வியாழன், பிப்ரவரி 24, 2011

குறியீடு...


சே,
சாக்ரடீஸ்,
கார்ல் மார்க்ஸ்,
திருவள்ளுவர்,
பெரியார்,
அரவிந்தர்,
ராமகிருஷ்ண பரமஹம்சர்
என எத்தனையோ பேர் 
இருக்க ஏனோ தேவதாஸ் 
மட்டுமே எல்லோருக்கும் 
நினைவுக்கு வருகிறார். 
புதிதாக தாடி வளர்பவனை பார்க்கும் போது.

சனி, பிப்ரவரி 19, 2011

என் பெயர் விசு....



சாதாரணமான சமயங்களில்
சாதாரணமாயிருப்பது
சாதாரணமானவர்களுக்கு
சாதாரணம் தான்.

ஆனால்,
அசாதாரணமான சமயங்களிலும் 
சாதாரணமாயிருப்பது
அசாதாரணமானவர்களுக்கு
மட்டுமே சாதாரணம்.

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

மன் மௌன சிங்...


சுடுகாட்டை ஒட்டிய ஆறு.
லாரி லாரியாய் மணல் திருடப்படுகிறது.
வேல் கம்பு வைத்திருந்தாலும் 
வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் 
இருக்கிறார் அரிச்சந்திர மகராஜா!!!

திங்கள், பிப்ரவரி 14, 2011

விழி மொழி... வழி மொழி...


உனது
அன்பு,
ஆர்வம்,
நாணம்,
குறும்பு,
பண்பாடு,
நட்பு
அத்தனையையும்
சொல்லி சென்றது
உன் ஓரப் பார்வை.

திங்கள், பிப்ரவரி 07, 2011

அத்திக்காய் காய்...






தமிழ் தவிர வேறு சில மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருந்தாலும் தமிழின் நுட்பம் புரியுமளவிற்கு பிற மொழிகளில் ஆளுமை எனக்கில்லை.  பலே பாண்டியா (1962)  திரைப்படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட அத்திக்காய் காய் காய்... என்ற நான் மிகவும் ரசித்த பாடல், நான் ரசித்த படி...

பெண்: 
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ?
(அந்த திசையில் [அத் திக்கு - அந்த திசை] காய் [காய் - எரி]. விஷம் [ஆலகாலம்] போன்ற துன்பத்தை தரக் கூடிய வெண்ணிலவே, என்னை போல நீயும் பெண்ணானதால் என் துன்பம் உனக்கு தெரியுமாதலால், அந்த [அவர்]  திசையில் காய். என் பக்கம் காயாதே) 

ஆண்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..


பெண்: கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக்காய்
(கன்னிக்காக, கன்னியின் ஆசைக்காக, காதல் கொண்ட பெண்ணிற்காக [பாவை - பெண்] அவரை, எந்தன் மன்னனை [கோ - அரசன்] காய்.)

ஆண்: மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
பெண்: இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
(மாது [பெண்] உள்ளம் காய் [இறுக்கமானது] ஆனாலும் என் உள்ளம் இறுக்கமானது அல்ல. அதனால் என்னை நீ காயாதே.)



ஆண்: இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
(இரவுக்காக, உறவுக்காக ஏங்கும் இந்த ஏழைக்காக நீ தினமும் என்னவளை காய்.)



பெண்: உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
(உருவம் சிறியதானாலும் [பிஞ்சு, காய்] பருவம் சிறியதல்ல. எனக்கும் வேதனைகள் உண்டு என்பதால் என்னை நீ காயாதே.)


இருவரும்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெண்: ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

(ஏலக்காய் வாசனை போல எங்கள் உள்ளம் வாழும் படி ஒளி வீசு.) 


ஆண்: சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
(தூது வழங்காத வெண்ணிலவே! சொன்னதெல்லாம் நீ விளங்கி கொண்டாயா? என்னை நீ காயாதே.)


இருவரும்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆண்: உள்ளமெலாமிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ?

வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
( [இவ்வளளவு சொல்கிறேனே!] உன் உள்ளம் இளகாயோ [கரைய மாட்டாயா?] ஒரே ஒரு வார்த்தை பேச மாட்டாயா? வெள்ளரிக்காய் பிளந்தது மாதிரி வெள்ளையாக நீ சிரிக்க மாட்டாயா?)

பெண்: கோதையெனைக் காயாதே கொற்றவரை காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
(பெண் என்னை காயாதே. பெண்ணாகிய நான் அணுகுதல் பண்பாடு மீறிய செயல் ஆதலால், என் அரசனை [கொற்றவன் - அரசன்] காய். உனது செயலால் அவர் என்னை அணுகும்படி செய். [அவர் அணுகியதால்] இருவரையும் காயாதே, தனிமையிலே ஏங்காதே வெண்ணிலா)

இருவரும்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


வியாழன், பிப்ரவரி 03, 2011

சாமி அறை...



வாஸ்து படி (!) சாமி அறையை 
அலமாரியிலிருந்து இடம்
மாற்றினார் அப்பா.

காலியான இடத்தில்
புத்தகங்கள் வைக்கப்பட்டதில் 
சாமி அறையாகவே இருக்கிறது அலமாரி.

புதன், ஜனவரி 26, 2011

அல்வா மட்டுமல்ல...



இன்னும் பனிப் போர்வை 
விலக்காத சோம்பல் பூமி,

சுட்டெரிக்காமல் செல்லமாய் 
எட்டிப் பார்க்கும் சூரியன்,

கைக்கு எட்டும் தூரத்தில் 
RIN வெண்மை (:p) கொக்கு,

மனைப்பிரிவுகளாகி 
மலடாக்கப் படாத 
பசுமை படர்ந்த நிலம்,

கரையோடு கதை பேசும் 
தண்ணீர் ஓடும் நதி!!!

செல்போன் இல்லாத மனிதர்கள்,

தாவணிப் பெண்கள்,

நெல்லையில் வாழ்க்கை இன்னும் 
இனித்துக் கொண்டு தான் இருக்கிறது.

வியாழன், ஜனவரி 20, 2011

அமைதி காக்கவும்!



வடலூர் 
வள்ளலார் சன்னதியில் 
அறிவிப்பு பலகை.
"அமைதி காக்கவும்".
"பக்கும்! பக்கும்!" என 
ஆமோதித்துக் கொண்டே இருந்தன 
புறாக்கள்.

வெள்ளி, ஜனவரி 14, 2011

போகி...


காலை பல் துலக்கும் ப்ரஷிலிருந்து,
இரவு படுத்துறங்கும் பாய் வரை
அனைத்தும் பிளாஸ்டிக் ஆனதால்,
போகி நெருப்பில் எரிந்தது...
சுற்றி அமர்ந்த மனிதர்களின்
ஆரோக்கியம். 

செவ்வாய், ஜனவரி 11, 2011

பேருந்து பயணம்...



குத்த வைத்து காத்திருந்து, 
வரும் ஒவ்வொரு பேருந்துக்கும் எழுந்திருந்து,
"ஏம்பா இந்த பஸ்சு எங்க போகுது?" என கேட்கும் 
பாம்பட பாட்டிகளை இப்போது காணவில்லை.

முதியவர்கள் வந்தால் எழுந்து இடம் தரும் 
இளைஞர்களும் குறைந்து போனார்கள்.

அச்சடித்த டிக்கட்டுக்கு பதில், டிக்கட் 
அச்சடிக்கும் எந்திரம் நடத்துனரின் கைகளில்.

"வாழப்பாடில விறகு கடை முருகேசன் தெரியுமா?" 
"எங்க மாமா தாங்க அவரு!" 
புதிய அறிமுகங்களுக்கும், வாழ்கையின் 
சுவாரசியங்களுக்கும் வழி விடாமல் 
பேருந்துகளில் தொலைகாட்சிபெட்டி.

பேருந்து பயணத்தில் இன்னும் மாறாமல் இருப்பது, 
பேசிக் கொண்டே இருக்கும் பேருந்தின் ஜன்னல்களும், 
அரசாங்கம் பராமரிக்கும் (!) குழி விழுந்த சாலைகளும் தான்.

வெள்ளி, ஜனவரி 07, 2011

அன்புமயமாதல்...




குழந்தையுடன்
கோயிலுக்குச் சென்றேன்

பூக்காரப் பெண்
கூடுதல் ரோஜா கொடுத்தாள்


பிள்ளையாரை வணங்கிய பெரியவர்
பிள்ளையின் கன்னம் கிள்ளிப்போனார்


கற்பூர ஆரத்தி ஒற்றி
குங்குமம் இட்டுவிட்டார் குருக்கள்


பிறிதொருவர் பிரசாதம் அளித்து
புன்னகைத்தார்


அவ்வேளையில்
அம்மனின் மார்பிலும் சுரந்திருக்கலாம்
பிள்ளைக்கான பால்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்


நன்றி - ஆனந்த விகடன் / 12 ஜன 2011 இதழ்.

வியாழன், ஜனவரி 06, 2011

முரண்...

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற 
தேவ ஆட்டுக் குட்டி ஏசு. - யோவான் 1.29

பகைவனுக்கும் அருளி செய்ததால்
கடவுளானார் கர்த்தர்.
அவரால் பாதுகாக்கப்பட்ட
தவறேதும் செய்யாத ஆடு
பக்தனின் பந்தியில்!

வெள்ளி, டிசம்பர் 31, 2010

அழகே சுகமா..




ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பிலேயே ஒரு (அழகிய) முரண் இருப்பதாக தோன்றுகிறது. பெண் ஆணிடம் அதிக உரிமை எடுத்து கொள்வதாக ஆண் கருதுகிறான். பெண் தன்  விருப்பபடி ஆணை சம்மதிக்க செய்யும் சாமர்த்தியம் அவனுக்கு இல்லாததால் ஒருவேளை அப்படி தோன்றலாம். அதனால் அவன் தன் விருப்பங்களின் நியாயங்களை பெண்ணுக்கு புரிய வைக்க இயலாமல், பிரச்சினையிலிருந்து தப்பிக்க பொய் சொல்லுகிறான். அது பொய் என தெரிய வரும் போது பெண் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள். அவன் மேல் கோபம் கொள்கிறாள். இங்கே பிரச்சினை பொய் சொன்னதா, அல்லது புரிந்து கொள்ள விரும்பாத பிடிவாதத்தில் பெண் இருப்பதா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனாலும் ஆணும் பெண்ணும் இணைந்தே வாழ வேண்டிய வாய்ப்பு இருவருக்குமான, சகித்து கொள்ளும் மன நிலையால் சாத்தியமாகி தான் இருக்கிறது.

(பார்த்தாலே பரவசம் படத்தின் அழகே சுகமா... பாடல் கேட்ட போது தோன்றியது.)

என்னை காணவில்லை!!!



எந்த நாளேட்டில் வெளியிட முடியும்?

என்னை காணவில்லை - என்ற விளம்பரத்தை!.



வியாழன், டிசம்பர் 30, 2010

என்ன தராங்க?



அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் போது சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க சிறுவனுடன்...

நான்: உம் பேரு என்ன?

அவன்: சதீசு..

நான்: எத்தனாவது படிக்கிற?

சதீசு: அஞ்சாது.

நான்: எங்க படிக்கிற?

சதீசு: பள்ளிகோடத்துல.

நான்: என்ன சொல்லி தராங்க?

சதீசு: முட்ட, சோறு எல்லாம் தராங்க...
Related Posts Plugin for WordPress, Blogger...