சனி, அக்டோபர் 01, 2011

இரத்த தானம் - ஒரு துளி சிந்தனை.



இன்று உலக இரத்த தான தினம். அதையொட்டி ஒரு சிறு அனுபவ பகிர்வு.


"மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத்தம் தேவை. உடனே தொடர்பு கொள்ளுங்கள், முருகன் - 99999 99999. எவ்வளவோ அவசியமில்லாத செய்திகளையெல்லாம் forward செய்கிறோம். இந்த செய்தியை forward செய்யுங்கள். ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்படும்." 

இப்படி ஒரு குறுஞ்செய்தி அநேகமாக நம்மில் எல்லோருக்குமே வந்திருக்கும். நாமும், குழந்தையின் உயிர் காப்பாற்ற பட வேண்டுமே என்ற பதட்டத்துடனும்,  நல்ல காரியம் செய்கிறோம் என்ற எண்ணத்துடனும், நமக்கு தெரிந்த எல்லோருக்கும் நமக்கு வந்த செய்தியை அனுப்பி வைப்போம். நம்மை போலவே நாட்டில் கருணை மனது கொண்டவர்கள் அநேகம் பேர் இருப்பதால், அந்த குறுஞ்செய்தி அணு வெடிப்பின் பரவலைப் போல சில மணித் துளிகளிலேயே லட்சக்கணக்கான மனிதர்களை சென்றடைகிறது. 

சுமார் ஏழு கோடி பேர் இருக்கும் தமிழகத்தில், ரத்ததானம் செய்யும் வயதும் தகுதியும் உடைய, குறிப்பிட்ட ரத்த வகையை சேர்ந்தவர்களில் சுமார் பத்தாயிரம் பேரை அந்த குறுஞ்செய்தி சென்றடைவதாக வைத்துக் கொள்வோம். கொலை குற்றவாளியானாலும் மரண தண்டனை தரக் கூடாது என்ற காந்திய மனம் கொண்ட நாம், குழந்தைக்கு ஆபத்து என்றால் சும்மா இருப்போமா?. "நானும் குறிப்பிட்ட அந்த ரத்த வகையை சேர்ந்தவன் தான். உங்கள் குழந்தையை காப்பாற்ற நான் இருக்கிறேன். இரத்தத்தை எங்கே வந்து தர வேண்டும்?" என்று கேட்க இதில் பாதி பேர் முருகனை தொடர்பு கொண்டாலும் கூட, அவர் நிலையை நினைத்துப் பாருங்கள்.

உண்மையில், ரத்தம் தேவைப்படும் அந்த குழந்தை  சென்னையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியிலிருந்து ஒரு நண்பர் ரத்தம் தர முன் வரக்கூடும். (இது பரவாயில்லை. விசாகப்பட்டினம், மும்பை, திருவனந்தபுரம் இங்கிருந்தெல்லாம் கூட அழைப்புகள் வரும். மாநில எல்லைகள் கருணை மனக் குறுஞ்செய்திக்கு கிடையாது). அவரிடமிருந்து ரத்தம் பெறுவது என்பது யதார்த்தத்தில் சாத்தியமில்லாத விஷயம்.

நண்பர்களே, இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். முதலாவது குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்று உதவ எண்ணும் அன்பர்களுக்கு, இப்படி ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால், முதலில் அதிலிருக்கும் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இப்போது ரத்தம் தேவையா என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள். இதில் பெரும்பாலான எண்கள் அணைத்து வைக்கப் பட்டிருக்கும்.(பின்னே, ஒரே நாளில் ஐயாயிரம் பேர் phone செய்தால் மனுஷன் என்ன ஆகறது.) தேவை என்பது உறுதியானால் மட்டுமே forward செய்யுங்கள். 

இரண்டாவது விஷயம், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு. உங்களுக்கு தேவைப் படும் ரத்தம் பெரும்பாலும் உங்கள் ஊர் அரசு மருத்துவமனையிலேயே இருக்கும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என்றால், கட்டமைப்பு வசதி கொண்ட பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் ரத்த வங்கிகளிலும், சிறிய மருத்துவமனை என்றால் தனியார் ரத்த வங்கிகளிலும் உங்களுக்கு தேவையான வகை ரத்தம் கிடைக்கும். (இங்கல்லாம் கிடைச்சா எதுக்கு message அனுப்பறோம், அப்படின்னு சொல்றீங்களா? நியாயம் தான்.) இதிலெங்கும் ரத்தம் கிடைக்கவில்லை என்னும் சூழலில்,  நம்மை சார்ந்த உறவினர்களிடம், நண்பர்களிடம், Lions club, Rotary club போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் முயற்சித்துப் பார்க்கலாம். அங்கும் கிடைக்கவில்லை என்றால், வேறு வழியே இல்லை. Message அனுப்பிவிட வேண்டியது தான். ஆனால் message அனுப்பும் போது அவசியம் குறிப்பிட வேண்டியது, தேவைப்படும் ரத்த வகை, ரத்தம் தேவைப் படும் இடம் (ஊர், மருத்துவமனைப் பெயர்), எந்த தேதியில் தேவை (இதை குறிப்பிடவில்லை என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்காவது அழைப்பு வந்து கொண்டே இருக்கும்), தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை மறக்காமல் தெளிவாக குறிப்பிடுங்கள். இதன் மூலம் காலம் கடந்த செய்திகள் பரப்பப்படாது. தொலை தூரத்து ஊர்களை சார்ந்தவர்கள் தொடர்பு கொள்ள மாட்டார்கள். இதனால் கணக்கற்ற அழைப்புகள் கட்டுப் படுத்தப்படும்.

Message அனுப்பி இரத்தம் கிடைக்குமா என பதட்டத்தோடு காத்திருப்பதை விட, உடனடியாக ரத்தம் கிடைக்க எளிதான வழி ஒன்று சொல்லட்டுமா?

ரத்தம் எதுவும் தேவைப் படாமல், சாதாரணமாக நாம் இருக்கும் சூழலிலேயே, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ரத்த வகையினை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ரத்த வகைக்கும், அதே ரத்த வகையை சேர்ந்த, குறைந்தது ஐந்து நபர்களையாவது உங்கள் நலன் விரும்பும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிலிருந்து தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலை  குடும்பத்தில் எல்லோருக்கும் தெரியும்படி பொதுவில் வையுங்கள். அவசர காலங்களில் குடும்பத்தில் யாரோ ஒருவர் பாதிக்கப் பட்டாலும், மற்றவர்களால் அந்த பட்டியலிலிருக்கும் பாதிக்கப்பட்டவரின் ரத்த வகையை சார்ந்த நண்பரோ உறவினரோ உடனடியாக தொடர்பு கொள்ளப்படுவார். அவசியமான, அரிதான ரத்தம் உடனடியாக கிடைக்கும், பதட்டம் எதுவும் இல்லாமலே.

வியாழன், செப்டம்பர் 29, 2011

நட்பு...



கவிதை

இலக்கியம்

நிலவு

 மலைக்காடு

பயணம்

மனிதர்கள்

உணவு

பாடல்

திரைப்படம்

புகைப்படம்

புத்தகம்

நாம்

வாழ்வே பேரானந்தம்!

சனி, செப்டம்பர் 24, 2011

கவசமா? தெவசமா?

மோசமான சாலை விபத்தால் மூளையில் நான்கு இடங்களில் இரத்தக்கட்டு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நண்பர் HDFC பாலா விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்...


                      மந்திரி: மன்னா! நீங்க போருக்கு போகும் போது 
                                    மறக்காம கவசம் போடுறீங்களே ஏன்? 

                      மன்னர்: கவசம் போடலன்னா எனக்கு தெவசம் 
                                     பண்ணிடுவாங்களே!

(தலை கவசம்... உயிர் கவசம்... ஹெல்மெட் அணியுங்கள்.)

(நண்பர் ஆ.பாலச்சந்திரன் அனுப்பிய குறுஞ்செய்தி)

வியாழன், செப்டம்பர் 22, 2011

தமிழில் புகைப்படக் கலை



தமிழில் புகைப்படக் கலை நடத்திய தற்செயலான எழுத்துக்களுக்கான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மின்படம். 

காக்கைகளிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்த வழி தவறி வந்த ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைக்க சென்ற போது எடுத்தது.ஆந்தையை காப்பாற்றியதற்கும், நல்ல படம் எடுக்க நல்ல சூழலை ஏற்படுத்தி தந்ததற்கும்  நண்பர் சந்தோஷிற்கு நன்றிகள். மேலும் அற்புதமான ஒரு கேமரா வாங்கி என்னை ஊக்கப்படுத்தும் நண்பர் வெங்கடேசனுக்கும் எனது நன்றிகள்.

மேலதிக விவரங்களுக்கு,

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

காக்கும் இயற்கையை காப்போம்



அம்மா!

நமக்கு உணவளித்து
உறங்க இடம் தருபவள்.
நாம் அனுபவிக்கும் 
அத்தனை நலன்களுக்கும் 
அடிப்படை அவள்.

அவளுக்கு உடல் சுகவீனம் 
வரும்படி செய்தது அறிவீனம்.
அவளுக்கு உடல் தகிக்கிறது.
எனக்கு மனம் தவிக்கிறது.

வாகன பயன்பாட்டை 
வாய்ப்புள்ள போதெல்லாம் தவிர்த்தல்,
குளிரூட்டி, குளிர் பதனப் பெட்டி
பயன்படுத்தாமல் பொறுத்தல்,
மின் சாதன பயன்பாட்டை
முடிந்த வரை குறைத்தல்,
டீ கப், கேரி பேக்
பயன்பாட்டை வெறுத்தல்,
காய், கனிக்காகவாவது 
மரங்களை வளர்த்தல்
போன்றவை அவள்
சூட்டை தணிக்கும். நம்மை 
சுகப்பட வைக்கும்.

நன்றிகடனாக இல்லை என்றாலும்
எதிர்கால சந்ததியின் 
எதிர்காலம் கருதி 
காக்கும் இயற்கையை காப்போம்.

சனி, செப்டம்பர் 10, 2011

வாழ்தல்?



இறந்த பின் சவப்பெட்டி.
இருக்கும் வரை
தொலைகாட்சிப்பெட்டி.


திங்கள், செப்டம்பர் 05, 2011

ஆசிரியர்களே... பெருமை கொள்ளுங்கள்!




ஆலன் ஆக்டேவியன் ஹ்யும் என்ற  ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் நலனுக்காகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் திலகரின் வருகைக்கு பிறகு தான் முகம் மாற ஆரம்பித்தது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரசை போராட செய்தார். அவரது தலைமையில் காங்கிரஸ் செயல் பட்டு கொண்டிருந்த காலம். இதோ சுதந்திரம் கிடைக்கப் போகிறது என நாடே நம்பி கொண்டிருந்தது. அப்படி சுதந்திரம் கிடைத்தால், திலகர் தான் பிரதமர் என நாடெங்கும் பேச்சிருந்தது. இது குறித்து திலகரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு திலகர் சொன்ன பதில்... "பிரதமரா? நானா? ஒருக்காலும் இல்லை. நான் ஆசிரியன். என்னால் நூறு பிரதமர்களை உருவாக்க முடியும். இந்தியா சுதந்திரம் பெற்றதும் நான் எனது ஆசிரியப் பணிக்கு திரும்புவேன்."

பெருமை கொள்ளுங்கள் ஆசிரியர்களே... எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான பணியை செய்து கொண்டிருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.

தனி வகுப்பு எடுக்காமல், ஒழுக்கத்தில் மாணவர்களுக்கு உதாரணமாக விளங்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

சனி, ஆகஸ்ட் 27, 2011

என் விகடன்...

சுதந்திர தினத்தன்று அகரம் சித்தாமூர் என்ற கிராமத்தில் மரம் நட சென்ற போது நான் எடுத்த ஒரு மின் படத்தை  இதே வலைப்பூவில் சுதந்திர தினம் !?! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட எனது நண்பன் சௌந்தரராஜன், என்னை ஆச்சரியப் படுத்த எனக்கு தெரியாமல் விகடனுக்கு அனுப்ப, அது இந்த வார ஆனந்த விகடன் - என் விகடன் - புதுச்சேரி இதழில் ஸ்மைல் பிளீஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளது.



(படத்தை பெரிதாக்க அதன் மீது சொடுக்குங்கள்)

அதில் தவறுதலாக நண்பன் சௌந்தரராஜன் பெயர் அச்சாகி இருந்தாலும், நல்ல தரமான மின்படம் எடுக்கிறேன் என்ற மன நிறைவை தந்ததற்காக நண்பனுக்கும், தரமான மின்படத்தை அச்சேற்றி உற்சாகம் தந்ததற்காக என் விகடனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் அவசியம் நன்றி சொல்ல வேண்டிய இன்னொருவர்  நண்பர் வெங்கடேசன். என் மீதும் நம்பிக்கை வைத்து Panasonic FZ100 Camera வாங்கிய அவருக்கும் எனது நன்றிகள்.

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

அன்னா-விரதம்...



அநேகமாக ஆறாம் வகுப்பு படிக்கையில் என ஞாபகம். "அப்போ மட்டும் நான் இருந்திருந்தா வெள்ளைகாரங்களை உண்டிவில்லாலேயே அடிச்சு விரட்டி இருப்பேன்டா" நண்பர்கள் மாரிமுத்து மற்றும் தண்டபாணியிடம் பேசியது நினைவிருக்கிறது. அந்த ஆவல் இப்போது ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கும் அன்னாவிற்கு ஆதரவாக களமிறங்க செய்தது.

கடந்த 22 ம் தேதி  நான் சார்ந்துள்ள இயக்கம் சார்பாக விழுப்புரம் ஆட்சியரகம் எதிரில் வலிமையான லோக்பாலை வலியுறுத்தி  உண்ணாவிரதம் இருந்தோம். இதற்கு கிடைத்த ஆதரவு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான நாங்களே எதிர்பாராதது. நாங்கள் அழைத்தவர்கள் மட்டுமல்லாது தானாகவே முன் வந்து பலர் கலந்து கொண்டனர்.

கணவனும் மனைவியுமாக சிலர் பங்கெடுத்தனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கூட்டி வந்திருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர், தன் கணவரிடம் வாகனத்தை நிறுத்த சொல்லி இருவருமாக சிறிது நேரம் உட்கார்ந்து சென்றனர்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விப்பட்டு,  சுதந்திரப்போராட்ட தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் (95 வயது) புதுவையிலிருந்து வந்து கலந்துகொண்டதும், இதே நாளில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளின் கூட்டத்திற்கு வந்த, இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட திரு. புண்ணியகோடி, மாற்று திறனாளிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் நெகிழ்ச்சி அளித்தது.

வலிமையான லோக்பால் நடைமுறைக்கு வந்துடும்ங்க. நம்பிக்கை இருக்கு.

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

காவல் தெய்வம்!!!



பூட்டி இருந்தது கோவில்.
உள்ளே இருந்தது
காவல் தெய்வம்!
                       
                       -ரா.சுப்பிரமணி


வியாழன், ஆகஸ்ட் 18, 2011

நேதாஜி




மாவீரர் நேதாஜி அவர்களின் நினைவு நாள் இன்று (அரசு ஆவணங்களின் படி). ஆனால், நம்மில் பலர் அவர் அந்த விபத்தில் இறந்ததாக நம்பவில்லை.

எனது நண்பன் சௌந்தரராஜன், தனது கனவு நாயகனான அவர் புகைப்படத்தின் கீழே இப்படி எழுதி இருக்கிறான், "மரணமெல்லாம் மகாத்மாவுக்கு தான். மாவீரனுக்கல்ல"

சுதந்திரம் வேண்டி இந்தியாவில் எல்லோரும் போராடி கொண்டிருக்க, அதற்கு நல்லதொரு வாய்ப்பாக வந்தமைந்தது இரண்டாம் உலகப் போர். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஓரணியில் இருக்க, எதிர் அணியில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இருந்தன. எதிரிக்கு எதிரி நண்பன் எனும் படி, பிரிட்டனை எதிர்ப்பவர்களுடன் கூட்டமைத்தார் நேதாஜி. போரில் வென்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் என ஒப்பு கொண்டு பிரிட்டனுக்கு எதிராக போராட இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.

ஆனால் எதிர்பாராவிதமாக ஆகஸ்ட் 6, 1945 அன்று ஜப்பானிய நகரங்களில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு, உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. தன் அணி தோற்றத்தாலும், தான் எதிர்த்த பிரிட்டன் வென்றதாலும், தனது வியூகத்தை மாற்ற ஜப்பான் ராணுவத்தின் உதவியுடன் தைவானில் விமான விபத்தில் தான் மரணமடைந்ததாக ஒரு செய்தியை பரப்பி, ஜப்பான் வழியாக ரஷ்யாவிற்கு சென்றார். (2005 ல் மத்திய அரசால் நேதாஜியின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷன், அவர் தைவான் விமான விபத்தில் இறக்கவில்லை என்றே அறிக்கை அளித்தது.)

அவர் பகவான்ஜி என்ற பெயரில் சாமியாராக உத்திர பிரதேசத்தில் அயோத்திக்கு அருகில் ராம்பவன் என்ற கிராமத்தில் வாழ்ந்தார் என உறுதியாக நம்புபவர்கள் இருக்கின்றனர். இருவரது உருவ அமைப்பும், பழக்க வழக்கமும், ரசனையும், நண்பர்களும், கையெழுத்தும் ஒரே மாதிரி இருந்ததாக கூறுகின்றனர். TIMES பத்திரிக்கையும் நேரு அவர்களின் மரணத்தை காண வந்த சுபாஷை போலவே இருக்கும் ஒரு சாமியார் படத்தை போட்டு அவர் சுபாஷாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தது.

இப்படியெல்லாம் இருந்த சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நேதாஜியின் ஓட்டுனராக இருந்த 107 வயதாகும்  திரு.நிஜாமுதீன் அவர்கள், விபத்து நடந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பர்மா, தாய்லாந்து எல்லை அருகில் உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் அவரை இறக்கி விட்டதாக கடந்த 12 ம் தேதி கூறி உள்ளார்.

தேசிய அளவில் புகழின் உச்சியில் இருந்த ஒரு மனிதர், தன்னை மறைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எளிமையாக வாழ்வது என்பது சாதாரண விஷயமல்ல. உண்மையிலேயே அவர் மாவீரர் தான். அரசின் காவலையும் மீறி Great Escape ஆனதாலோ, யுத்த நேரத்தில் நீர்மூழ்கியில் பயணித்ததாலோ மட்டுமல்ல. இப்படி ஒரு எளிய வாழ்கை வாழ்ந்ததாலும் தான்.

குறிப்பு: பகவான்ஜி 16 செப்டம்பர் 1985 இல் காலமானார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் உங்கள் பணம் (நன்கொடை) திருப்பி தரப்படும் என்ற உறுதி மொழியுடன்

ஆசாத் ஹிந்த் வங்கியால் வெளியிடப்பட்ட (ஒரு  லட்ச)   ரூபாய். (இணையத்தில் எடுத்தது)

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திர தினம் ! ? !



பாதுகாப்பு பணியில் 7000 போலீசார்,
பேருந்து, ரயில் நிலையங்களில் 72 மணி நேர சோதனை,
குண்டு துளைக்காத அறையில் முதல்வர் உரை,
வரலாறு காணாத பாதுகாப்பு,
சுதந்திர (!)(?)(!) தின விழா.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

பார்வைகள் !!!


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு
வெளியே வருகையில், வாயிற்படியை அடைத்து கொண்டு
பதிவு செய்ய காத்திருக்கும் இளைஞர்களின் கூட்டம்.

வெளியேற வழியில்லாமல் திணறிய நான்
நினைத்துக் கொண்டேன், "வழியே விட மாட்றாங்க!".

கூட்டத்திலிருந்து உள்ளே நுழைய முயன்ற பெண் சொன்னாள்,
"ச்சே! வழியே விட மாட்றாங்க!" 

சனி, ஜூலை 30, 2011

ஓணான்...

அன்பு என்றாலே அம்மா தான். மனிதரில் மட்டுமல்ல, எல்லா உயிர்களிலும். பிள்ளை பேறுக்காக தாய் வீடு தேடி, என் வீட்டு தோட்டம் வந்த ஓணான்!!!






புதன், ஜூலை 27, 2011

மகளிர் கல்லூரி...



மகளிர் கல்லூரியின் எதிரிலிருக்கும்
கோவிலில் இருந்து கொண்டு,
கல்லூரிக்கு வரும் பெண்களை
"சைட்" அடிக்கிறார்...

பிள்ளையார்!



(Mr. சிவபெருமான்! சீக்கிரம் அவருக்கு கல்யாணம் செய்யுங்க.)

செவ்வாய், ஜூலை 19, 2011

பயிரை மேயும் வேலி!

சென்னை தி.நகர் வாணி மகாலில் "இந்திய குடிமக்களாகிய நாம்" என்ற அமைப்பின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.N.விட்டல், ஆடிட்டர் திரு.குருமூர்த்தி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த திரு.செ.மா.அரசு, மேடைபேச்சாளர் திரு.சுகிசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
திரு. விட்டல் அவர்கள் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டாலே ஒருவர் தேர்தலில் நிற்பது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகளையும் ஊழல்வாதிகளையும் அரசியலிலிருந்து களைய முடியும். ஆனால் இதில் நிரபராதியான யாரோ ஒருவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப் படும் பொய் வழக்கின் மூலம் பாதிக்கபடலாம் இல்லையா? இதை தவிர்க்க, இத்தகைய வழக்குகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரே ஒரு மேல் முறையீட்டுக்கு அனுமதி உண்டு. அதுவும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆக ஒரு வழக்கு அதிகபட்சம் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டால், பொய் வழக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.
பணி இட மாற்றமும், தற்காலிக பணி நீக்கமும் ஆகிய இந்த இரண்டும் தான் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஆயுதம். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை தான் பணியிட மாற்றம் என்பது விதியாக்கப்பட வேண்டும். மேலும் அதிகாரிகளின் மேல் ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் உடனே தற்காலிக பணி நீக்கம் செய்யாமல் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டால் (முக்கியமான சில உயர் பணிகளின் அதிகாரிகள் [அவர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவு இருப்பார்கள்.] குறித்த விசாரணைகளுக்கு.) அந்த குற்றத்தின் உண்மை தன்மை குறித்து இரண்டே நாளில் ஆணையம் தகவல் அளிக்கும். இதன் மூலம் தேவையில்லாத தண்டனைகள் குறையும். அதிகாரிகள் மீதான அரசியல்வாதிகளின் ஆதிக்கம் குறையும். அதனால் நேர்மையான ஊழியர்கள் அச்சமில்லாமல் தங்கள் பணியை செய்ய முடியும். என பல உபயோகமான தகவல்களை கூறினார்.
 திரு.குருமூர்த்தி அவர்கள் கருப்பு பணம் எப்படி கடல் கடக்கிறது, அது ஏன் பொருளாதாரத்தில் ஒரு இன்றியமையாத விஷயமாகியது, அதை எப்படி ஒழிக்கலாம் என தெளிவாக பேசினார்.
அரங்கம் நிரம்பி நின்று கொண்டு பலர் கலந்து கொண்டது நேர்மையான சமூகம் சாத்தியம் என்ற நம்பிக்கை கொள்ள செய்தது. ஆனால் கலந்து கொண்ட பெரும்பாலோர் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
திரு.சுகிசிவம் அவர்கள் மன்றங்களின் (சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்) மாண்பு குறித்து பேசினார். அவர் எவ்வளவோ அற்புதமான விஷயங்கள் சொன்னார். அதில் ஆணி அடித்தர்போல மனதில் நின்றது....
"பட்டுகோட்டையார் ஒரு பாட்டு எழுதினர்.. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது அப்படின்னு. அவர் காலத்தில அப்படி இருந்தது. ஆனா இப்போ, இது ரெண்டையும் ஒரே ஆள் தானே செய்யறான்."
வருத்தப்பட /  மாற்றப்பட வேண்டிய விஷயம்.

சனி, ஜூலை 09, 2011

நெல்லையப்பர் கோவில்!!!

உலகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா? மதியா? என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன்.

சமீபத்தில் பணி நிமித்தம் திருநெல்வேலி செல்ல நேர்ந்தது. அப்போது நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றேன். எனது அந்த அனுபவம் இந்த இடுகையில்...

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப் பட்ட எழில்  கொஞ்சும் சிற்பங்கள் பல உள்ள அற்புதமான கோவில்.



இதோ, மேலே உள்ள படத்தை பாருங்கள். அர்ஜுனனோடு சண்டையிட்ட சிவனின் சிற்பம். கோவில் உள்ளே நுழையும் போது, கொடி மரத்தை தாண்டியதும் உள்ள கோபுரத்தின் கீழ் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்றில் இருக்கும் சிற்பம். இந்த சிற்பத்தின் எழில் சொல்ல இந்த ஒரு புகைப்படம் போதாது.

கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்தும், கொஞ்சம் முன்புறம் குனிந்தும் நிற்கிறார் சிவன். அர்ஜுனனோடு முறுக்கிக் கொண்டு நின்றதை சொல்லும் விதமாக சிற்பி, சிவனை இப்படி முறுக்கி கொண்டு நிற்க வைத்திருப்பாரோ!?!

நான் புரிந்து கொண்ட வரையில் அநேகமாக இந்த சிற்பம் - தூணோடு சேர்த்து - ஒரே கல்லால் ஆனதாகத்தான் இருக்கும். புவிஈர்ப்பு விதிகளின் படி இந்த சிற்பம் கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதை சமாளிக்கும் விதமாக தான், தூணின் மேற்புறம் கொஞ்சம் பெரியதாக மேல் தளத்தோடு பொருத்தப்படிருக்கிறது.

நாம் குனிந்து நின்றால் நம் கழுத்தில் இருக்கும் சங்கிலி எப்படி இருக்குமோ, அதே போல சிவனின் கழுத்தில் உள்ள மாலை பூமிக்கு செங்குத்தாக தொங்குகிறது. ஒரு மாலை மட்டுமல்ல, மாலை, சங்கிலி என மூன்று இப்படி தொங்குகிறது. (மெலிதான இவற்றை, உடையாமல் உடலிலிருந்து பிரித்து செதுக்குவது சவாலான செயல் தான்). அதே போலத்தான் அவர் கையில் வைத்திருக்கும் அந்த வில்லும்.

மேலும், பிடிமானம் ஏதுமில்லாமலேயே அந்தரத்தில் நிற்கிறது சிவன் ஏந்தும் வாள். அவர் இடுப்பில் தெரியும் மெல்லிய மடிப்புகள் அவர் ஆரோக்கியத்தை சொல்லுகின்றன. காலில் மூன்று வித அணிகள் அணிந்திருக்கிறார். அதிலும் முழங்காலில் அணிந்திருக்கும் சலங்கை கவனிக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதனை விட உயரமாகவும், நுணுக்கமாகவும், ரசிக்கும்படியும்  படைத்திருக்கிறார் சிற்பி.

இவர் தொடங்கி உள்ளே நிறைய சிற்பங்கள் ரசிக்கும் படியாக உள்ளன. குறிப்பாக காந்திமதி அம்மன். சுமார் 25 நிமிடங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றேன். அப்படி ஒரு வசீகரம். அந்த முகம் காந்தம் போல ஈர்த்தது நிஜம். (மதி வதனம் காந்தமாக ஈர்ப்பதால் தான் காந்திமதியோ?) (இங்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். "நேரமாச்சு கிளம்புங்க" என அங்கிருந்த யாரும் சொல்லவில்லை.)

ஒரு தூணின் இடை பகுதியை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சிறு தூண்களாக பகுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சப்தம் வரும்படி செதுக்கி இருக்கிறார்கள். இதுவே ஆச்சரியமான விஷயம் தான். மேலும் ஆச்சரியம் தரும் படி, இரு சிறு தூண்களுக்கு இடையில் உட்புறத்தில் அணில் சிற்பம் இருக்கிறது. இன்னும் ஆச்சரியம் அந்த சிறு தூண்களுக்கு இடையே கல்லால் ஆன பந்து இருக்கிறது. இந்த பெரிய தூண் ஒரே கல்லால் செய்யப் படவில்லையோ என சந்தேகிக்கும் அளவிற்கு நுணுக்கமான வேலை. (ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் என எந்த அறிகுறியும் தெரியவில்லை.)


பக்தியோ, கலை ஆர்வமோ, மன்னன் அளித்த வெகுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும் காலத்தால் அழியாத காவியத்தை கற்களில் வடித்த சிற்பிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

குறிப்பு: ரதியும் அழகானவள் தான். ஆனால் முருகன் சன்னதியில் இருக்கும் ஒரு தூணில் மன்மதனோடு காட்சி தரும் ரதியின் மூக்கை எந்த முண்டகலப்பையோ உடைத்திருக்கிறான். அதனால் அவள் அழகு குறைந்து காணப்படுகிறாள். (காந்திமதியை விட நீ அழகு கம்மி தான் என சிற்பியிடமே ரதி மூக்குடைபட்டிருப்பாளோ?)


வெள்ளி, ஜூலை 08, 2011

அடி உதவுவது போல...



இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்!
வாங்கிக்கொள்....
 
வள்ளுவனிடம்.
                           
                            - அறிவுமதி

http://arivumathi.wordpress.com/ கடைசி மழைத்துளி..

ஞாயிறு, ஜூலை 03, 2011

புதிய தலைமுறை...

நமது புதிய தலைமுறை பத்திரிக்கையின், கடந்த 23.06.2011 இதழின், நடுப் பக்கத்தில்

சோதிடம் பாருங்கள்.
எதிர்காலம் அறிய அல்ல...
கிளியின் சிறிதுநேர விடுதலைக்காக.

என ஒரு சுவரொட்டி இருந்தது. இந்த கருத்தோடு நான் முரண்பட்டதால், அதை மறுத்து புதிய தலைமுறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். எனது கருத்தையும் மதித்து இந்த இதழில் அதை வெளியிட்டிருக்கும் புதிய தலைமுறை இதழுக்கும், ஆசிரியருக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




(புகைப்படத்தை பெரிதாக்க அதன் மீது சொடுக்குங்கள்)






ஞாயிறு, ஜூன் 26, 2011

Hr.பாஸ்கர்



நண்பர் ஜெயவசந்தன் அவர்கள் ஒருநாள் ஒரு DVD ஐ கொடுத்து "உங்கள்  நோய் எதுவானாலும் எந்த வைத்தியமும் இல்லாமலேயே சரியாகும். எந்த பத்தியமும் இல்லை. யோகா, உடற்பயிற்சி தேவை இல்லை. இதை பார்த்து  முடித்த சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சுமார் ஆறு மணி நேரம் இது ஓடும், செல்போனை அணைத்து வைத்து விட்டு பார்" என ஆவலை தூண்டினார்.  அதன்படி ஒருநாள் இரவு சுமார் 7 மணிக்கு பார்க்க ஆரம்பித்து நள்ளிரவு ஒரு மணிக்கு தான் முடிந்தது. (விடிந்தால் தமிழ் புத்தாண்டு - ஏப்ரல் 14).

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்ற  வள்ளுவரின் இந்த மூன்று வார்த்தைகளுக்கு விளக்கம் அந்த ஆறு மணி நேர உரை. அந்த இரவிலேயே  அவர் சொன்ன படி செயல்பட துவங்கினேன்.  மிக சரியாக இரண்டாவது நாளில் எனக்கு தீரா தொந்தரவாக இருந்த செரிமான பிரச்சினை சரியாகிப் போனது. உடனே அவரை தொடர்பு கொண்டு எங்கள் ஊரில் நீங்கள் வந்து பேச வேண்டும் என நான் சார்ந்துள்ள அமைப்பு சார்பில் அழைப்பு விடுத்தேன். மலேசியாவில் நிகழ்ச்சி இருப்பதால் அங்கு போய் வந்ததும் விழுப்புரத்தில் நிகழ்ச்சியை வைத்து கொள்ளலாம் என ஜூன் 26 ம் தேதியை ஒதுக்கி தந்தார். எங்கெங்கு காணினும் பணம் என்ற இன்றைய சூழலில், "எவ்வளவு தர வேண்டும்?" என கேட்டதற்கு, "உங்கள் விருப்பம். இல்லை என்றாலும் பரவாயில்லை" என்றார். அதன்படி வந்தார். சிறப்பாக பேசினார். அவர் தம்பி திரு.சீனிவாசன் அவர்கள் எங்களோடு இரண்டு நாட்கள் இருந்து, நிகழ்ச்சி  சிறக்க  உதவி செய்தார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

 இந்த செவி வழி தொடு சிகிச்சை குறித்த மேலதிக விவரங்களுக்கு, http://anatomictherapy.org/

Related Posts Plugin for WordPress, Blogger...