல்லர், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காக தனக்கு நன்றி சொல்லும் படி விவேகானந்தரை கேட்டுக் கொண்டார். புன்னகைத்த படி விவேகானந்தர் சொன்னார், "நன்றி சொல்ல வேண்டியது நானல்ல". உண்மையை உணர்ந்த ராக்பெல்லர் விவேகானந்தரிடம் நன்றி கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சுமார் 55 கோடி டாலர் அளவிற்கு நன்கொடை அளித்தார். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ராக்பெல்லர் பவுண்டேஷனின் பணி பிரமிக்க தக்கது. இன்றும் அது தனது பணியை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

காலம் பல கோடீஸ்வரர்களை கடந்திருக்கிறது. ஆனால் ஒரு  கோடீஸ்வரரை கொடை வள்ளலாக சரித்திரத்தில் நிலைக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர். 

முனைவர் எஸ்.சந்திரா அவர்கள் எழுதிய "அறிஞர்கள் வாழ்வில்" என்ற புத்தகத்திலிருந்து - வெளியீடு : விகடன் பிரசுரம்.


ஞாயிறு, ஜனவரி 01, 2012

பிரார்த்தனை...

வெள்ளி, டிசம்பர் 30, 2011

நாணயம் - 1

முன்னுரைக்கு முன்னுரை:

வாழ்வே பேரானந்தம் இன்று தன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல வழிகளிலும் எனக்கு உற்சாகம் தந்து உதவிய அத்தனை நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் மகிழ்ச்சி தெரிவித்து கொள்கிறேன்.

முன்னுரை:

உளுந்தூர்பேட்டைக்கு பதினைந்து கிலோமீட்டர் அப்பால், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வந்து செல்லும், அதிகபட்சம் அறுபது குடும்பங்கள் வசித்த, மின்சாரம் இல்லாத கூவாடு எனும் பாரதிராஜா கிராமத்தில் எனது தாய் வழி பாட்டனார் சுற்றி இருந்த பல ஊர்களிலும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார். சுமார் 18ஆண்டுகளுக்கு முன் அவர் பூவுடல் நீத்த நாளில் ஊரெல்லாம் திரண்டு அழுது கொண்டிருக்க, பசி தாங்காத நான் சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் வீடு முழுதும் தேடியும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வித்தியாசமான சில சில்லறை காசுகள் கிடைத்தன. அதை எடுத்துக் கொண்டு ஊரில் இருந்த ஒரே பெட்டி கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட போனவனுக்கு ஏமாற்றம். கடை பூட்டி இருந்தது. கடைக்காரரும் தாத்தாவுக்காக அழுது கொண்டிருந்தார். அப்புறம் தோட்டத்தில் கடலைக்காய் பறித்து சாப்பிட்டு பசி ஆறினேன்.

அந்த பிரிட்டீஷ் இந்திய சில்லறை காசுகளுடன் தொடங்கியது தான் எனது நாணயங்களுடனான சிநேகம். அது முதல் இன்றுவரை எல்லா வகையான  நாணயங்களையும் சேமித்து வருகிறேன்.

இது இந்திய நாணயங்கள் குறித்த ஒரு தொடர் பதிவு. ஆனால் நாணயங்களை Scan செய்து, செப்பனிட்டு எழுத வேண்டும் (கொஞ்சம் மெனக்கெட்டு உழைக்க வேண்டும்) என்பதால் தொடர்ச்சியாக எழுதுவேன் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் மாதத்திற்கு ஒன்றாவது எழுதிவிட முயல்கிறேன். இனி தொடர்...
                                                 *****************

உலகின் முதல் நாணயம் 

ஆதி காலத்தில் பொருட்கள் பண்டமாற்று முறையிலேயே பரிமாறிக் கொள்ளப் பட்டன. இந்த பண்டமாற்று முறையில் பொருட்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பது சிரமமான விஷயமாயிருந்தது. அதே போல தேவையில்லாத பொருளையும் பண்ட மாற்றாக பெற வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இது போல சில அசௌகரியங்கள் நாணயத்திற்கான தேவையை உண்டாக்கின.

உலகின் முதல் நாணயம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் துருக்கியில் லிடியா என்ற இடத்தில் உருவாக்கப் பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் இந்தியாவிலும், கிரேக்கத்திலும் நாணயம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இந்தியாவில் திருவிதாங்கூர், குவாலியர், இந்தூர், ஜோத்பூர், கட்ச், மேவார், மைசூர், விஜயநகரம் உட்பட பல சமஸ்தானங்கள் / பேரரசுகள் நாணயங்களை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நமது சேர, சோழ, பாண்டியர்கள் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.


திருவிதாங்கூர் சமஸ்தானம் 

இந்தூர் சமஸ்தானம்


16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவரை வீழ்த்திவிட்டு  புதுக்கோட்டையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார் ரகுநாத தொடைமான். அவரும் அவரது வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக செயல்பட , தனியாக நாணயம் வெளியிடுமளவிற்கு புதுக்கோட்டை சமஸ்தானதிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்திருந்தனர்.(கட்டபொம்முவை ஆங்கிலேயர்களிடம்  காட்டிக் கொடுத்து தங்கள் ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக தொண்டைமான்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு.) சம காலத்தில் தமிழகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரே நாணயம் இவர்கள் வெளியிட்ட, பொட்டு காசு என்று அழைக்கப் பட்ட "ஸ்ரீ விஜயா" என்று பொறிக்கப் பட்ட
புதுக்கோட்டை அம்மன் காசு தான்.

மேற்கண்ட நாணயத்திலிருந்து எனக்கு ஒரு விஷயம் புலப்படவில்லை. தமிழ் மன்னன் இராஜராஜன் தனது பெயரை தேவநாகரி மொழியிலும், தமிழக மன்னன் தொண்டைமான் தமிழல்லாத மொழியிலும் (அநேகமாக தெலுங்கு) நாணயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதியிலிருந்தே தமிழகத்தில் தமிழ் அகதியாகத் தான் இருக்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

செவ்வாய், டிசம்பர் 27, 2011

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!!!


சமீபத்தில் பெருமழை பெய்த நாளின் மாலை வேளை அய்யா துரை.கருணாநிதி அவர்கள் தொலைபேசினார். தனது வீட்டின் எதிரில் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருக்கும் மனிதர்களின் இருப்பிடம் நீரால் நிரம்பி, உடைமைகள் எல்லாம் நனைந்து கையறு நிலையில் அவர்கள் இருப்பதால் முடிந்த அளவு ஏதாவது உதவுவோம் வாருங்கள் என அழைத்தார். நண்பர் ரங்ககுமாரையும் உடன் அழைத்துக் கொண்டு அவர் இருப்பிடம் சென்றேன்.

வளரும் நகரப் பகுதியில் காலியான மனைகளில் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருந்த சகோதரர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள். பிழைப்பு தேடி ஊர் ஊராய் அலைந்து கொண்டே இருப்பவர்கள். அதிக பட்சம் ஆறு மாதத்திற்கு மேல் ஒரே ஊரில் தங்காதவர்கள். பெங்களூருவிலிருந்து கிலோ கணக்கில் கை கடிகாரம் வாங்கி வந்து சில்லறையில் விற்பவர்கள்.  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற அளவு விற்பார்கள். மிகவும் சிறியவர்கள் வீட்டிலேயே விளையாடுவார்கள்.கூட்டமாக வாழ்பவர்கள் ஆதலால் துணைக்கு பலர் உண்டு. சில சிறுவர்கள் எப்போதாவது பிச்சை எடுத்து உண்பதும் உண்டு. இப்படியாக 120 பேர் - இருபத்து மூன்று குடும்பத்தினர் எல்லா வயதிலும் இருந்தனர்.

நாங்கள் போன போது அய்யா துரை.கருணாநிதி அவர்களும் அவரது மனைவியும் அவர்கள் அனைவருக்குமான உணவை  தயாரித்துக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் காய்கறி வெட்டி, பாத்திரத்தை (வாடகைக்கு எடுத்தது) அடுப்பில் ஏற்றியும் உதவிக் கொண்டிருந்தனர். பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்(!) நிறைந்திருந்த தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே ஊற்றிக் கொண்டிருந்தனர். அது திரும்பவும் உள்ளே வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் நனைந்திருந்ததால் சிறுவர்களும் ஆண்களும் வாய்ப்புள்ள அளவு ஆடை குறைந்திருந்தனர்.

அவர்கள் இரவு தங்க அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் அனுமதி பெற்றோம். அவர்களுக்கு துணி வாங்க, பொருளுதவிக்காக நண்பர் பாலாஜி அவர்களின் அறிவுரை படி வர்த்தமான் துணிக்கடை முதலாளியை சந்தித்தோம். விஷயம் சொன்னதும் உடனே நேரில் வந்து பார்த்தார். எங்கள் இரு சக்கர வாகனத்தை தவிர்த்து விட்டு சைக்கிளில் வந்தார். (அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தும் அவர் பயன்படுத்துவதில்லையாம்) இவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவர்களோடு நேரடியாக பேசினார். இது போல நடப்பது வழக்கமானது தான், அதனால் உதவி எதுவும் வேண்டாம் என்று அவர்கள் மறுக்க, இவர் குடும்பத்திற்கு ஒரு போர்வையாவது தருகிறேன் என கூறி நகர்ந்தார்.

அவரை வழியனுப்பும் விதமாக அவர் சைக்கிள் வரை நான் கூட போக, பதறி தடுத்தார். "வேண்டாங்க. எனக்காக நடக்காதீங்க. செருப்பு போட்டுருக்கீங்க. புல்லுக்கு வலிக்கும்" என்றார். (அவர் செருப்பு அணிவதில்லை.) எனக்கு ஓங்கி அறைந்தது போலிருந்தது. அவர் மீதான மரியாதை அதிகமானது.

சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சுமார் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள போர்வைகளை அதே சைக்கிளில் அவரே கொண்டு வந்து கொடுத்தார். எங்களையே விநியோகிக்கும்படி சொல்லி எங்களிடமே தந்து விட்டு நிமிடத்தில் அகன்றார். செய்தி தாளின் புகைப் படத்துக்காக சமூக சேவை செய்யும் அரிதார மனிதர்கள் மத்தியில் இப்படி ஒருவரா என நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம்.

எந்த கலவரமும் குழப்பமும் இல்லாமல் ராஜஸ்தானத்து சகோதரர்கள் தங்களுக்கான போர்வையை பெற்றுக் கொண்டு சிநேகத்துடன் சிரித்தார்கள்.

குறிப்பு: போர்வைக்காக காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.அவர்களுக்கு தமிழ் பேசத் தான் தெரியவில்லை ஆனால் புரிகிறது. நடிகர் விஜயின் குத்து பாடல்களுக்கு குதூகலமாக நடனம் ஆடினார்கள். கவலையின் ரேகை கூட அவர்கள் முகத்தில் இல்லை. இவ்வளவு சிரமத்திலும் இன்பமாகவே இருந்தார்கள். அதில் மிகவும் கவனம் கவர்ந்த ஒரு விஷயம், ஆடையே இல்லாத ஒரு சிறுவனின் பெயர்... பில்கேட்ஸ்.

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

பிருந்தாவனில் வந்த கடவுள்

நான் மிகவும் மதிக்கும் பதிவர் ஒருவர் எழுதிய கதை என்னை சங்கடப்படுத்தியதால் இந்த கதையை பதிவிடுகிறேன். இது நாகூர் ரூமி அவர்கள் எழுதி, கல்கி இதழில் (04/09/2011) வெளியானது. இந்த கதையின் முடிவில் உங்கள் கண்ணோரம் நீர் பூத்தால் நீங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள்.




ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

தூரத்தில் வரும்போதே உட்கார்ந்திருந்த பலர் தங்கள் பிருஷ்டங்களை அள்ளிக்கொண்டு எழுந்தார்கள். ரயிலை நோக்கி முன்னேறினார்கள். அமீர் உட்கார்ந்திருக்கவில்லை. நின்றுகொண்டுதானிருந்தான். உட்காருவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அவனால் உட்காரமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.

ஆங்காங்கு ‘சிமெண்ட் பென்ச்’கள் இருந்தன என்றாலும் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் அப்படி ஏதும் இல்லை. ஆனால் மேல் கூரையிலிருந்து இறங்கிய இரும்புத் தூண்களைச் சுற்றி திண்ணை மாதிரி அறுகோணவடிவில் சிமென்டில் கட்டியிருந்தார்கள். அதன்மீது மக்களும் தங்கள் லக்கேஜுகளையும் வைத்து அவர்களும் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களைப் போல அவனும் செய்ய முயன்றபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. அதாவது சூரியன் என்பது வானத்தில் இருப்பது மட்டுமல்ல, ரயில்வே நிலையங்களின் அறுகோணவடிவ சிமென்ட் தரையின் கீழும் இருப்பதுதான் என்பதுதான். மாலையைக் கடந்து அன்றைய நாள் இரவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோதும் காற்றில் கலந்திருந்த வெம்மையில் ஏற்கனவே தலைபூரா உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தது. இதில் அந்த தரையில் உட்கார்ந்து தன் பின்பக்கத்தையும் வெந்துபோகவிடுவதில் விருப்பமில்லாமல்தான் அவன் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால் எந்த உணர்வும் அற்றவர்களைப்போல பெண்களும் அந்த அறுகோணத் திண்ணையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததுதான் அவனை ஆச்சரியப்படுத்தியது. பெண்கள் மென்மையானவர்கள் என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. நிச்சயமாக ‘அதை’ வைத்துமட்டும் இருக்காது என்பது புரிந்தது. 

வழக்கம்போல அந்த பிச்சைக்காரன் “தம்பி, தம்பி” என்று சொல்லிக் கொண்டு ஊனமான ஒரு கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு வந்து காசுகேட்டான். கிட்டத்தட்ட இருபது வருஷமாக அவனைப் பார்க்கிறான் அமீர். எந்த மாற்றமும் இல்லை. அவனுடைய கையைப் போலவே அவனுடைய வாழ்க்கையும் ஒரு இன்ச்கூட வளரவில்லை.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அமீருக்கு ரொம்ப கோபம் வந்தது. அவனை அப்படியே ரயில் வரும்போது உதைத்து சாகடித்தால் என்ன என்று தோன்றியது அமீருக்கு. சோம்பேறி நாய். பிச்சையெடுப்பதில் சுகம் கண்டுவிட்டது. சும்மா பேண்ட் ஷர்ட் போட்டிருந்தால் ‘அண்ணே’, ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தால் ‘தம்பி’. கையாலேயே அவனுக்கு இல்லை என்று சொல்லி வழக்கம்போல விரட்டினான். அப்போதுதான் ரயில் வந்து சேர்ந்தது.   

ஏற்கனவே நினைவுப் பெட்டியில் போட்டுவைத்திருந்த அனுபவங்களிலிருந்து ஒன்றை உருவிப் பார்த்துவிட்டு, இந்த இடத்தில்தான் எஸ்.சிக்ஸ் கோச் வந்து நிற்கும் என்று அனுமானித்தவனாக ஒரு இடத்தில் போய் நின்றான் அமீர். அந்த இடத்தில் சரியாக எஸ்.ஒன் கோச் வந்து நின்றதும் தண்டவாளங்கள் அவனைப் பார்த்து நகைத்து ஒலியெழுப்பின.

அதை உதாசீனப் படுத்தியவனாக தன் செவ்வக வடிவ ‘பேக்’கை தூக்கிக்கொண்டு ஓடினான் எஸ்.சிக்ஸை நோக்கி. தோள் பை இடது தோளிலேயே எப்போதும் இருந்ததால் அதைத் தனியாக தூக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. பெட்டிக்கு உள்ளே போனதும்தான் மூச்சே வந்தது. இனி அடுத்த வேலை எழுபத்தி இரண்டாம் எண்ணுள்ள இருக்கையைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதுதான். அப்பாடா என்றது மனது. முன்பொருமுறை – இல்லையில்லை பலமுறை – ‘ரிசர்வ்’ செய்யாமல் போய் பட்ட கஷ்டம் ஞாபகம் வந்தது.

ரயில் கிளம்பிவிட்டது. அவனைப் போலவே பல பயணிகள் இடம் கண்டுபிடிக்கும் வேட்டையில் மும்முரமாக இருந்தார்கள். ஒருவழியாக அவன் கண்டுபிடித்தபோது அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது.

மகாவீரர்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவனாக தனது டிக்கெட்டைக் காட்டினான். நல்ல வேளையாக அதற்கு மேல் எதுவும் பிரச்சனை ஏற்படவில்லை. எதிரில் உட்கார்ந்திருந்த அவளது குடும்பத்தினர் ஏதோ சொல்ல அவள் உடனே எழுந்து அங்கு சென்றுவிட்டாள். அங்கு போய் உட்கார்ந்ததும் சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.

வழக்கம்போல தன் ‘பேக்’கை காலுக்குக் கீழே கால் படும்படியாக வைத்துக்கொண்டு தோள்பையை தொடையின் மீது போட்டுக்கொண்டு அமர்ந்தான். வியர்த்து விட்டிருந்தது. பின்பக்க பாக்கெட்டில் இருந்த சென்ட் தடவிய கர்சீஃபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். வியர்வையைத் துடைக்கும்போது ஒருவித குளிர்ச்சியை கழுத்து உணர்ந்தது. அது இன்பமான உண்மையான குளிர்ச்சி அல்ல. ப்ளாஸ்டிக் பூக்களிலிருந்து வாசம் வருவது மாதிரி.

சுற்றிமுற்றிப் பார்த்தான். தன் பக்கத்தில் ஒருவரும் அவர் பக்கத்தில் ஒரு பெண்ணும். எதிரில் ஒரு அம்மா ஒரு குழந்தையுடன். அவள் பக்கத்தில் ஒருத்தர். ஒரு இடம் காலியாகத்தான் இருந்தது. அந்த மார்வாடி அம்மா ஏன் அந்த இடத்தில் உட்காராமல் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தாள் என்று பதிலில்லாத ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டான்.

அந்த அம்மாவை மீண்டும் பார்த்தான். அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி  தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடி இந்த உலகத்தைப் பார்க்காமல் இருப்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷயம் என்று தோன்றியது. ஆனால் அதை இந்த உலகம் பார்க்காமல் இருக்கும்போதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல அவன் கண்ணை மூடிய அந்தக் கணமே யாரோ அவன் தொடையில் இடித்துப் புரியவைத்தார்கள். தன் பக்கத்து சீட்டில் இருந்தவர்தான். ஏதோ அவசரம் போல. எழுந்து சென்றவர் போகும் அவசரத்தில் அவனைக் கலைத்து விட்டுச் சென்றிருக்கிறார். மறுபடியும் நிம்மதியாகக் கண்களை மூடவேண்டுமெனில் அவர் திரும்பி வராமல் இருக்க வேண்டும்.

அது சொல்ல முடியாது. அப்படியே வராவிட்டாலும் ஓரத்தில் அவன் உட்கார்ந்திருந்ததால் காஃபி டீ போன்ற போகின்ற வருகின்ற எல்லாருமே அவனை இடித்துக்கொண்டு போகின்ற வாய்ப்பு உண்டு என்பதால் கண்களை மூடுவதை ஒத்திப்போட்டான். இருக்கவே இருக்கிறார் ஜே.கிருஷ்னமூர்த்தி என்று தோள்பையைத் திறந்து  “தெரிந்ததிலிருந்து விடுதலை” என்ற சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவருடைய புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

அழகான அட்டை. கரும் பச்சையில் கீழ்ப்பகுதி. லைட்டான பச்சையில் மேல் பகுதி. கீழே கட்டம் கட்டி ஜே.கே.யின் படம். பக்கவாட்டில். அவரைப் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. ஜாதி மதங்கள் போன்ற எல்லாம் அடையாளங்களையும் மீறிய முகங்கள் அவை. உண்மையின் அழகு மட்டுமே அதில் தெரிகிறது. தனக்குள் புன்னகைத்தபடி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

“சார், இது என்ன புக் பாக்கலாமா?”.

கேள்வி கேட்டவர் எதிரில் இருந்தவர்தான். இப்போதுதான் புத்தகத்தையே திறந்திருந்தான். அதற்குள் என்ன உபத்திரவம் இது என்று தலையைத் தூக்கினான். ஒன்றும் சொல்லாமல் புத்தகத்தை அவரிடம் கொடுத்தான். அவர் அதன் தலைப்பை ஒரு நோட்டம் விட்டவுடனேயே “அடடே, Freedom from the Known அருமையான புத்தகமாயிற்றே. சார் நான் ஜே.கே.யோட ரசிகன் சார். அவரோட முப்பது புஸ்தகம் இதுவரைக்கும் படிச்சிருக்கேன் சார். கேஸட்ஸ்கூட கேட்டிருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும் சார். நீங்க ஜே.கே. விரும்பி படிப்பிங்களா சார்?”

படபடவென பேசிவிட்டார். மனிதர்களின் அறிவுத்தாகம் அவன் மண்டையைக் காய வைத்தது. என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான். “நானும் படிச்சிருக்கேன்” என்றான் பட்டும்படாமல்.

அவர் விடுவதாக இல்லை. ‘’பார்த்திங்களா சார், இதுதான் தெய்வத்தோட அருள்ங்கறது. எப்படி நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோம் பாத்திங்களா?” என்றார்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவரை எப்படி உடைப்பது என்று யோசித்தான். மனிதர்களை கடவுளை வைத்து எளிதாக உடைத்துவிடலாம் என்று தோன்றியது.

"தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது. எனக்கதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.

அவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஆடித்தான் போய்விட்டார். திடீரென்று வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு மவுனம் அவரைக் கவ்வியது. கடவுளை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்ட ஒரு நன்றிகெட்டவன் கையால் தொட்ட புத்தகத்தை வாங்கிவிட்டோமே என்று தோன்றியது போலிருந்தது அவர் மேற்கொண்டு அமீரைப் பார்த்த பார்வை.

திடீரென்று அவரது கண்களில் ஒரு ஒளி தோன்றியது. அவனை மடக்குவதற்கான ஆயுதம் கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. சற்று நிமிர்ந்து கொண்டார். தைரியமும் நம்பிக்கையும் வரும்போது மனிதர்களின் உடல் தானாகவே நிமிர்ந்துகொள்கிறது.

“சார், தப்பா நெனச்சுக்காதிங்க, அப்ப நீங்க ஏன் ஜே.கே.யைப் படிக்கிறீங்க?”

எங்க படிச்சேன்? படிக்க ஆரம்பிச்ச உடனேயேதான் கேள்வி கேட்டு நிறுத்திவிட்டீர்களே என்று சொல்லமுடியவில்லை. ஒரு கணம் அமீரும் யோசித்தான்.

“ஏன் ஜே.கே.யைப் படிக்கிறேன்னா கேட்டிங்க? அவர் ரொம்ப அழகா இருக்காரு. அதனாலதான்” என்றான்.

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொன்ன பதிலைவிட மோசமான பதிலாக அது இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை அவருக்கு. கண்ணாடியைக் கழற்றினார். துடைத்துக் கொண்டார். ஒரு மோசமான நீல நிறத்தில் ஒரு பேண்ட் போட்டிருந்தார். சட்டையை வெளியில் விட்டிருந்தார். அரைக்கை சட்டை. அது ரொம்பவும் அழுக்காக இருந்தது. அவர் கைகள்கூட அழுக்காகத்தான் இருந்தன. குளித்தாரா என்பது தெரியவில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவருக்குள் இருந்த கடவுளும் அழுக்காகத்தான் நிச்சயம் வியர்வையில் புழுங்கிக்கொண்டிருப்பார் என்று தோன்றியது அமீருக்கு.

“அப்ப அசிங்கமா இருந்தா ஜே.கே. படிக்க மாட்டிங்களா? கடவுள் இல்லைன்னு முடிவுக்கே வந்துட்டிங்களா சார்?”

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.  வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில் ‘சார்’ போட்டுப்போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

ஒவ்வொரு சாப்பாட்டு அய்ட்டமாக எடுத்தெடுத்து இலையில் வைப்பதைப் போல இருவரும் கடவுளைப் பற்றிய தங்களது கருத்துக்களை எடுத்தெடுத்து வைத்தனர். கடவுள் சார்பாகப் பேசியவர் பரமஹம்சர், விவேகானந்தர், முகமது நபி, வேதங்கள், கீதை, பைபிள், குர்ஆன் என்று எல்லா நூல்களிலும் ஞானிகளின் வாழ்விலிருந்தும் உதாரணங்களையும் வசனங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார்.

ஃப்ரெட்ரிக் நீட்சேயின் மறுப்புக்கும் வெறுப்புக்கும் தக்க பதில் சொல்லும் இயேசு கிறிஸ்துவைப் போல அவர் பேசிக்கொண்டே சென்றார். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பத்து நிமிஷத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துவிடும் என்று தோன்றியதால் அதோடு கடவுளை ‘கட்’ பண்ணுவது நல்லது என்று அமீர் முடிவு செய்தான். அந்த நேரத்தில்தான் அந்த உலக அதிசயம் நடந்தது.

ஒரு சின்ன பையன். ஒரு ஐந்தாறு வயதுக்குள்தான் இருக்கும். ஒரு காலியான பிஸ்லேரி பாட்டிலின் மீது ஏறி அதை இழுத்து இழுத்து சவாரி செய்துகொண்டே வந்தான். ஊனமுற்ற சின்னப்பையன். கூட யாருமில்லாமல் தனியாகத்தான் பிச்சை கேட்டுகொண்டே வந்தான். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. ஒல்லியான தனது கைகளை தூக்கிக்காட்டி “பசிக்கிது” என்று சொல்லிக்கொண்டே வந்தான். சிலர் சில்லரை போட்டனர்.  சிலர் சும்மா பார்க்காதமாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத்தேடியபோதுதான் அது நடந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தை தான் பெற்ற பிள்ளையின் முகத்தை துடைப்பதைப் போல துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒரு ‘யூஸ்-அன்-த்ரோ’ தட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

ஊட்டும்போது அவள் யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ தன் கடமையைச் செய்வது போலச் செய்தாள். ஊட்டி முடித்த பிறகு பையன் வாயை அவளே கழுவி விட்டு பின் தனது கர்சீஃபால் துடைத்து விட்டாள். அதற்குள் சென்ட்ரல் வந்துவிட்டிருந்தது. அவனை இறக்கி அந்த பிஸ்லேரி பாட்டில் வாகனத்தின் மீது மறுபடி ஏற்றிவிட்டு அவள் தன் அடிடாஸ் என்று போட்ட பையைத் தூக்கிக் கொண்டு இறங்கிப் போனாள்.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் சென்றிருந்தாள். இதுதான் சமயம் என்று அமீரும் ஜே.கே.யின் ரசிகரிடமிருந்து தப்பித்து வெளியில் வந்தான்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி  நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரதி!!!

திங்கள், டிசம்பர் 05, 2011

தமிழில் புகைப்படக்கலை - 2


வணக்கம் நண்பர்களே, குயில் தேடல் இடுகையில் நண்பர் சீனுவாசன் வீட்டில் கும்மாளம் அடித்ததை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது உங்கள் நினைவில் இருக்கலாம். அப்போது எடுத்த மின் படம் ஒன்றை,  "நண்பர்கள்" எனும் தலைப்பில் தமிழில் புகைப்படக்கலை (PIT) நடத்திய போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அந்த மின் படத்தை இரண்டாம் இடத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள் என்பதை படத்திலிருக்கும் அதே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



நண்பர்கள் (இடமிருந்து வலம்) :  HULK சௌந்தர், சந்தோஷ் (சந்தோஷமா இருக்கான் பாருங்க), டி-ஷர்ட் அணிந்திருப்பது மணி, கண்ணாடி அணிந்திருப்பது நான், எனக்கு எதிரில் செல்வம், எங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு கை மட்டும் தெரிகிறதே அது சீனுவாசன்.

இந்த படத்திலிருக்கும் நண்பர்களின் மகிழ்ச்சியை, விளையாட்டை, அது எடுக்கப்பட்ட அந்த கணத்தை பாராட்டி மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்த கிரேஸ், கங்கா, புனிதவதி, கோகிலா, சங்கீதா (யார் எடுத்ததுன்னு தெரியல!) தோழிகளுக்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தப் படம் செப்பனிடப் பட்டிருந்தால் முதல் பரிசுக்கு தகுதி உள்ளதாய் இருந்திருக்கும் என PIT நடுவர் குழு கருத்து தெரிவித்திருக்கிறது. இதை செப்பனிடாமல் அனுப்பி இரண்டாம் இடத்திற்கு இழுத்து வந்த சிறுமை அடியேனையே சாரும். (செப்பனிட வேண்டும் என்ற விஷயமே நடுவர் குழு சொன்ன பிறகு தான் புரிந்தது) அடுத்த முறை இவ்வாறு தவறுகள் நேரா வண்ணம் இயன்ற வரை பார்த்து கொள்கிறேன். 

எல்லோரும் கலந்து கொண்டு மகிழ்ந்த இந்த நிகழ்ச்சியில் வேலு, பிரசன்னா கலந்து கொள்ள முடியாமல் போனதும், கலந்து கொண்ட வைத்தி இந்த படத்தில் Out of frame இல் போனதும் வருத்தம் தரும் விஷயங்கள்.

வழக்கம் போல நண்பர் வெங்கடேசனுக்கு நன்றிகள்.

இது மாதிரி ஒரு சூழலை அமைத்து தந்ததற்காக சீனுவாசனுக்கும், எது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியாக குலாப் ஜாமூன் செய்து தந்து எங்களை அசத்திய சங்கீதா அக்காவிற்கும் (:P) எனது நன்றிகள். 

வியாழன், டிசம்பர் 01, 2011

நல்ல நல்ல பிள்ளைகள்...



நண்பர் கோபிநாத் அவர்களின் அழைப்பின் பேரில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். LKG முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 120 குழந்தைகள் கலந்து கொண்டு கலக்கிய அந்த நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்.

விருந்தினர்களின் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை போன்ற பொதுவான சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு தொடங்கியது, குழந்தைகளின் குதுகலம். தனது பாதுகாப்புக்காக உடன் வந்திருந்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றோரின் கைகளை விடுவித்துக் கொண்டு உற்சாக வெள்ளத்தில் விளையாட தொடங்கினர் குழந்தைகள்.

வார்த்தை விளையாட்டு, பாட்டுக்கு பாட்டு, குழு நடனம் போன்ற குழு விளையாட்டுகளில் மட்டுமல்லாமல்; பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என அனைத்திலும் கலக்கினார்கள் குழந்தைகள்.

குழந்தைகளின் செய்கைகளுக்கு கை தட்டி, உற்சாகப் படுத்தி பாராட்டிக் கொண்டிருந்ததால் எளிதில் எங்களுடன் ஒட்டிக் கொண்டனர்.

"அம்மா இங்கே வா வா..." பாடிய மூன்று வயது சிந்து, "Twinkle, Twinkle little star..." பாடிய செல்வகுமார், காமராஜர் குறித்து பாடிய சரஸ்வதி, கொடி காத்த குமரன் பற்றி உணர்வுரை ஆற்றிய பிரான்சிஸ், அற்புதமாக நடனம் ஆடிய அர்ச்சனா, "Why this கொல வெறி..." பாடிய ஆல்பர்ட் கவனம் கவர்ந்தார்கள். பரிசும் பெற்றார்கள்.

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி 
இந்த நாடே இருக்குது தம்பி.
சின்னஞ்சிறு கைகளை நம்பி 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்,
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...

என நிஷா பாடிக் கொண்டிருக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைத்து கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. ஆம் நண்பர்களே, நிஷா உட்பட அங்கிருந்த குழந்தைகள் அத்தனை பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். யாரோ செய்த தவறுக்கு சிலுவை சுமப்பவர்கள். இதில் பலர் அன்னையும் தந்தையும் இல்லாதவர்கள். அரசாலும், தொண்டு நிறுவனங்களின் தயவாலும் உயிர் வாழ்பவர்கள். அவர்களுக்குள் இருக்கும் உற்சாகமும், சந்தோஷமும் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானது. நிச்சயம் இந்த வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்கப்படும் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் அர்ச்சனாவின் நம்பிக்கைக்கு முன் நான் மண்டியிட்டேன். 

இந்த இடுகை எய்ட்ஸ் குறித்த மக்களின் பொதுவான அருவருப்பான பார்வையிலிருந்து யாரோ ஒருவரின் பார்வையை மாற்றுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.

குறிப்பு: இன்று உலக எய்ட்ஸ் தினம்.

புதன், நவம்பர் 30, 2011

மகிழ்ச்சி...



மாலை வேளை. வானம் நீர் தூவிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய சுப்பிரமணி உற்சாகமாக காணப்பட்டார். தலை துவட்ட துண்டு கொடுத்து விட்டு காபி போடப் போன மனைவி காயத்ரியிடம் கையோடு வாங்கி வந்திருந்த குலாப் ஜாமூனையும், பூவையும் கொடுத்தார்.

"என்னங்க விசேஷம்? மாசக் கடைசியில இனிப்பெல்லாம் தடபுடலா இருக்கு!" ஆவலுடன் கேட்டாள் காயத்ரி.

"ரொம்ப நாளா வர வேண்டி இருந்த அரியர்ஸ் பணம் இன்னிக்கு வந்துது. அதான்" என்றார்.

"எவ்வளவுங்க!"

"லட்சத்துக்கு நாலாயிரம் கம்மி"

"ஏங்க! தமிழ்நாடு பூரா கிளை வச்சிருக்க அந்த பெரிய நகை கடை நம்ம ஊர்லயும் கடை திறந்திருக்காங்களாம். நல்ல பெரிய கடையாம். மூணு மாடி. தங்கம், வெள்ளி, வைரம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாடியில. நெறைய டிசைன் இருக்காம். செல்வராணி சொன்னாங்க. நானும் என்னோட இந்த சங்கிலிய மாத்தணும்னு எவ்ளோ நாளா நெனச்சிக்கிட்டிருக்கேன். நகை கடைக்கு போகலாமாங்க?" காபியை கொடுத்துக் கொண்டே கேட்டாள் காயத்ரி.

"இந்த சங்கிலிக்கு என்ன, நல்லாத் தானே இருக்கு?"

"இல்லைங்க, இது பத்து வருஷத்துக்கு முன்ன நம்ம கல்யாணத்துக்கு அப்பா அம்மா செஞ்சு போட்டது. இப்போ இத விட அழகா நெறைய டிசைன் வந்துடுச்சி. வைரம் மாதிரியே ஜொலிக்கிற ஜிர்க்கான் கல்லு வச்சு, மரகதம், மாணிக்கம், கெம்பு எல்லாம் வச்சு, ரோடியம் பாலிஷ் போட்டு, பாம்பே கட்டிங், கேரளா மாடல் அப்படின்னு என்னென்னவோ வந்துருக்குங்க. வாங்க போயி பாத்துட்டு வருவோம்" ஆர்வமாக இருந்தாள் காயத்ரி.

நகை கடைக்காரன் ரேஞ்சுக்கு பேசறாளே! என நினைத்துக் கொண்டே, "தங்கம் இப்போ விக்கற வெலையில வாங்கித் தான் ஆகணுமா?" எனக் கேட்டார்.

"என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கறப்ப, கிராம் நானூறு ரூபாய்க்கு வாங்கினோம். இப்போ பாருங்க ஒரு கிராம் ரெண்டாயிரத்து ஏழு நூறு ரூபாவுக்கு விக்குது. தெனமும் ஏறிகிட்டே தான் இருக்கு. ஆனாலும் மக்கள் வாங்கி கிட்டே தான் இருக்காங்க. இப்போ கிரீஸ், அமெரிக்கா, இத்தாலி இங்கல்லாம் பொருளாதார நெருக்கடி இருக்கறதால தங்கம் இன்னும் விலை ஏற்றத்துக்கு தான் வாய்ப்பிருக்கறதா சொல்றாங்க."

நல்ல தெளிவா இருக்கா. ஒன்னும் பேச முடியாது என நினைத்துக் கொண்டே, "சரி போகலாம். நீ சொன்னா சரியாத் தான் இருக்கும்" என்றார்.

"சமத்து" என கணவன் முதுகில் செல்லமாய் தட்டி விட்டு நகை கடைக்கு கிளம்ப ஆயத்தமானாள். வானம் வெளுத்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் நகை கடையில் இருந்தனர்.

ஊழியர்களின் முக மலர்ச்சியும், ஏசியின் குளிர்ச்சியும் கூடவே மஞ்சள் வெளிச்சத்தில் தங்கம் தக தக வென மின்ன தேவ லோகத்தில் இருப்பதாக உணர்ந்தார் சுப்பிரமணி. "இவ்வளவு தங்கம் இந்தியாவுல இருந்துமா நாம வளரும் நாடு?" என ஆச்சரியப் படுமளவிற்கு தங்கத்தை குவித்து வைத்திருந்தார்கள்.

இரண்டு மணி நேரம், இருக்கும் எல்லா நகைகளையும் பார்த்து விட்டு முடிவாக ஒரு சங்கிலியை காயத்ரி தேர்ந்தெடுக்க, பழைய நகையை கொடுத்து கணக்கு போடும் போது, அதன் தரம் குறைவு என கடைக்காரர் அதன் மதிப்பை குறைக்க, கணக்கு சீட்டை வாங்கி பார்த்தார் சுப்பிரமணி. சீனுவாச ராமனுஜம் வந்தால் கூட கணக்கு புரியுமா என்பது சந்தேகம் தான். விளக்கம் கேட்ட போது எப்படி எப்படியெல்லாமோ விளக்கினார்கள், கடைசி வரை புரியவில்லை. வேறு வழி இல்லாமல் இருந்த பணத்தை கொடுத்து விட்டு, குறைந்த பணத்தை நண்பன் பாலுவை கடைக்கு கொண்டு வந்து தர சொல்லி (கடன் தான்) கொடுத்தார் சுப்பிரமணி.

இரண்டு லட்சத்துக்கு மேல விழுங்கிய அந்த சங்கிலி ஏனோ சுப்பிரமணிக்கு நிறைவை தரவில்லை. "இதுக்கா ரெண்டு லட்சம்!?" என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்கி இருந்தது.

வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். நகையை அழகிய பெட்டியில் வைத்துக் கொடுத்தார்கள். கூடவே சாப்பாட்டை சூடாக வைத்திருக்கும் ஹாட் பேக்கை பரிசாக கொடுத்தார்கள். உடனே காயத்ரி உச்சி குளிர்ந்து போனாள். "நாம வழக்கமா வாங்கற கடையில பர்ஸுக்கு மேல எதுவும் தர மாட்டாங்க. ரொம்ப கேட்டா கொஞ்சம் பெரிய பர்ஸா தருவாங்க. ஆனா இங்க நாம கேக்காமயே ஹாட் பெக்கேல்லாம் தராங்க!" சிலாகித்து பேசினாள் காயத்ரி.

நகை கடையிலேயே பார்த்த பாலு, அங்கிருந்து ஹோட்டலுக்கு போன போது அங்கே சந்தித்த இருவர், வேலை செய்யும் இடத்தில் குறைந்தது பத்து பேர், போன் பேசும் போது சிலரிடம் என பார்க்கும் எல்லோரிடத்தும் ஹாட் பேக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

திங்கள், நவம்பர் 28, 2011

கண்ணீர் அஞ்சலி...


தலை கலைந்து
கன்னம் ஒட்டி
கண்கள் குழி விழுந்து
புடவை கசங்கிய  
ஒரு பாட்டி இருக்கிறார்
கண்ணீர் அஞ்சலி 
சுவரொட்டியில்.

இருக்கும் போது
சோறு போட்டிருக்கலாம்.

திங்கள், நவம்பர் 21, 2011

குயில் தேடல்...

கடந்து போன வசந்த காலத்தில் நமது கவனத்தை ஈர்த்த குயிலின் குரல்,

எங்கிருந்தோ கூவும் 
ஒற்றைக் குயில் 
எதிரொலிக்கிறது 
நீ இல்லாத 
என் தனிமையின் 
ஏக்கத்தை.

என என்னை கவிதை எழுத வைத்தது. பேருந்தில் அமர்ந்து கவிதையை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போது, வைரமுத்து "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?" என கேள்வியை எழுப்பினார். அட! அதானே, நாம இது வரை குயிலையே பார்த்ததில்லையே? என சுவாரசியம் பற்றி கொள்ள, குயில் தேட ஆரம்பித்தேன். 

கட்டிடக் காட்டில் குயிலை எங்கே போய் தேடுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்த போது,  "நம்ம கூகுளாரை கேட்டால் என்ன?" என யோசனை மின்னலென தோன்றியது. படங்கள் பிரிவில் அவரை கேட்டால், கௌதாரி, காக்கை, கரிச்சான் குருவி, குயில் பாட்டு பாடிய பாரதி, சின்ன குயில் சித்ரா, லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி என எதை எதையோ காட்ட, எனக்கு தலை சுற்றத் தொடங்கியது.

நண்பர் வெங்கடேசன் "வண்டலூர் ஜூ ல பார்க்கலாமேடா" என அருமையான ஒரு யோசனை சொன்னார். அதானே என ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் கேமரா சகிதம் ஆர்வத்துடன் கிளம்பினோம்.

வண்டலூரில், வெள்ளை நிறத்தில் மயில், மரம் ஏறும் கரடி (!), தங்க நிற சேவல் என எத்தனையோ விலங்குகள் இருந்தன. குயிலுக்கு கூண்டு மட்டும் இருந்தது. பெருத்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்.

சிதம்பரத்தில் இருக்கும் பறவை ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியத்தின் நினைவு வர, அவரிடம் தொலை பேசிக் கேட்ட போது, அவர் சொன்னார். "சொந்தமாக கூடு கட்டத் தெரியாத குயில், காகத்தின் கூட்டில் தனது முட்டைகளை இடும். இது தெரியாமல் குயில் குரலெடுத்து பாடும் வரை தன் குழந்தை என்றே காகம் குயிலை வளர்த்து வரும். குயிலில் ஆண் குயில் கருப்பாக காகம் போன்றும், கண்கள் சிவந்தும், பெண் குயில் கௌதாரி போல வரிகளுடனும் இருக்கும் என்றார். (கூகுளார் சரியாத்தான் காட்டி இருக்கார்)

குயிலை எங்கே பார்க்க முடியும் என்றேன் நான். வசந்த காலத்தின் காலை வேளையில் சென்னை மவுண்ட் ரோடில் கூட குயிலின் குரலை கேட்கலாம். ஆனால் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் என முடித்துக் கொண்டார். (அதனால தான் வைரமுத்து அப்படி கேட்டாரோ?)

அவர் அப்படி சொல்லி விட்டாலும் குயில் தேடல் மனதில் இருந்து அகலவில்லை. ஒருமுறை சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது, மதுராந்தகம் அருகே, நண்பர் சொன்ன அடையாளங்களோடு ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக, தட தடக்கும் ரயிலுக்கு அஞ்சாமல் தண்டவாளத்தின் சமீபத்திலேயே நின்றிருந்தது. உடனே ஆர்வ மிகுதியில் அவரை அழைத்து அடையாளம் சொன்னேன். "பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்ததா?" என கேட்டார். ஆமாம். ஒரு ஓடையின் ஓரமாகத் தான் நின்று கொண்டிருந்தது என்றேன். "அது நீர் காக்காங்க" என சொல்லி எனக்கு ஏமாற்றம் தந்தார்.

தேடி சலித்து கிட்ட தட்ட குயிலை மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு வசந்த காலம் வந்ததும், குயில் தனது இனிய குரலால் தன்னை எனக்கு நினைவு "படுத்தியது".

கருப்பாக எந்த பறவையை பார்த்தாலும் இது குயிலாக இருக்குமோ? என யோசிக்கும் அளவிற்கு குயில் என்னை தேட வைத்தது. இந்த சூழலில் நண்பர் சீனுவாசன் தனது வீட்டுக்கு நண்பர்கள் எங்களை - ஒன்று கூடல் - விருந்துக்கு அழைக்க, நாங்கள் சென்று விருந்தை சிறப்பித்தோம். உண்டு முடித்து, பாடிக் களித்து, விளையாடி மகிழ்ந்து வீடு திரும்ப வெளியே வந்த போது, கொஞ்சம் தூரத்தில் முள் புதரில், கருப்பாய் ஒரு பறவை. குயிலா? என விழித்துக் கொண்டிருக்கும் என் மனம் கேட்க, உடனே கையிலிருந்த கேமராவால் ஒரு மின் படம் எடுத்தேன்.


அடுத்த படம் எடுக்க எத்தனிக்கும் போது அது காணாமல் போயிருந்தது. நண்பர் பாலசுப்ரமணியத்திடம் கேட்ட போது சொன்னார். சாட்சாத் அது குயிலே தான்.

அது குயிலே தான் என அவர் சொன்ன வார்த்தையே, குயிலின் குரலாய் என் காதில் தேன் பாய்ச்சியது. அப்புறமென்ன என் ஓராண்டு கால தவம் இனிதே நிறைவடைந்தது. இப்போது நினைத்தாலும் குயில் குதுகலம் தருகிறது.

நன்றிகள்: குயில் குறித்து நிறைய சொன்ன நண்பர் பாலசுப்ரமணித்திற்கும், விருந்து வைத்து குயில் பார்க்க வகை செய்த நண்பர் சங்கீதா சீனுவாசனுக்கும்.



Related Posts Plugin for WordPress, Blogger...