ஞாயிறு, ஜூன் 26, 2011

Hr.பாஸ்கர்ண்பர் ஜெயவசந்தன் அவர்கள் ஒருநாள் ஒரு DVD ஐ கொடுத்து "உங்கள்  நோய் எதுவானாலும் எந்த வைத்தியமும் இல்லாமலேயே சரியாகும். எந்த பத்தியமும் இல்லை. யோகா, உடற்பயிற்சி தேவை இல்லை. இதை பார்த்து  முடித்த சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சுமார் ஆறு மணி நேரம் இது ஓடும், செல்போனை அணைத்து வைத்து விட்டு பார்" என ஆவலை தூண்டினார்.  அதன்படி ஒருநாள் இரவு சுமார் 7 மணிக்கு பார்க்க ஆரம்பித்து நள்ளிரவு ஒரு மணிக்கு தான் முடிந்தது. (விடிந்தால் தமிழ் புத்தாண்டு - ஏப்ரல் 14).

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்ற  வள்ளுவரின் இந்த மூன்று வார்த்தைகளுக்கு விளக்கம் அந்த ஆறு மணி நேர உரை. அந்த இரவிலேயே  அவர் சொன்ன படி செயல்பட துவங்கினேன்.  மிக சரியாக இரண்டாவது நாளில் எனக்கு தீரா தொந்தரவாக இருந்த செரிமான பிரச்சினை சரியாகிப் போனது. உடனே அவரை தொடர்பு கொண்டு எங்கள் ஊரில் நீங்கள் வந்து பேச வேண்டும் என நான் சார்ந்துள்ள அமைப்பு சார்பில் அழைப்பு விடுத்தேன். மலேசியாவில் நிகழ்ச்சி இருப்பதால் அங்கு போய் வந்ததும் விழுப்புரத்தில் நிகழ்ச்சியை வைத்து கொள்ளலாம் என ஜூன் 26 ம் தேதியை ஒதுக்கி தந்தார். எங்கெங்கு காணினும் பணம் என்ற இன்றைய சூழலில், "எவ்வளவு தர வேண்டும்?" என கேட்டதற்கு, "உங்கள் விருப்பம். இல்லை என்றாலும் பரவாயில்லை" என்றார். அதன்படி வந்தார். சிறப்பாக பேசினார். அவர் தம்பி திரு.சீனிவாசன் அவர்கள் எங்களோடு இரண்டு நாட்கள் இருந்து, நிகழ்ச்சி  சிறக்க  உதவி செய்தார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

 இந்த செவி வழி தொடு சிகிச்சை குறித்த மேலதிக விவரங்களுக்கு, http://anatomictherapy.org/

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், ஜூன் 21, 2011

அஹம் பிரம்மாஸ்மி!!!இறைவனிடம் கையேந்தும்
இரயில் வண்டி பிச்சைக்காரர் தான்
 நினைவுப் படுத்துகிறார்...
நான் இறைவன் என்பதை!.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

புதன், ஜூன் 15, 2011

என்னவாக போற?சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த சேது விரைவு வண்டியில் பயணிக்கும் போது, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இரு குழந்தைகள் என குடும்ப சகிதம் பயணித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்  அருகே அமர இடம் கிடைத்தது. பயண நேரத்தை பாதியாக குறைக்க சுமார் இரண்டரை வயது உள்ள அந்த பெண் குழந்தையிடம் "உம் பேர் என்ன?" என கேட்டேன். மூன்றாவது முறை கேட்கும் போது அவள் அண்ணன் பதில் சொன்னான். "அது பேரு பிரதிச்சா". 

அவனிடம் கேட்டேன், "உம் பேர் என்ன?". 
"எம் பேரு கிசோரு".

எத்தனாவது படிக்கற?
ஒன்னாம்ப்பு 

எந்த ஸ்கூல்ல படிக்கற?
உள்ளூர் ஸ்கூல்ல.

உன் டீச்சர் பேர் என்ன?
அமுதா டீச்சர்.

உன் பிரண்டு பேர் என்ன?
வெங்கடேசு.

ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்க?
தெரத்தி பிடிச்சு வெள்ளாடுவோம்.

பேசிக் கொண்டே இருக்கும் போது, "அய்யே அங்க பாரேன், வாளி மாதிரி இருக்கு பாரேன்" சிறுவன் கூடுவாஞ்சேரி L&T நிறுவனத்தின் கட்டிடத்தை பார்த்து வியக்க, 

"அந்த மாதிரி கட்டடம் கட்டறது கஷ்டம் தெரியுமா?. இதே மாதிரி நீ கட்டுவியா?" - நான்.
"ம், கட்டுவேன்.

பெரியவனானதும் நீ என்ஜினீயர் ஆக போறியா?" -நான்.
சிறுவன் ஆமாம் என்றதும், அவனை அள்ளி உச்சி முகர்ந்தாள் அவன் தாய்.

இப்போது என் இடது புறத்திலிருந்து சிறுமியின் குரல் கேட்டது. "நானு செய்யதம்மா ஸ்கூல்ல படிக்கப் போறேன்."

"அப்படியா! படிச்சுட்டு என்னவா ஆகப் போறீங்க?" - நான்.
"நானா...நானு படிச்சுட்டு அம்மா ஆகப் போறேன்!!!!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், ஜூன் 06, 2011

அப்துல் கலாம்...விழுப்புரத்தில் 22 சமூக நல அமைப்புகள் இணைந்து நடத்திய "LEAD VILLUPURAM 2020" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார், மேதகு முன்னாள் குடியரசு தலைவர் நமது அப்துல் கலாம் அவர்கள். அவருடன் கை குலுக்கி பேசும் சந்தர்ப்பம் அமைந்த, என் வாழ்வில் மறக்க முடியாத அந்த விழாவில் நடந்தது...

விழா நடப்பதற்கு முதல் நாளே விழா நிகழ்விடமான தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி காவல் துறையின் கட்டுப் பாட்டில் வந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரது விலாசமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் காவல் துறை வசம் இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தின் மாணவர்கள் / மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் விழா ஏற்பாட்டாளர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். (அந்த 100 ல் ஒருவராக ஊருக்குள் பலத்த போட்டி பல தளங்களிலும் இருந்தது.) எல்லோருடைய விபரங்களும் முன்னமே காவல் துறைக்கு அளிக்கப் பட்டிருந்தது. 

மதியம் 12.30 மணியளவில் நாயகன் அப்துல் கலாம் வந்தடைந்தார். விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்ட அறிவியல் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டவர் அங்கு நிறைய நேரம் செலவிட்டார். ஏழுமலை தொழில்நுட்பபயிலகத்தின் மாணவி செய்திருந்த காற்றாலையை பார்த்து நிறைய கேள்விகள் கேட்டார். மற்றொரு மாணவர் செய்திருந்த, கைரேகையை பயன்படுத்தி, இணையத்தில் வாக்களிக்கும் எந்திரத்தை பார்த்தவர், தேர்தல் ஆணையத்திடம் தரும்படி கூறினார். (முன்னதாக அந்த மாணவர் ஆங்கிலத்தில் எந்திரத்தை விளக்க, "தமிழ்ல சொல்லுப்பா" என்றார்). அரசூர் அருகே இருந்து பெயர் தெரியாத ஏதோ ஒரு ஊரின் அருட்கொடி நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் செய்திருந்த நீர்மூழ்கி கப்பலை பார்த்து "அடப் போடா!" என வியந்தார். பலரும் அவரிடம் கையொப்பம் வாங்க, மகிழ்வோடு போட்டு விழா மேடைக்குள் நுழைந்தார்.

இவருக்கு இந்த நாற்காலி என ஏற்கனவே எழுதி ஒட்டப் பட்டிருந்த இருக்கையில் அவரவர் அமர்ந்திருந்தனர். விழாவின் வழக்கமான நடைமுறைகள் எல்லாம் முடிந்து, "தானமும் தவமும் தான் செய்தக் கால் வானவர் நாடு வழி திறந்திடுமே" என்ற அவ்வையின் வரிகளை கொண்டு  பேசினார். 

பின் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், "ஊழலை எப்படி ஒழிப்பது?" என்ற மாணவனின் கேள்விக்கு "உங்கள் வீடுகளில், லஞ்சம் வாங்கும் பெற்றோரை பார்த்து, குழந்தைகளாகிய நீங்கள், லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொல்லுங்கள். லஞ்சத்தால் வரும் எந்த வசதியும் எனக்கு வேண்டாம் என நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என நான் நம்புகிறேன். அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம் உங்கள் கையில் இருக்கிறது. பெற்ற பிள்ளைகள் இழிவாக நினைக்கும் ஒரு செயலை எந்த ஒரு பெற்றோரும் செய்ய மாட்டார்கள். எனவே இளைய சமுதாயம் ஊழலுக்கு எதிராக திரும்பினால் நல்ல சமூகம் உருவாகும். சமூக உணர்வுள்ள நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள் என்றார்.

ஊழல் என்பது, எனக்கு வேண்டும் என்ற எண்ணத்தால் வருவது. அதை மாற்ற "நான் என்ன கொடுக்க முடியும்? / உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற எண்ணத்தை இளையவர்கள் மனதில் உண்டாக்க, தலைவரற்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளதாகவும், அதில் உறுப்பினராக http://www.whatcanigive.info/ என்ற தளத்தை தொடர்பு கொள்ளவும் சொன்னார்.

சுமார் இரண்டரை மணியளவில் கிளம்பியவர், வந்திருந்த அனைவர் மனதிலும் நம்பிக்கையை விதைத்திருந்தார். அவர் சொன்ன ஒரு வாக்கியம் ஆழமாக மனதுள் இறங்கியது.

என்னால் முடியும்.
நம்மால் முடியும்.
இந்தியாவால் முடியும்.


குறிப்பு: மேடையில் அவரால் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் இணைய பாதுகாப்பு ஆலோசகர், விழுப்புரம் மண்ணின் மைந்தர், திரு.பாலகிருஷ்ணன் அவர்கள், மறுநாள் தன் மலரும் நினைவுகளில் எங்கள் தெரு வழியே நடந்து சென்ற போது, எனது அழைப்பை ஏற்று என் வீட்டில் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது மேலும் மகிழ்வளித்தது.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, ஜூன் 05, 2011

உயிர் சங்கிலி...

''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.'' 

-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.
னித குல அறிவுக்கு எட்டிய வரையிலும் உயிர்கள் வாழ தகுதியான ஒரே கிரகம் நமது பூமி மட்டும் தான். இந்த பூமியில் மட்டும் தான் விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரிகள் என சுமார் 17,50,000 வகைகளில்  உயிரினங்கள் வாழ்கின்றன. அதாவது அமீபா, கரப்பான்பூச்சி, மீன், தவளை, குருவி, குதிரை, மனிதன்... என 17,50,000 வகை உயிரினங்கள். - ஆசிரியர் ராமமூர்த்தி மாணவர்களிடம்  உரையாற்றிக் கொண்டிருந்தார்.

எங்க போய் தொலைஞ்சா இந்த கழுத? காலையிலேயே காணாம போயிட்டா..!  "ஏய்! அம்மா வந்தா கூழ எடுத்துகிட்டு மாந்தோப்புக்கு வர சொல்லு". தன் நான்கு வயது மகனிடம் சொல்லிவிட்டு, விடு விடுவென வேலைக்கு புறப்பட்டான் ஏழுமலை. 

கண்டாச்சிபுரம் அருகில் அரசின் வனத்துறை காட்டை ஒட்டி அமைந்துள்ள தனியார் நிலத்தில் 51 ஏக்கரை செட்டியார் வாங்கி செப்பனிட்டு மா, பலா, வேங்கை, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ் தேக்கு போன்ற பல வகை மரங்களையும் நட்டு பராமரிக்க, ஆரம்பத்திலிருந்தே அவரிடம் துடியாய் விசுவாசமாய் வேலை செய்ததால் செட்டியார் ஏழுமலைக்கு (இன்னும் சிலருக்கும்) நிலத்திலேயே நல்ல வீடு கட்டி கொடுத்திருந்தார்.

...இத்தனை வகை உயிரினங்கள் இருந்தாலும் தன் ஆறாம் அறிவால் இவை அனைத்திலும் மனிதனே சிறந்தவனாக இருக்கிறான். உலகம் மனிதனின் கட்டுப் பாட்டிலேயே இயங்குகிறது... 

"கூழுக்கு தொட்டுக்க தொவையல் செய்ய கீர பறிக்க போனேன். அதுக்குள்ள கிளம்பியாந்துட்ட! கொஞ்ச நேரம் இருந்தா என்னவாம்?" கேட்டுக் கொண்டே கூழை கணவனுக்கு கொடுத்தாள் வள்ளி. இங்க மரத்துக்கு தண்ணி பாச்ச வேண்டி இருந்துச்சு அதான் வந்துட்டேன். என அவளை சமாதானப் படுத்தினான் ஏழுமலை.

...உலகத்தின் உணவு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை மனிதனே அனுபவிக்கிறான். மீதி உள்ள ஒரு பங்கு உணவை மற்ற அனைத்து உயிரினங்களும் உண்ணுகின்றன. இதையும் அவை திருடி தின்பதாக கூறி அவற்றை மருந்து (!) அடித்து சாகடிக்கிறான் மனிதன்...

"ஒனக்கு ஒன்னு தரப் போறேன் வள்ளி" என அவளின் ஆவலை அதிகப் படுத்தினான் அவன். என்னாய்யா அது? விழிகள் விரிய கேட்டவளிடம், மரத்தடியில் கவிழ்த்து வைத்திருந்த கூடையை காட்டினான்.

...புலி, துருவக் கரடி, வேட்டை நாய், தேவாங்கு, புனுகு பூனை, காண்டாமிருகம், வௌவால், நட்சத்திர ஆமை, ஆந்தை, கழுகு என பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. ஒரு காலத்தில் இந்த பூமியெங்கும் காணப் பட்ட இந்த உயிர்கள் இப்போது சில நூறு மட்டுமே இருக்கின்றன...

ஆசையோடு கூடையை திறந்தவள் சந்தோஷத்தில் சிரித்தாள். "அட! புனுகு பூனை. எப்படி மாமா புடிச்ச? பகல் நேரத்துல வெளியவே வராதே?" ஆச்சரியத்தோடு கேட்டாள். 

"அது குட்டி. அதனால வழி தவறி வந்துடுச்சு போலருக்கு. மத்தியானத்துக்கு அடிச்சு குழம்பு வை". சொல்லி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

...உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு சங்கிலித் தொடர் போல இணைந்துள்ளன. மனிதன் இதில் ஒரு கண்ணி மட்டுமே...

வேலையை முடித்து விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு போனவன் தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். "பசிக்குது. சீக்கிரம் போடு" என்றான். "மாமா..." என்று தலையை சொரிந்த படி இழுத்தாள் வள்ளி. "என்னடி இழுக்கற?. பசிக்குது சோத்த போடு" என்றான். "இல்ல மாமா, சமைக்கும் போது நாய் கூட  விளையாடிகிட்டிருந்த நம்ம பய எம்மேல விழுந்து, உப்பு டப்பா குழம்பு சட்டில விழுந்துடுச்சு மாமா. குழம்ப வாயிலேயே வைக்க முடியல." சொல்லி விட்டு அப்பாவியாய் நின்றாள் வள்ளி. உழைத்த களைப்பும், பசியும், ஒரு சேர கோபமாய் அவளை பார்த்தவன், சோற்றில் தண்ணீர் ஊற்றி கரைத்து குடித்து விட்டு, "அதை அந்த நாய்க்கே போடு" என சொல்லி அகன்றான்.

...எந்த ஒரு உயிரினம் அழிந்தாலும் சங்கிலியின் ஒரு கண்ணி அறுபடும். மனித இனம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், மற்ற அனைத்து உயிரினங்களும் போற்றி பாதுகாக்கப் படவேண்டும்". ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

புதன், ஜூன் 01, 2011

தேன் சிட்டு...


ன் வீட்டு தோட்டத்தின் விருந்தாளி... அதிகபட்சம் மூன்று செ.மீ நீளமுடைய தேன்சிட்டு. ஆங்கிலத்தில் Humming Bird. தேனை மட்டுமே உண்டு வாழும் இது 360 டிகிரியிலும் பறக்கக்கூடியது. கொஞ்சம் அபூர்வம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...