வெள்ளி, டிசம்பர் 30, 2011

நாணயம் - 1

முன்னுரைக்கு முன்னுரை:

வாழ்வே பேரானந்தம் இன்று தன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல வழிகளிலும் எனக்கு உற்சாகம் தந்து உதவிய அத்தனை நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் மகிழ்ச்சி தெரிவித்து கொள்கிறேன்.

முன்னுரை:

உளுந்தூர்பேட்டைக்கு பதினைந்து கிலோமீட்டர் அப்பால், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வந்து செல்லும், அதிகபட்சம் அறுபது குடும்பங்கள் வசித்த, மின்சாரம் இல்லாத கூவாடு எனும் பாரதிராஜா கிராமத்தில் எனது தாய் வழி பாட்டனார் சுற்றி இருந்த பல ஊர்களிலும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார். சுமார் 18ஆண்டுகளுக்கு முன் அவர் பூவுடல் நீத்த நாளில் ஊரெல்லாம் திரண்டு அழுது கொண்டிருக்க, பசி தாங்காத நான் சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் வீடு முழுதும் தேடியும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வித்தியாசமான சில சில்லறை காசுகள் கிடைத்தன. அதை எடுத்துக் கொண்டு ஊரில் இருந்த ஒரே பெட்டி கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட போனவனுக்கு ஏமாற்றம். கடை பூட்டி இருந்தது. கடைக்காரரும் தாத்தாவுக்காக அழுது கொண்டிருந்தார். அப்புறம் தோட்டத்தில் கடலைக்காய் பறித்து சாப்பிட்டு பசி ஆறினேன்.

அந்த பிரிட்டீஷ் இந்திய சில்லறை காசுகளுடன் தொடங்கியது தான் எனது நாணயங்களுடனான சிநேகம். அது முதல் இன்றுவரை எல்லா வகையான  நாணயங்களையும் சேமித்து வருகிறேன்.

இது இந்திய நாணயங்கள் குறித்த ஒரு தொடர் பதிவு. ஆனால் நாணயங்களை Scan செய்து, செப்பனிட்டு எழுத வேண்டும் (கொஞ்சம் மெனக்கெட்டு உழைக்க வேண்டும்) என்பதால் தொடர்ச்சியாக எழுதுவேன் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் மாதத்திற்கு ஒன்றாவது எழுதிவிட முயல்கிறேன். இனி தொடர்...
                                                 *****************

உலகின் முதல் நாணயம் 

தி காலத்தில் பொருட்கள் பண்டமாற்று முறையிலேயே பரிமாறிக் கொள்ளப் பட்டன. இந்த பண்டமாற்று முறையில் பொருட்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பது சிரமமான விஷயமாயிருந்தது. அதே போல தேவையில்லாத பொருளையும் பண்ட மாற்றாக பெற வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இது போல சில அசௌகரியங்கள் நாணயத்திற்கான தேவையை உண்டாக்கின.

உலகின் முதல் நாணயம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் துருக்கியில் லிடியா என்ற இடத்தில் உருவாக்கப் பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் இந்தியாவிலும், கிரேக்கத்திலும் நாணயம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இந்தியாவில் திருவிதாங்கூர், குவாலியர், இந்தூர், ஜோத்பூர், கட்ச், மேவார், மைசூர், விஜயநகரம் உட்பட பல சமஸ்தானங்கள் பேரரசுகள் நாணயங்களை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நமது சேர, சோழ, பாண்டியர்கள் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.


திருவிதாங்கூர் சமஸ்தானம் 

இந்தூர் சமஸ்தானம்


16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவரை வீழ்த்திவிட்டு  புதுக்கோட்டையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார் ரகுநாத தொடைமான். அவரும் அவரது வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக செயல்பட , தனியாக நாணயம் வெளியிடுமளவிற்கு புதுக்கோட்டை சமஸ்தானதிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்திருந்தனர்.(கட்டபொம்முவை ஆங்கிலேயர்களிடம்  காட்டிக் கொடுத்து தங்கள் ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக தொண்டைமான்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு.) சம காலத்தில் தமிழகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரே நாணயம் இவர்கள் வெளியிட்ட, பொட்டு காசு என்று அழைக்கப் பட்ட "ஸ்ரீ விஜயா" என்று பொறிக்கப் பட்ட
புதுக்கோட்டை அம்மன் காசு தான்.

மேற்கண்ட நாணயத்திலிருந்து எனக்கு ஒரு விஷயம் புலப்படவில்லை. தமிழ் மன்னன் இராஜராஜன் தனது பெயரை தேவநாகரி மொழியிலும், தமிழக மன்னன் தொண்டைமான் தமிழல்லாத மொழியிலும் (அநேகமாக தெலுங்கு) நாணயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதியிலிருந்தே தமிழகத்தில் தமிழ் அகதியாகத் தான் இருக்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், டிசம்பர் 27, 2011

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!!!


மீபத்தில் பெருமழை பெய்த நாளின் மாலை வேளை அய்யா துரை.கருணாநிதி அவர்கள் தொலைபேசினார். தனது வீட்டின் எதிரில் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருக்கும் மனிதர்களின் இருப்பிடம் நீரால் நிரம்பி, உடைமைகள் எல்லாம் நனைந்து கையறு நிலையில் அவர்கள் இருப்பதால் முடிந்த அளவு ஏதாவது உதவுவோம் வாருங்கள் என அழைத்தார். நண்பர் ரங்ககுமாரையும் உடன் அழைத்துக் கொண்டு அவர் இருப்பிடம் சென்றேன்.

வளரும் நகரப் பகுதியில் காலியான மனைகளில் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருந்த சகோதரர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள். பிழைப்பு தேடி ஊர் ஊராய் அலைந்து கொண்டே இருப்பவர்கள். அதிக பட்சம் ஆறு மாதத்திற்கு மேல் ஒரே ஊரில் தங்காதவர்கள். பெங்களூருவிலிருந்து கிலோ கணக்கில் கை கடிகாரம் வாங்கி வந்து சில்லறையில் விற்பவர்கள்.  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற அளவு விற்பார்கள். மிகவும் சிறியவர்கள் வீட்டிலேயே விளையாடுவார்கள்.கூட்டமாக வாழ்பவர்கள் ஆதலால் துணைக்கு பலர் உண்டு. சில சிறுவர்கள் எப்போதாவது பிச்சை எடுத்து உண்பதும் உண்டு. இப்படியாக 120 பேர் - இருபத்து மூன்று குடும்பத்தினர் எல்லா வயதிலும் இருந்தனர்.

நாங்கள் போன போது அய்யா துரை.கருணாநிதி அவர்களும் அவரது மனைவியும் அவர்கள் அனைவருக்குமான உணவை  தயாரித்துக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் காய்கறி வெட்டி, பாத்திரத்தை (வாடகைக்கு எடுத்தது) அடுப்பில் ஏற்றியும் உதவிக் கொண்டிருந்தனர். பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்(!) நிறைந்திருந்த தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே ஊற்றிக் கொண்டிருந்தனர். அது திரும்பவும் உள்ளே வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் நனைந்திருந்ததால் சிறுவர்களும் ஆண்களும் வாய்ப்புள்ள அளவு ஆடை குறைந்திருந்தனர்.

அவர்கள் இரவு தங்க அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் அனுமதி பெற்றோம். அவர்களுக்கு துணி வாங்க, பொருளுதவிக்காக நண்பர் பாலாஜி அவர்களின் அறிவுரை படி வர்த்தமான் துணிக்கடை முதலாளியை சந்தித்தோம். விஷயம் சொன்னதும் உடனே நேரில் வந்து பார்த்தார். எங்கள் இரு சக்கர வாகனத்தை தவிர்த்து விட்டு சைக்கிளில் வந்தார். (அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தும் அவர் பயன்படுத்துவதில்லையாம்) இவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவர்களோடு நேரடியாக பேசினார். இது போல நடப்பது வழக்கமானது தான், அதனால் உதவி எதுவும் வேண்டாம் என்று அவர்கள் மறுக்க, இவர் குடும்பத்திற்கு ஒரு போர்வையாவது தருகிறேன் என கூறி நகர்ந்தார்.

அவரை வழியனுப்பும் விதமாக அவர் சைக்கிள் வரை நான் கூட போக, பதறி தடுத்தார். "வேண்டாங்க. எனக்காக நடக்காதீங்க. செருப்பு போட்டுருக்கீங்க. புல்லுக்கு வலிக்கும்" என்றார். (அவர் செருப்பு அணிவதில்லை.) எனக்கு ஓங்கி அறைந்தது போலிருந்தது. அவர் மீதான மரியாதை அதிகமானது.

சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சுமார் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள போர்வைகளை அதே சைக்கிளில் அவரே கொண்டு வந்து கொடுத்தார். எங்களையே விநியோகிக்கும்படி சொல்லி எங்களிடமே தந்து விட்டு நிமிடத்தில் அகன்றார். செய்தி தாளின் புகைப் படத்துக்காக சமூக சேவை செய்யும் அரிதார மனிதர்கள் மத்தியில் இப்படி ஒருவரா என நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம்.

எந்த கலவரமும் குழப்பமும் இல்லாமல் ராஜஸ்தானத்து சகோதரர்கள் தங்களுக்கான போர்வையை பெற்றுக் கொண்டு சிநேகத்துடன் சிரித்தார்கள்.

குறிப்பு: போர்வைக்காக காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.அவர்களுக்கு தமிழ் பேசத் தான் தெரியவில்லை ஆனால் புரிகிறது. நடிகர் விஜயின் குத்து பாடல்களுக்கு குதூகலமாக நடனம் ஆடினார்கள். கவலையின் ரேகை கூட அவர்கள் முகத்தில் இல்லை. இவ்வளவு சிரமத்திலும் இன்பமாகவே இருந்தார்கள். அதில் மிகவும் கவனம் கவர்ந்த ஒரு விஷயம், ஆடையே இல்லாத ஒரு சிறுவனின் பெயர்... பில்கேட்ஸ்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

பிருந்தாவனில் வந்த கடவுள்

நான் மிகவும் மதிக்கும் பதிவர் ஒருவர் எழுதிய கதை என்னை சங்கடப்படுத்தியதால் இந்த கதையை பதிவிடுகிறேன். இது நாகூர் ரூமி அவர்கள் எழுதி, கல்கி இதழில் (04/09/2011) வெளியானது. இந்த கதையின் முடிவில் உங்கள் கண்ணோரம் நீர் பூத்தால் நீங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள்.




ற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

தூரத்தில் வரும்போதே உட்கார்ந்திருந்த பலர் தங்கள் பிருஷ்டங்களை அள்ளிக்கொண்டு எழுந்தார்கள். ரயிலை நோக்கி முன்னேறினார்கள். அமீர் உட்கார்ந்திருக்கவில்லை. நின்றுகொண்டுதானிருந்தான். உட்காருவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும் அவனால் உட்காரமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.

ஆங்காங்கு ‘சிமெண்ட் பென்ச்’கள் இருந்தன என்றாலும் அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் அப்படி ஏதும் இல்லை. ஆனால் மேல் கூரையிலிருந்து இறங்கிய இரும்புத் தூண்களைச் சுற்றி திண்ணை மாதிரி அறுகோணவடிவில் சிமென்டில் கட்டியிருந்தார்கள். அதன்மீது மக்களும் தங்கள் லக்கேஜுகளையும் வைத்து அவர்களும் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களைப் போல அவனும் செய்ய முயன்றபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. அதாவது சூரியன் என்பது வானத்தில் இருப்பது மட்டுமல்ல, ரயில்வே நிலையங்களின் அறுகோணவடிவ சிமென்ட் தரையின் கீழும் இருப்பதுதான் என்பதுதான். மாலையைக் கடந்து அன்றைய நாள் இரவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோதும் காற்றில் கலந்திருந்த வெம்மையில் ஏற்கனவே தலைபூரா உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தது. இதில் அந்த தரையில் உட்கார்ந்து தன் பின்பக்கத்தையும் வெந்துபோகவிடுவதில் விருப்பமில்லாமல்தான் அவன் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால் எந்த உணர்வும் அற்றவர்களைப்போல பெண்களும் அந்த அறுகோணத் திண்ணையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததுதான் அவனை ஆச்சரியப்படுத்தியது. பெண்கள் மென்மையானவர்கள் என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. நிச்சயமாக ‘அதை’ வைத்துமட்டும் இருக்காது என்பது புரிந்தது. 

வழக்கம்போல அந்த பிச்சைக்காரன் “தம்பி, தம்பி” என்று சொல்லிக் கொண்டு ஊனமான ஒரு கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டு வந்து காசுகேட்டான். கிட்டத்தட்ட இருபது வருஷமாக அவனைப் பார்க்கிறான் அமீர். எந்த மாற்றமும் இல்லை. அவனுடைய கையைப் போலவே அவனுடைய வாழ்க்கையும் ஒரு இன்ச்கூட வளரவில்லை.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அமீருக்கு ரொம்ப கோபம் வந்தது. அவனை அப்படியே ரயில் வரும்போது உதைத்து சாகடித்தால் என்ன என்று தோன்றியது அமீருக்கு. சோம்பேறி நாய். பிச்சையெடுப்பதில் சுகம் கண்டுவிட்டது. சும்மா பேண்ட் ஷர்ட் போட்டிருந்தால் ‘அண்ணே’, ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தால் ‘தம்பி’. கையாலேயே அவனுக்கு இல்லை என்று சொல்லி வழக்கம்போல விரட்டினான். அப்போதுதான் ரயில் வந்து சேர்ந்தது.   

ஏற்கனவே நினைவுப் பெட்டியில் போட்டுவைத்திருந்த அனுபவங்களிலிருந்து ஒன்றை உருவிப் பார்த்துவிட்டு, இந்த இடத்தில்தான் எஸ்.சிக்ஸ் கோச் வந்து நிற்கும் என்று அனுமானித்தவனாக ஒரு இடத்தில் போய் நின்றான் அமீர். அந்த இடத்தில் சரியாக எஸ்.ஒன் கோச் வந்து நின்றதும் தண்டவாளங்கள் அவனைப் பார்த்து நகைத்து ஒலியெழுப்பின.

அதை உதாசீனப் படுத்தியவனாக தன் செவ்வக வடிவ ‘பேக்’கை தூக்கிக்கொண்டு ஓடினான் எஸ்.சிக்ஸை நோக்கி. தோள் பை இடது தோளிலேயே எப்போதும் இருந்ததால் அதைத் தனியாக தூக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. பெட்டிக்கு உள்ளே போனதும்தான் மூச்சே வந்தது. இனி அடுத்த வேலை எழுபத்தி இரண்டாம் எண்ணுள்ள இருக்கையைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதுதான். அப்பாடா என்றது மனது. முன்பொருமுறை – இல்லையில்லை பலமுறை – ‘ரிசர்வ்’ செய்யாமல் போய் பட்ட கஷ்டம் ஞாபகம் வந்தது.

ரயில் கிளம்பிவிட்டது. அவனைப் போலவே பல பயணிகள் இடம் கண்டுபிடிக்கும் வேட்டையில் மும்முரமாக இருந்தார்கள். ஒருவழியாக அவன் கண்டுபிடித்தபோது அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது.

மகாவீரர்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவனாக தனது டிக்கெட்டைக் காட்டினான். நல்ல வேளையாக அதற்கு மேல் எதுவும் பிரச்சனை ஏற்படவில்லை. எதிரில் உட்கார்ந்திருந்த அவளது குடும்பத்தினர் ஏதோ சொல்ல அவள் உடனே எழுந்து அங்கு சென்றுவிட்டாள். அங்கு போய் உட்கார்ந்ததும் சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.

வழக்கம்போல தன் ‘பேக்’கை காலுக்குக் கீழே கால் படும்படியாக வைத்துக்கொண்டு தோள்பையை தொடையின் மீது போட்டுக்கொண்டு அமர்ந்தான். வியர்த்து விட்டிருந்தது. பின்பக்க பாக்கெட்டில் இருந்த சென்ட் தடவிய கர்சீஃபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். வியர்வையைத் துடைக்கும்போது ஒருவித குளிர்ச்சியை கழுத்து உணர்ந்தது. அது இன்பமான உண்மையான குளிர்ச்சி அல்ல. ப்ளாஸ்டிக் பூக்களிலிருந்து வாசம் வருவது மாதிரி.

சுற்றிமுற்றிப் பார்த்தான். தன் பக்கத்தில் ஒருவரும் அவர் பக்கத்தில் ஒரு பெண்ணும். எதிரில் ஒரு அம்மா ஒரு குழந்தையுடன். அவள் பக்கத்தில் ஒருத்தர். ஒரு இடம் காலியாகத்தான் இருந்தது. அந்த மார்வாடி அம்மா ஏன் அந்த இடத்தில் உட்காராமல் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்தாள் என்று பதிலில்லாத ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டான்.

அந்த அம்மாவை மீண்டும் பார்த்தான். அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி  தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடி இந்த உலகத்தைப் பார்க்காமல் இருப்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷயம் என்று தோன்றியது. ஆனால் அதை இந்த உலகம் பார்க்காமல் இருக்கும்போதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல அவன் கண்ணை மூடிய அந்தக் கணமே யாரோ அவன் தொடையில் இடித்துப் புரியவைத்தார்கள். தன் பக்கத்து சீட்டில் இருந்தவர்தான். ஏதோ அவசரம் போல. எழுந்து சென்றவர் போகும் அவசரத்தில் அவனைக் கலைத்து விட்டுச் சென்றிருக்கிறார். மறுபடியும் நிம்மதியாகக் கண்களை மூடவேண்டுமெனில் அவர் திரும்பி வராமல் இருக்க வேண்டும்.

அது சொல்ல முடியாது. அப்படியே வராவிட்டாலும் ஓரத்தில் அவன் உட்கார்ந்திருந்ததால் காஃபி டீ போன்ற போகின்ற வருகின்ற எல்லாருமே அவனை இடித்துக்கொண்டு போகின்ற வாய்ப்பு உண்டு என்பதால் கண்களை மூடுவதை ஒத்திப்போட்டான். இருக்கவே இருக்கிறார் ஜே.கிருஷ்னமூர்த்தி என்று தோள்பையைத் திறந்து  “தெரிந்ததிலிருந்து விடுதலை” என்ற சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவருடைய புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

அழகான அட்டை. கரும் பச்சையில் கீழ்ப்பகுதி. லைட்டான பச்சையில் மேல் பகுதி. கீழே கட்டம் கட்டி ஜே.கே.யின் படம். பக்கவாட்டில். அவரைப் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. ஜாதி மதங்கள் போன்ற எல்லாம் அடையாளங்களையும் மீறிய முகங்கள் அவை. உண்மையின் அழகு மட்டுமே அதில் தெரிகிறது. தனக்குள் புன்னகைத்தபடி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

“சார், இது என்ன புக் பாக்கலாமா?”.

கேள்வி கேட்டவர் எதிரில் இருந்தவர்தான். இப்போதுதான் புத்தகத்தையே திறந்திருந்தான். அதற்குள் என்ன உபத்திரவம் இது என்று தலையைத் தூக்கினான். ஒன்றும் சொல்லாமல் புத்தகத்தை அவரிடம் கொடுத்தான். அவர் அதன் தலைப்பை ஒரு நோட்டம் விட்டவுடனேயே “அடடே, Freedom from the Known அருமையான புத்தகமாயிற்றே. சார் நான் ஜே.கே.யோட ரசிகன் சார். அவரோட முப்பது புஸ்தகம் இதுவரைக்கும் படிச்சிருக்கேன் சார். கேஸட்ஸ்கூட கேட்டிருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும் சார். நீங்க ஜே.கே. விரும்பி படிப்பிங்களா சார்?”

படபடவென பேசிவிட்டார். மனிதர்களின் அறிவுத்தாகம் அவன் மண்டையைக் காய வைத்தது. என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான். “நானும் படிச்சிருக்கேன்” என்றான் பட்டும்படாமல்.

அவர் விடுவதாக இல்லை. ‘’பார்த்திங்களா சார், இதுதான் தெய்வத்தோட அருள்ங்கறது. எப்படி நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோம் பாத்திங்களா?” என்றார்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது. அவரை எப்படி உடைப்பது என்று யோசித்தான். மனிதர்களை கடவுளை வைத்து எளிதாக உடைத்துவிடலாம் என்று தோன்றியது.

"தெய்வமாவது மண்ணாங்கட்டியாவது. எனக்கதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்றான் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.

அவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஆடித்தான் போய்விட்டார். திடீரென்று வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு மவுனம் அவரைக் கவ்வியது. கடவுளை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்ட ஒரு நன்றிகெட்டவன் கையால் தொட்ட புத்தகத்தை வாங்கிவிட்டோமே என்று தோன்றியது போலிருந்தது அவர் மேற்கொண்டு அமீரைப் பார்த்த பார்வை.

திடீரென்று அவரது கண்களில் ஒரு ஒளி தோன்றியது. அவனை மடக்குவதற்கான ஆயுதம் கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. சற்று நிமிர்ந்து கொண்டார். தைரியமும் நம்பிக்கையும் வரும்போது மனிதர்களின் உடல் தானாகவே நிமிர்ந்துகொள்கிறது.

“சார், தப்பா நெனச்சுக்காதிங்க, அப்ப நீங்க ஏன் ஜே.கே.யைப் படிக்கிறீங்க?”

எங்க படிச்சேன்? படிக்க ஆரம்பிச்ச உடனேயேதான் கேள்வி கேட்டு நிறுத்திவிட்டீர்களே என்று சொல்லமுடியவில்லை. ஒரு கணம் அமீரும் யோசித்தான்.

“ஏன் ஜே.கே.யைப் படிக்கிறேன்னா கேட்டிங்க? அவர் ரொம்ப அழகா இருக்காரு. அதனாலதான்” என்றான்.

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொன்ன பதிலைவிட மோசமான பதிலாக அது இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை அவருக்கு. கண்ணாடியைக் கழற்றினார். துடைத்துக் கொண்டார். ஒரு மோசமான நீல நிறத்தில் ஒரு பேண்ட் போட்டிருந்தார். சட்டையை வெளியில் விட்டிருந்தார். அரைக்கை சட்டை. அது ரொம்பவும் அழுக்காக இருந்தது. அவர் கைகள்கூட அழுக்காகத்தான் இருந்தன. குளித்தாரா என்பது தெரியவில்லை. அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவருக்குள் இருந்த கடவுளும் அழுக்காகத்தான் நிச்சயம் வியர்வையில் புழுங்கிக்கொண்டிருப்பார் என்று தோன்றியது அமீருக்கு.

“அப்ப அசிங்கமா இருந்தா ஜே.கே. படிக்க மாட்டிங்களா? கடவுள் இல்லைன்னு முடிவுக்கே வந்துட்டிங்களா சார்?”

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.  வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில் ‘சார்’ போட்டுப்போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

ஒவ்வொரு சாப்பாட்டு அய்ட்டமாக எடுத்தெடுத்து இலையில் வைப்பதைப் போல இருவரும் கடவுளைப் பற்றிய தங்களது கருத்துக்களை எடுத்தெடுத்து வைத்தனர். கடவுள் சார்பாகப் பேசியவர் பரமஹம்சர், விவேகானந்தர், முகமது நபி, வேதங்கள், கீதை, பைபிள், குர்ஆன் என்று எல்லா நூல்களிலும் ஞானிகளின் வாழ்விலிருந்தும் உதாரணங்களையும் வசனங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார்.

ஃப்ரெட்ரிக் நீட்சேயின் மறுப்புக்கும் வெறுப்புக்கும் தக்க பதில் சொல்லும் இயேசு கிறிஸ்துவைப் போல அவர் பேசிக்கொண்டே சென்றார். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பத்து நிமிஷத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துவிடும் என்று தோன்றியதால் அதோடு கடவுளை ‘கட்’ பண்ணுவது நல்லது என்று அமீர் முடிவு செய்தான். அந்த நேரத்தில்தான் அந்த உலக அதிசயம் நடந்தது.

ஒரு சின்ன பையன். ஒரு ஐந்தாறு வயதுக்குள்தான் இருக்கும். ஒரு காலியான பிஸ்லேரி பாட்டிலின் மீது ஏறி அதை இழுத்து இழுத்து சவாரி செய்துகொண்டே வந்தான். ஊனமுற்ற சின்னப்பையன். கூட யாருமில்லாமல் தனியாகத்தான் பிச்சை கேட்டுகொண்டே வந்தான். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. ஒல்லியான தனது கைகளை தூக்கிக்காட்டி “பசிக்கிது” என்று சொல்லிக்கொண்டே வந்தான். சிலர் சில்லரை போட்டனர்.  சிலர் சும்மா பார்க்காதமாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத்தேடியபோதுதான் அது நடந்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தை தான் பெற்ற பிள்ளையின் முகத்தை துடைப்பதைப் போல துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒரு ‘யூஸ்-அன்-த்ரோ’ தட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

ஊட்டும்போது அவள் யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏதோ தன் கடமையைச் செய்வது போலச் செய்தாள். ஊட்டி முடித்த பிறகு பையன் வாயை அவளே கழுவி விட்டு பின் தனது கர்சீஃபால் துடைத்து விட்டாள். அதற்குள் சென்ட்ரல் வந்துவிட்டிருந்தது. அவனை இறக்கி அந்த பிஸ்லேரி பாட்டில் வாகனத்தின் மீது மறுபடி ஏற்றிவிட்டு அவள் தன் அடிடாஸ் என்று போட்ட பையைத் தூக்கிக் கொண்டு இறங்கிப் போனாள்.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் சென்றிருந்தாள். இதுதான் சமயம் என்று அமீரும் ஜே.கே.யின் ரசிகரிடமிருந்து தப்பித்து வெளியில் வந்தான்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி  நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரதி!!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், டிசம்பர் 05, 2011

தமிழில் புகைப்படக்கலை - 2


ணக்கம் நண்பர்களே, குயில் தேடல் இடுகையில் நண்பர் சீனுவாசன் வீட்டில் கும்மாளம் அடித்ததை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது உங்கள் நினைவில் இருக்கலாம். அப்போது எடுத்த மின் படம் ஒன்றை,  "நண்பர்கள்" எனும் தலைப்பில் தமிழில் புகைப்படக்கலை (PIT) நடத்திய போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அந்த மின் படத்தை இரண்டாம் இடத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள் என்பதை படத்திலிருக்கும் அதே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



நண்பர்கள் (இடமிருந்து வலம்) :  HULK சௌந்தர், சந்தோஷ் (சந்தோஷமா இருக்கான் பாருங்க), டி-ஷர்ட் அணிந்திருப்பது மணி, கண்ணாடி அணிந்திருப்பது நான், எனக்கு எதிரில் செல்வம், எங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு கை மட்டும் தெரிகிறதே அது சீனுவாசன்.

இந்த படத்திலிருக்கும் நண்பர்களின் மகிழ்ச்சியை, விளையாட்டை, அது எடுக்கப்பட்ட அந்த கணத்தை பாராட்டி மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்த கிரேஸ், கங்கா, புனிதவதி, கோகிலா, சங்கீதா (யார் எடுத்ததுன்னு தெரியல!) தோழிகளுக்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தப் படம் செப்பனிடப் பட்டிருந்தால் முதல் பரிசுக்கு தகுதி உள்ளதாய் இருந்திருக்கும் என PIT நடுவர் குழு கருத்து தெரிவித்திருக்கிறது. இதை செப்பனிடாமல் அனுப்பி இரண்டாம் இடத்திற்கு இழுத்து வந்த சிறுமை அடியேனையே சாரும். (செப்பனிட வேண்டும் என்ற விஷயமே நடுவர் குழு சொன்ன பிறகு தான் புரிந்தது) அடுத்த முறை இவ்வாறு தவறுகள் நேரா வண்ணம் இயன்ற வரை பார்த்து கொள்கிறேன். 

எல்லோரும் கலந்து கொண்டு மகிழ்ந்த இந்த நிகழ்ச்சியில் வேலு, பிரசன்னா கலந்து கொள்ள முடியாமல் போனதும், கலந்து கொண்ட வைத்தி இந்த படத்தில் Out of frame இல் போனதும் வருத்தம் தரும் விஷயங்கள்.

வழக்கம் போல நண்பர் வெங்கடேசனுக்கு நன்றிகள்.

இது மாதிரி ஒரு சூழலை அமைத்து தந்ததற்காக சீனுவாசனுக்கும், எது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியாக குலாப் ஜாமூன் செய்து தந்து எங்களை அசத்திய சங்கீதா அக்காவிற்கும் (:P) எனது நன்றிகள். 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், டிசம்பர் 01, 2011

நல்ல நல்ல பிள்ளைகள்...



நண்பர் கோபிநாத் அவர்களின் அழைப்பின் பேரில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். LKG முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 120 குழந்தைகள் கலந்து கொண்டு கலக்கிய அந்த நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்.

விருந்தினர்களின் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை போன்ற பொதுவான சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு தொடங்கியது, குழந்தைகளின் குதுகலம். தனது பாதுகாப்புக்காக உடன் வந்திருந்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றோரின் கைகளை விடுவித்துக் கொண்டு உற்சாக வெள்ளத்தில் விளையாட தொடங்கினர் குழந்தைகள்.

வார்த்தை விளையாட்டு, பாட்டுக்கு பாட்டு, குழு நடனம் போன்ற குழு விளையாட்டுகளில் மட்டுமல்லாமல்; பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என அனைத்திலும் கலக்கினார்கள் குழந்தைகள்.

குழந்தைகளின் செய்கைகளுக்கு கை தட்டி, உற்சாகப் படுத்தி பாராட்டிக் கொண்டிருந்ததால் எளிதில் எங்களுடன் ஒட்டிக் கொண்டனர்.

"அம்மா இங்கே வா வா..." பாடிய மூன்று வயது சிந்து, "Twinkle, Twinkle little star..." பாடிய செல்வகுமார், காமராஜர் குறித்து பாடிய சரஸ்வதி, கொடி காத்த குமரன் பற்றி உணர்வுரை ஆற்றிய பிரான்சிஸ், அற்புதமாக நடனம் ஆடிய அர்ச்சனா, "Why this கொல வெறி..." பாடிய ஆல்பர்ட் கவனம் கவர்ந்தார்கள். பரிசும் பெற்றார்கள்.

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி 
இந்த நாடே இருக்குது தம்பி.
சின்னஞ்சிறு கைகளை நம்பி 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்,
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...

என நிஷா பாடிக் கொண்டிருக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைத்து கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. ஆம் நண்பர்களே, நிஷா உட்பட அங்கிருந்த குழந்தைகள் அத்தனை பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். யாரோ செய்த தவறுக்கு சிலுவை சுமப்பவர்கள். இதில் பலர் அன்னையும் தந்தையும் இல்லாதவர்கள். அரசாலும், தொண்டு நிறுவனங்களின் தயவாலும் உயிர் வாழ்பவர்கள். அவர்களுக்குள் இருக்கும் உற்சாகமும், சந்தோஷமும் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானது. நிச்சயம் இந்த வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்கப்படும் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் அர்ச்சனாவின் நம்பிக்கைக்கு முன் நான் மண்டியிட்டேன். 

இந்த இடுகை எய்ட்ஸ் குறித்த மக்களின் பொதுவான அருவருப்பான பார்வையிலிருந்து யாரோ ஒருவரின் பார்வையை மாற்றுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.

குறிப்பு: இன்று உலக எய்ட்ஸ் தினம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

புதன், நவம்பர் 30, 2011

மகிழ்ச்சி...



மாலை வேளை. வானம் நீர் தூவிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய சுப்பிரமணி உற்சாகமாக காணப்பட்டார். தலை துவட்ட துண்டு கொடுத்து விட்டு காபி போடப் போன மனைவி காயத்ரியிடம் கையோடு வாங்கி வந்திருந்த குலாப் ஜாமூனையும், பூவையும் கொடுத்தார்.

"என்னங்க விசேஷம்? மாசக் கடைசியில இனிப்பெல்லாம் தடபுடலா இருக்கு!" ஆவலுடன் கேட்டாள் காயத்ரி.

"ரொம்ப நாளா வர வேண்டி இருந்த அரியர்ஸ் பணம் இன்னிக்கு வந்துது. அதான்" என்றார்.

"எவ்வளவுங்க!"

"லட்சத்துக்கு நாலாயிரம் கம்மி"

"ஏங்க! தமிழ்நாடு பூரா கிளை வச்சிருக்க அந்த பெரிய நகை கடை நம்ம ஊர்லயும் கடை திறந்திருக்காங்களாம். நல்ல பெரிய கடையாம். மூணு மாடி. தங்கம், வெள்ளி, வைரம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாடியில. நெறைய டிசைன் இருக்காம். செல்வராணி சொன்னாங்க. நானும் என்னோட இந்த சங்கிலிய மாத்தணும்னு எவ்ளோ நாளா நெனச்சிக்கிட்டிருக்கேன். நகை கடைக்கு போகலாமாங்க?" காபியை கொடுத்துக் கொண்டே கேட்டாள் காயத்ரி.

"இந்த சங்கிலிக்கு என்ன, நல்லாத் தானே இருக்கு?"

"இல்லைங்க, இது பத்து வருஷத்துக்கு முன்ன நம்ம கல்யாணத்துக்கு அப்பா அம்மா செஞ்சு போட்டது. இப்போ இத விட அழகா நெறைய டிசைன் வந்துடுச்சி. வைரம் மாதிரியே ஜொலிக்கிற ஜிர்க்கான் கல்லு வச்சு, மரகதம், மாணிக்கம், கெம்பு எல்லாம் வச்சு, ரோடியம் பாலிஷ் போட்டு, பாம்பே கட்டிங், கேரளா மாடல் அப்படின்னு என்னென்னவோ வந்துருக்குங்க. வாங்க போயி பாத்துட்டு வருவோம்" ஆர்வமாக இருந்தாள் காயத்ரி.

நகை கடைக்காரன் ரேஞ்சுக்கு பேசறாளே! என நினைத்துக் கொண்டே, "தங்கம் இப்போ விக்கற வெலையில வாங்கித் தான் ஆகணுமா?" எனக் கேட்டார்.

"என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கறப்ப, கிராம் நானூறு ரூபாய்க்கு வாங்கினோம். இப்போ பாருங்க ஒரு கிராம் ரெண்டாயிரத்து ஏழு நூறு ரூபாவுக்கு விக்குது. தெனமும் ஏறிகிட்டே தான் இருக்கு. ஆனாலும் மக்கள் வாங்கி கிட்டே தான் இருக்காங்க. இப்போ கிரீஸ், அமெரிக்கா, இத்தாலி இங்கல்லாம் பொருளாதார நெருக்கடி இருக்கறதால தங்கம் இன்னும் விலை ஏற்றத்துக்கு தான் வாய்ப்பிருக்கறதா சொல்றாங்க."

நல்ல தெளிவா இருக்கா. ஒன்னும் பேச முடியாது என நினைத்துக் கொண்டே, "சரி போகலாம். நீ சொன்னா சரியாத் தான் இருக்கும்" என்றார்.

"சமத்து" என கணவன் முதுகில் செல்லமாய் தட்டி விட்டு நகை கடைக்கு கிளம்ப ஆயத்தமானாள். வானம் வெளுத்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் நகை கடையில் இருந்தனர்.

ஊழியர்களின் முக மலர்ச்சியும், ஏசியின் குளிர்ச்சியும் கூடவே மஞ்சள் வெளிச்சத்தில் தங்கம் தக தக வென மின்ன தேவ லோகத்தில் இருப்பதாக உணர்ந்தார் சுப்பிரமணி. "இவ்வளவு தங்கம் இந்தியாவுல இருந்துமா நாம வளரும் நாடு?" என ஆச்சரியப் படுமளவிற்கு தங்கத்தை குவித்து வைத்திருந்தார்கள்.

இரண்டு மணி நேரம், இருக்கும் எல்லா நகைகளையும் பார்த்து விட்டு முடிவாக ஒரு சங்கிலியை காயத்ரி தேர்ந்தெடுக்க, பழைய நகையை கொடுத்து கணக்கு போடும் போது, அதன் தரம் குறைவு என கடைக்காரர் அதன் மதிப்பை குறைக்க, கணக்கு சீட்டை வாங்கி பார்த்தார் சுப்பிரமணி. சீனுவாச ராமனுஜம் வந்தால் கூட கணக்கு புரியுமா என்பது சந்தேகம் தான். விளக்கம் கேட்ட போது எப்படி எப்படியெல்லாமோ விளக்கினார்கள், கடைசி வரை புரியவில்லை. வேறு வழி இல்லாமல் இருந்த பணத்தை கொடுத்து விட்டு, குறைந்த பணத்தை நண்பன் பாலுவை கடைக்கு கொண்டு வந்து தர சொல்லி (கடன் தான்) கொடுத்தார் சுப்பிரமணி.

இரண்டு லட்சத்துக்கு மேல விழுங்கிய அந்த சங்கிலி ஏனோ சுப்பிரமணிக்கு நிறைவை தரவில்லை. "இதுக்கா ரெண்டு லட்சம்!?" என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்கி இருந்தது.

வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். நகையை அழகிய பெட்டியில் வைத்துக் கொடுத்தார்கள். கூடவே சாப்பாட்டை சூடாக வைத்திருக்கும் ஹாட் பேக்கை பரிசாக கொடுத்தார்கள். உடனே காயத்ரி உச்சி குளிர்ந்து போனாள். "நாம வழக்கமா வாங்கற கடையில பர்ஸுக்கு மேல எதுவும் தர மாட்டாங்க. ரொம்ப கேட்டா கொஞ்சம் பெரிய பர்ஸா தருவாங்க. ஆனா இங்க நாம கேக்காமயே ஹாட் பெக்கேல்லாம் தராங்க!" சிலாகித்து பேசினாள் காயத்ரி.

நகை கடையிலேயே பார்த்த பாலு, அங்கிருந்து ஹோட்டலுக்கு போன போது அங்கே சந்தித்த இருவர், வேலை செய்யும் இடத்தில் குறைந்தது பத்து பேர், போன் பேசும் போது சிலரிடம் என பார்க்கும் எல்லோரிடத்தும் ஹாட் பேக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், நவம்பர் 28, 2011

கண்ணீர் அஞ்சலி...


லை கலைந்து
கன்னம் ஒட்டி
கண்கள் குழி விழுந்து
புடவை கசங்கிய  
ஒரு பாட்டி இருக்கிறார்
கண்ணீர் அஞ்சலி 
சுவரொட்டியில்.

இருக்கும் போது
சோறு போட்டிருக்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், நவம்பர் 21, 2011

குயில் தேடல்...

டந்து போன வசந்த காலத்தில் நமது கவனத்தை ஈர்த்த குயிலின் குரல்,

எங்கிருந்தோ கூவும் 
ஒற்றைக் குயில் 
எதிரொலிக்கிறது 
நீ இல்லாத 
என் தனிமையின் 
ஏக்கத்தை.

என என்னை கவிதை எழுத வைத்தது. பேருந்தில் அமர்ந்து கவிதையை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போது, வைரமுத்து "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?" என கேள்வியை எழுப்பினார். அட! அதானே, நாம இது வரை குயிலையே பார்த்ததில்லையே? என சுவாரசியம் பற்றி கொள்ள, குயில் தேட ஆரம்பித்தேன். 

கட்டிடக் காட்டில் குயிலை எங்கே போய் தேடுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்த போது,  "நம்ம கூகுளாரை கேட்டால் என்ன?" என யோசனை மின்னலென தோன்றியது. படங்கள் பிரிவில் அவரை கேட்டால், கௌதாரி, காக்கை, கரிச்சான் குருவி, குயில் பாட்டு பாடிய பாரதி, சின்ன குயில் சித்ரா, லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி என எதை எதையோ காட்ட, எனக்கு தலை சுற்றத் தொடங்கியது.

நண்பர் வெங்கடேசன் "வண்டலூர் ஜூ ல பார்க்கலாமேடா" என அருமையான ஒரு யோசனை சொன்னார். அதானே என ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் கேமரா சகிதம் ஆர்வத்துடன் கிளம்பினோம்.

வண்டலூரில், வெள்ளை நிறத்தில் மயில், மரம் ஏறும் கரடி (!), தங்க நிற சேவல் என எத்தனையோ விலங்குகள் இருந்தன. குயிலுக்கு கூண்டு மட்டும் இருந்தது. பெருத்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்.

சிதம்பரத்தில் இருக்கும் பறவை ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியத்தின் நினைவு வர, அவரிடம் தொலை பேசிக் கேட்ட போது, அவர் சொன்னார். "சொந்தமாக கூடு கட்டத் தெரியாத குயில், காகத்தின் கூட்டில் தனது முட்டைகளை இடும். இது தெரியாமல் குயில் குரலெடுத்து பாடும் வரை தன் குழந்தை என்றே காகம் குயிலை வளர்த்து வரும். குயிலில் ஆண் குயில் கருப்பாக காகம் போன்றும், கண்கள் சிவந்தும், பெண் குயில் கௌதாரி போல வரிகளுடனும் இருக்கும் என்றார். (கூகுளார் சரியாத்தான் காட்டி இருக்கார்)

குயிலை எங்கே பார்க்க முடியும் என்றேன் நான். வசந்த காலத்தின் காலை வேளையில் சென்னை மவுண்ட் ரோடில் கூட குயிலின் குரலை கேட்கலாம். ஆனால் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் என முடித்துக் கொண்டார். (அதனால தான் வைரமுத்து அப்படி கேட்டாரோ?)

அவர் அப்படி சொல்லி விட்டாலும் குயில் தேடல் மனதில் இருந்து அகலவில்லை. ஒருமுறை சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது, மதுராந்தகம் அருகே, நண்பர் சொன்ன அடையாளங்களோடு ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக, தட தடக்கும் ரயிலுக்கு அஞ்சாமல் தண்டவாளத்தின் சமீபத்திலேயே நின்றிருந்தது. உடனே ஆர்வ மிகுதியில் அவரை அழைத்து அடையாளம் சொன்னேன். "பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்ததா?" என கேட்டார். ஆமாம். ஒரு ஓடையின் ஓரமாகத் தான் நின்று கொண்டிருந்தது என்றேன். "அது நீர் காக்காங்க" என சொல்லி எனக்கு ஏமாற்றம் தந்தார்.

தேடி சலித்து கிட்ட தட்ட குயிலை மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு வசந்த காலம் வந்ததும், குயில் தனது இனிய குரலால் தன்னை எனக்கு நினைவு "படுத்தியது".

கருப்பாக எந்த பறவையை பார்த்தாலும் இது குயிலாக இருக்குமோ? என யோசிக்கும் அளவிற்கு குயில் என்னை தேட வைத்தது. இந்த சூழலில் நண்பர் சீனுவாசன் தனது வீட்டுக்கு நண்பர்கள் எங்களை - ஒன்று கூடல் - விருந்துக்கு அழைக்க, நாங்கள் சென்று விருந்தை சிறப்பித்தோம். உண்டு முடித்து, பாடிக் களித்து, விளையாடி மகிழ்ந்து வீடு திரும்ப வெளியே வந்த போது, கொஞ்சம் தூரத்தில் முள் புதரில், கருப்பாய் ஒரு பறவை. குயிலா? என விழித்துக் கொண்டிருக்கும் என் மனம் கேட்க, உடனே கையிலிருந்த கேமராவால் ஒரு மின் படம் எடுத்தேன்.


அடுத்த படம் எடுக்க எத்தனிக்கும் போது அது காணாமல் போயிருந்தது. நண்பர் பாலசுப்ரமணியத்திடம் கேட்ட போது சொன்னார். சாட்சாத் அது குயிலே தான்.

அது குயிலே தான் என அவர் சொன்ன வார்த்தையே, குயிலின் குரலாய் என் காதில் தேன் பாய்ச்சியது. அப்புறமென்ன என் ஓராண்டு கால தவம் இனிதே நிறைவடைந்தது. இப்போது நினைத்தாலும் குயில் குதுகலம் தருகிறது.

நன்றிகள்: குயில் குறித்து நிறைய சொன்ன நண்பர் பாலசுப்ரமணித்திற்கும், விருந்து வைத்து குயில் பார்க்க வகை செய்த நண்பர் சங்கீதா சீனுவாசனுக்கும்.



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, நவம்பர் 18, 2011

இந்தியா Vs அமெரிக்கா



மெரிக்காவில் பணியாற்றும் தம்பி ராதாகிருஷ்ணனுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது, அதிகளவு இந்தியர்களை எதனால் அமெரிக்கா பணியமர்த்தி இருக்கிறது என நான் கேட்க, அதற்கு அவன் சொன்ன பதில்...

ராதா: ஒன்னே முக்கால மூனால பெருக்கினா எவ்வளவு சொல்லு?

நான்: அஞ்சே கால் டா. ஏன் கேக்கற?

ராதா: இங்க, ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு போனேன். ஏழு டாலருக்கு பொருள் வாங்கினேன். கேஷியர் கிட்ட பத்து டாலர் நோட்டை கொடுத்துட்டு மீதி காசுக்காக நின்னேன். அவன் மும்முரமா எதையோ தேடிக்கிட்டிருந்தான். கொஞ்ச நேரம் பொறுத்து பாத்தும் அவன் தேடறத நிறுத்தல. மீதி காசும் தரல. நான் கடுப்பாகி அவன் கிட்ட "மீதி காசு குடு"ன்னு கேட்டேன். இரு, கால்குலேடரை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னான். 

நான்: அடப்பாவி!

ராதா: எனக்கு சிரிப்பு வந்தது. நான் அவன் கிட்ட பத்து விரலை காட்டி, "இதில ஏழு விரலை மடக்கினா, மீதி மூணு வருதா" அப்படின்னு நர்சரி வாத்தியார் மாதிரி பாடம் நடத்தினேன்.

நான்: ஸ்கூல்ல, அவன் படிச்சானா? படுத்து தூங்கினானாடா?

ராதா: மீதியையும் கேளு. பாடம் கேட்டுட்டு, நம்பிக்கை இல்லாமலா என்னன்னு தெரியல, "அது உன் கையில" அப்படின்னுட்டு, கால்குலேட்டரை தேட ஆரம்பிச்சுட்டான்.

நான்: ஹா!ஹா! எல்லார் கையிலயும் பத்து விரல் தானேடா இருக்கும். அது கூட தெரியாத மடையனா அவன்.

ராதா: இப்போ தெரியுதா, அமெரிக்காவில ஏன் இந்தியர்களுக்கு மவுசுன்னு.

நான்: இது மாதிரி ஆளுங்க இருக்கற வரைக்கும், இந்தியா ஒளிரும் டா.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், நவம்பர் 14, 2011

மழலை உலகம் மகத்தானது..!


சமீபத்தில் என் சகோதரியின் வீட்டிற்கு என் அம்மாவும், நானும் போயிருந்தோம். அது விடுமுறை சமயம் என்பதால், தங்கள் குழந்தைகளை (தமிழ் குமரன் [3 ம் வகுப்பு], தணிகை குமரன் [UKG]) என் சகோதரியின் வீட்டில் விளையாட விட்டு விட்டு, அவர்களின் பெற்றோர் அலுவல் காரணமாக வெளியில் போயிருந்தனர். 

சகோதரியின் மகன் பிரணவ் சம வயது உடையவன் ஆகையால் அவர்கள் அவனோடு ஓடிப் பிடித்தும்,  கணினியிலும், பாட்டியிடம் (என் அம்மாவிடம்) கதை கேட்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

உணவருந்தும் நேரம் என்பதால் என் அம்மா அவர்களை சாப்பிட கூப்பிட, அவர்கள் விளையாட்டிலேயே ஆர்வமாக இருக்க, அம்மா சொன்னார்கள், "ஒரு தோசை சாப்பிட்டா ஒரு முந்திரி பருப்பு தருவேன்(வறுத்தது). எத்தனை தோசை சாப்படறீங்களோ, அத்தனை தருவேன்" என்று சொல்ல, குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், அம்மா அவர்களுக்கு சொன்னபடியே முந்திரி பருப்பு கொடுக்க, தணிகை குமரன், அந்த நான்கு வயது குழந்தை சொன்னான், "பாட்டி, நான் ரெண்டு தோசை தான் சாப்பிட்டேன். எனக்கு நீங்க மூணு முந்திரி பருப்பு குடுத்திருக்கீங்க. இந்தாங்க." 

என் அம்மா: "பரவாயில்லை. சாப்பிடு"

தணிகை குமரன்: "இல்ல, இல்ல. எனக்கு ரெண்டு போதும்"



ஆம் நண்பர்களே. மழலைகள் உலகம் மகத்தானது. அவர்கள் எதிர்பார்ப்பது நம் அன்பையும், அரவணைப்பையும் தான். நாம் தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் பணம் துரத்துகிறோம். தேவையான பணம் கிடைத்த பின்னரும், துரத்துவதை நிறுத்த நமக்கு தெரிவதில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கு  அதிகமான எல்லாமே ஆடம்பரம் தான். 

நம்மில் எத்தனை பேர் ஒரு நாளில்  குறைந்தது ஒரு மணி நேரமாவது தங்கள் குழந்தைகளோடு (குழந்தைகளுக்காக அல்ல) செலவிடுகிறோம்? எத்தனை பேர், அவர்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்கிறோம்? அவர்களுக்கு இந்த உலகம் புதியது. அவர்களின் சந்தேகங்களை அவர்கள் நம்மிடம் தானே கேட்டு தெளிய முடியும். அவர்களுடன் பேசுவதில் நீங்கள் சுணக்கம் காட்டினால், யார் அவர்களிடம் ஆர்வமாக பழகுகிறார்களோ, அங்கே அவர்கள் ஈடுபாடு காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த சூழலில் இயல்பாகவே ஒரு இடைவெளி, நம்மோடு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த இடைவெளி சரி செய்யப்படாவிட்டால், காலப் போக்கில் நம்மிடமிருந்து அவர்கள் விலகி செல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

புகை பிடித்தல், மது அருந்துதல், வீட்டை மறந்து நண்பர்களே கதி என கிடத்தல், பெண்கள் பின்னால் சுற்றுதல் என எல்லா தவறுகளுக்கும் காரணம், அன்பு குறைபாடு தான். வீட்டில் சரியாக அன்பு கிடைக்கும் போது அவர்கள் அதை வெளியில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. 

குழந்தைகள் நலனுக்காக என நாம் அவர்களுக்கு சொத்து சேர்ப்பதை விட, நல்ல குணத்தை, பழகும் தன்மையை, பொருள் ஈட்டும் கலையை அவர்களுக்கு கற்று தரலாம். பொருள் ஈட்டும் கலையை கற்பது எவ்வளவு அவசியமோ, அதை விட அவசியம், நல்ல மனிதனாக வாழப் பழக்குவது. அதை உங்களை தவிர வேறு யாரால் அவர்களுக்கு கற்று கொடுக்க முடியும்? உங்களை விட அவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? 

அவனுக்காக நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் ஓடி ஓயும் போது, அவன் உங்களிடமிருந்து ஓடியிருப்பான். எனவே அவனோடு ஓடுங்கள். ஓடி விளையாடுங்கள். நண்பனாக அவன் உங்களை கருதும் படி அவனோடு பழகுங்கள்.

"நானென்ன அவனோடு பேசாமலா இருக்கிறேன்?" என கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளோடு உங்கள் மொழியில் பேசாதீர்கள். அவர்கள் மொழியில் பேசுங்கள். நீங்கள் சரியானபடி பேசி இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் படி உங்கள் குழந்தை இருப்பான். அவன் அப்படி இல்லை என்றால் நீங்கள் அவனோடு சரியாக பேசவில்லை என்று தான் பொருள்.

எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான இரு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று, அவனுக்காக நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறீர்கள் என்பதை அவனிடம் சொல்லாதீர்கள்.அவன் உணரும்படி, குறிப்பால் உணர்த்துங்கள். இரண்டு,அவன் உங்கள் குழந்தையாகவே இருந்தாலும், அவன் ஒரு உயிர். அவனுக்கென தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். 

எல்லோரும் இப்படி வாழ தொடங்கும் போது, உலகம் குற்றங்கள் அற்றதாக,  இனிமையானதாக மாறும்.


ஒரு கவிதை:

   றைவன் படைத்து 
   இயல்பு கெடாமல் 
   தொடரும் பட்டியலில் 
   இன்னமும் இருக்கிறது 
   குழந்தையின் சிரிப்பு.
                  (எங்கேயோ படித்தது)



குறிப்பு: நமது ஷைலஜா அக்கா ஒரு தொடர் பதிவை, தொடர சொல்லி இருந்தார்கள். இந்த இடுகை அதன் பேரில் எழுதப் பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எழுத சொன்னதற்கு அவருக்கு நன்றிகள். இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.


நால்வருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள். நல்லது நடக்கும். நம்புவோம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, நவம்பர் 11, 2011

மூங்கில் காடுகளே...

நான் - காடு, மலை, நதி, அருவி, பரந்த சமவெளி, பள்ளத்தாக்கு என இயற்கை அன்னையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மனதை தொலைத்தவன். அத்தகைய இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவன். சாலையில் செல்கையில் என் கவனம் கலைக்க மாறுபட்ட ஒரு மரமோ, சிறு குருவியோ போதுமானது. இயற்கையின் அக்கறை, கனிவு குறித்தும், மனிதனின் சிறுமை குறித்தும் சிந்திப்பவன். இயற்கையின் பெருமைகளை கூறும் இந்த பாடல் எனக்கு மந்திரம் போல.

சாமுராய் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் குரலில்  வைரமுத்துவின் வைர வரிகளில் நாம் மிகவும் ரசித்த பாடல்...



மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...                                   (மூங்கில்)

இயற்கை தாயின் மடியை பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து

திரிந்து... பறந்து... பறந்து...

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறது.
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ....

வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ                                        (மூங்கில்)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது.
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீடித்துக்கொள்கிறது.

மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ

ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...                                        (மூங்கில்)



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

முன்னுறை முக்கியம்




வணக்கங்க, எம் பேரு ராமகிருஷ்ணன். ITI வரைக்கும் படிச்சிருக்கேன். பக்கத்து ஊர் சக்கரை ஆலையில மெஷின் ஆப்பரேட்டரா வேலை செய்யறேன். எம் பொண்டாட்டி செங்கமலம், பெரிய பொண்ணு எட்டாவது படிக்கிறா. சின்னவ ஆறாவது. பூர்வீக சொத்துன்னு எதுவுமில்லைன்னாலும், சம்பாதிச்ச பணத்தில ஒரு வீடு, கொஞ்சம் நிலம், ஒரு வண்டின்னு வசதியாத்தாங்க போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை.

ராமகிருஷ்ணனுக்கு நல்ல மனசுங்க. யாருக்கு கஷ்டம்னாலும் ஓடி வந்து உதவி செய்வான். கஷ்டம்னு கேட்டா காசு குடுப்பான். பொறந்த நாள், தீபாவளி மாதிரி நல்ல நாள்ல அனாத புள்ளைங்களுக்கு சோறு போடுவான். கேசவன் பசங்களுக்கு கூட ஸ்கூல் பீஸ் இவன் தான் கட்டினான். கஷ்டப் பட்டு வளந்தவன் இல்லையா, அதனால மத்தவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு நெனைப்பான். அவன் பிரச்சினையே அது தான். நானா, நான் துளசிங்கம். ராமகிருஷ்ணன் கூட வேலை செய்யறேன்.

ஒருநாள் ஆலையில வேலை செஞ்சுகிட்டிருக்கும் போது துளசிங்கத்துக்கு அடி பட்டுடுச்சு. அடி கொஞ்சம் பலம் தான். ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போனோம். ரத்தம் ஏத்தணும்ன்னாங்க. நான் தான் குடுத்தேன். ரெண்டு நாள் கழிச்சு ஆஸ்பத்திரியிலிருந்து எனக்கு போன் பண்ணாங்க. ICTC ங்கற எடத்துக்கு வர சொன்னாங்க. என்னன்னு தெரியலயே, துளசிங்கத்துக்கு இப்போ பரவயில்லையேன்னு யோசனையோடவே போனேங்க."முன்னுறை இல்லன்னா முடிவுரை எயிட்ஸ்" அப்படின்னு சுவத்துல எழுதி இருந்ததுங்க. கூட்டம் அவ்வளவா இல்லை. டாக்டரை போயி பாத்தேங்க. அவர் சொன்னது தான் என் தலையில இடி விழுந்த மாதிரி ஆகிருச்சு. ஆமாங்க. எனக்கு எயிட்ஸ் இருக்குன்னார். செத்துடலாமான்னு ஒரு நிமிஷம் தோணிச்சு. டாக்டர், குடும்பத்தை ஞாபகப் படுத்தி, இதுவும் சாதாரணமான வியாதி தான். ஒழுங்கா மருந்து சாப்பிட்டா, கூட பத்து வருஷம் இருக்கலாம்னு தைரியம் குடுத்தார். என் குடும்பத்துக்கு என்னை விட்டா யாருங்க இருக்கா. நான் தானே அவங்கள பாத்துக்கணும்.

லாரி டிரைவர் சரவணன், ஒரு நா ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டான். அவன் பொண்டாட்டி சரசு, பொறந்த ஊருல ஆதரிக்க ஆள் இல்லாததால இங்கயே இருந்துட்டா. புள்ள குட்டி எதுவுமில்ல. பாவம், தனியா தான் கஷ்டப்பட்டா. வயல் வேலைக்கு போயி வயித்த கழுவிகிட்டிருந்தா. நம்ம ராமகிருஷ்ணனுக்கு தான் யாரு கஷ்டப் பட்டாலும் ஆவாதே, அதனால அவளுக்கு அப்பப்போ பணம் காசு குடுப்பான். அவன் அதோட நிறுத்தி இருக்கலாம். தயாள குணம் ரொம்ப அதிகமாகி ராமனா இருந்தவன், கிருஷ்ணனாயிட்டான். அவ மூலமா தான் இந்த வியாதி இவனுக்கு வந்துருக்கு. அவ மட்டும் என்ன பண்ணுவா பாவம். சரவணன் லாரிய எங்க பார்க் பண்ணானோ!

டாக்டர் கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவர் சரசுவ கூட்டிகிட்டு வர சொன்னார். அவளையும் பரிசோதிச்சு பாத்துட்டு அவளுக்கும் எயிட்ஸ் இருக்குன்னார். சரசு மூச்சு முட்ட அழுதா. என்னால தானே உனக்கு வந்தது. நான் உன் வாழ்கையை பாழாக்கிட்டேனேன்னு கதறி அழுதா. நம்மால வேற என்னங்க செய்ய முடியும். டாக்டர் அடுத்து சொன்ன விஷயம் கொஞ்சம் பயங்கரமா இருந்தது. செங்கமலத்தையும் கூட்டிகிட்டு வர சொன்னார். செங்கமலத்துக்கு சரசு விஷயம் தெரியாது. ஆனாலும், அவளாவது நல்லா இருக்கணுமே அப்படின்ற நப்பாசையில, எங்கே போறோம்னு எதுவுமே சொல்லாம அவளையும் கூட்டிகிட்டு டாக்ட்டர்ட்ட போனேன். அவளுக்கும் எயிட்ஸ் இருக்குனு டாக்டர் சொல்லிட்டார். சத்தியமா சொல்றேன். சாமியெல்லாம் இல்லீங்க. இருந்தா இப்படி நடக்குமா? ஒரு வாரத்துக்கு அவ யார் கூடவும் பேசலைங்க. என்னால அவ மொகத்த கூட பாக்க முடியல. ஒரு வாரம் கழிச்சு என் கிட்ட சொன்னா, "அவ ஏன் அங்க தனியா கஷ்டப் படணும். அவளையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுங்க". ச்ச! எப்பேர்பட்ட பொண்டாட்டி. இவளுக்கு போய் நான் துரோகம் செஞ்சேனே. இன்னும் ஏழு ஜென்மத்துக்கு எனக்கு நல்ல சாவே வராதுங்க.

சாதாரண ஜுரம் வந்தாலே சரியாக ஒரு மாசம் ஆகும். நிக்காம வயத்தால போகும். ஒரு சின்ன விஷயம்னாலும் உடம்பு தாங்காது. அடிக்கடி ஆஸ்பத்திரி போயி வருவாங்க. இதனால இவங்களுக்கு இந்த வியாதி இருக்கறது அரசால் புரசலா ஊருக்கு தெரிஞ்சு போச்சு. அண்ணே அண்ணேன்னு சுத்தி வந்தவன் எல்லாம் தூர போயிட்டான். அடிக்கடி லீவு போட்டதால வேலை போச்சு. உடம்புல பழைய தெம்பு இல்லாததால, தொடர்ச்சியா எந்த வேலைக்கும் போக முடியல. நிலத்தை வித்து, வண்டியை வித்து சாப்பிட்டாங்க. என்னால முடிஞ்சத அப்பப்போ குடுப்பேன். அதெல்லாம் பத்தாம கஜேந்திரன் கிட்ட கடன் வாங்கினான். கஜேந்திரனா? அவர் ராமகிருஷ்ணனுக்கு பக்கத்து வீட்டுக்காரர். வட்டிக்கு பணம் குடுக்கறவர். வீட்டு பத்திரத்தை வச்சு அப்படி, இப்படின்னு ரெண்டு வருஷத்துல லட்ச ரூபாய்க்கு மேல வாங்கிட்டான். கஜேந்திரனுக்கு பயம் வந்திருக்கும் போல. பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா தங்க இடம் வேணும்னு சொல்லி, இவன் வீட்டை எழுதி வாங்கிட்டார். தர வேண்டிய மீதி காசுக்கு ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்க ஒண்ணுக்கும் உதவாத ஆறு ஏக்கர் நிலத்த இவன் பேருக்கு கிரயம் பண்ணி குடுத்துட்டார்.

நாம யார என்னங்க சொல்ல முடியும்? எல்லாம் விதி. பேசவே பயந்த கிராமத்துல குடியிருக்க வீடு தருவாங்களா? அதான் இங்க பக்கத்து டவுனுக்கு, துளசிங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்துகிட்டு வந்துட்டோம். இங்க நம்ம கதை யாருக்கும் தெரியாதுங்கறதால பிரச்சினை எதுவுமில்லாம நல்லபடியா போயிகிட்டிருக்குது. நான் இப்போ பழ வியாபாரம் செய்யறேன். செங்கமலமும், சரசுவும் வீட்டு வேலை செய்யறாங்க. பசங்க இங்கயே ஸ்கூல்ல படிக்கிறாங்க. பணம் பத்தலன்னா துளசிங்கம் தான் தந்துகிட்டிருக்கான். நாம நல்லா(!) இருந்தா தான் கடவுளுக்கு புடிக்காதே! அங்க கிராமத்துல புதுசா பை-பாஸ் ரோடு வருதாம். நம்ம நிலத்து மேல தான் அது வருதுன்னாங்க. இன்னும் எவ்வளோ கஷ்டப்பட வேண்டி இருக்கோ தெரியலையே. ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா, அடுத்த நாளே செத்துடலாம். ஆனா எப்படி? அந்த நிலம் தான் இருக்கற ஒரே சொத்து, நம்பிக்கை.

ஆனா பாருங்க, ஆறு மாசத்துல சட சடன்னு ரோடு வேலை முடிஞ்சது. ரோடு நிலத்து மேல போகாம நிலத்த ஒட்டி போச்சு. இங்க டவுன்லருந்து மூணு கிலோமீட்டர் ஆச்சா, நல்ல இடம். இத பத்தி என் பிரண்டு கணேசன் கிட்ட சொன்னேன். அவர் ஆடலரசன் ரியல் எஸ்டேட்ல வேலை செய்யறார். அவர் விசாரிச்சுட்டு வந்து "ஏக்கருக்கு ஒரு கோடி வரைக்கும் குடுக்கலாம்" ன்னு சொன்னார்.

அப்புறமென்ன, ஒரு மாசத்துல நிலத்த வித்து பணத்த வாங்கி, சொந்தமா எனக்கும் துளசிக்கும் சேத்து பெரிசா ஒரு வீடு வாங்கி, மீதி பணத்த பேங்க்ல போட்டு, வர்ற வட்டியில சாப்டுகிட்டிருக்கோம். துளசி தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம அதே சக்கர ஆல வேலைக்கே போய்க்கிட்டிருக்கான். வைத்தியமெல்லாம் ஒழுங்கா நடக்குது. புள்ளைங்க நல்ல ஸ்கூல்ல நல்ல படியா படிக்கிறாங்க. மவராசன் மாதிரி மாப்பிள்ளைங்களை எங்க புள்ளைங்களுக்கு கட்டி வைப்போம்ங்கற நம்பிக்கை இருக்கு. நான் இன்னைக்கே செத்துட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல. சத்தியமா சொல்றேன்,  சாமி இருக்குங்க.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சனி, அக்டோபர் 22, 2011

கலாமுக்கு ஒரு கடிதம்



அய்யா வணக்கங்க,

நல்லா இருக்கீயளா? நீங்க நல்லா இருக்கணுங்க. ஆனா நாங்க இங்க நல்லா இல்லீங்க.எங்க எல்லாருக்கும் சோலி கொடுக்கப் போகுதுன்ற நெனப்போட இருந்த அணு உல , உசுருக்கு உல வச்சிடுமோங்கற பயத்துல நாங்க சோறு தண்ணி இல்லாம கெடக்கோம். சப்பான்ல வந்த சுனாமி எங்க தூக்கத்த காணாக்கிருச்சி.

கொஞ்ச நாள் முன்ன வரை எம் புள்ள  கூட படிக்க  முனுசாமி மவ அனு-வ தவிர வேற எந்த அணு பத்தியும் எனக்கு அவ்வளவா தெரியாது. சப்பான்ல சுனாமி வந்து அதனால அங்க ஆளுங்க பட்ட கஷ்டத்த பாத்து, அய்யய்யோ  நம்ம பக்கத்திலேயே பயங்கரத்த வச்சிருக்கமேன்னு அந்தான்னிக்கு ஒறக்கம் போச்சு. 

அந்தால ரெண்டு பேர் சேந்து பேசினா கூட இத பத்தியே பேச்சுனு ஆகிப் போச்சுங்க. அவங்கவங்க தனக்கு தெரிஞ்சத சொல்லுதாங்க. தெரியாதத தெரிஞ்சவங்கள்ட்டயிருந்து தெரிஞ்சிகிட்டோம்.

அணு தொழில்நுட்பம் எவ்வளவு ஆபத்தானதுன்னு, இப்போ எங்கள்ள ஒருத்தரா இருந்து எங்களுக்காக போராடிக்கிடிருக்க அய்யா உதயகுமாரன் ஜூ.வி-ல அணு ஆட்டம்  னு எழுதின தொடர் கட்டுரை அணுவோட கோர முகத்த புரிய வச்சுது.

வந்த சுனாமியில ஜப்பான் பட்ட கஷ்டத்த பாத்து இனிமே அணு சக்தியே உபயோகிக்க கூடாதுன்னு ஜெர்மனி முடிவு செஞ்சிடுச்சாம். சீனா சூரிய மின்சாரத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருச்சாம். நமக்கு எப்பங்க புத்தி வரும்?

உலகத்தோட மின் தேவையில வெறும் ஏழு சதம் மட்டுமே பூர்த்தி செய்யுற இந்த அணு உலைகளுக்காக நாம தர்ற விலை ரொம்ப அதிகம்னு சொல்லுதாங்க. இதுல விலைங்கறது பணம் மட்டுமில்லைன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அணுக்கழிவை என்ன செய்யறதுன்னு யாருக்குமே இன்னும் தெரியாதாமே! அதை வச்சுக்கிட்டு என்னங்க செய்யறது?

அமெரிக்காவுல 30 வருஷத்துக்கு முன்னாலேயே அணு உலை கட்டறத  நிறுத்திட்டாங்களாமே! (அப்புறம் எதுக்கு அந்த கருமாந்திரத்த நம்ம தலையில கொட்டறான்?) இப்போ செயல்பட்டுகிட்டிருக்க அணு உலைகளால வருஷத்துக்கு சுமார் 21000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் வருதாம். அதனால இயங்கிகிட்டிருக்கிற அணு உலையையும் நிறுத்துங்கன்னு சொல்லி நியுயார்க் கவர்னர் போராடிக்கிட்டிருக்காராம்.

ஜெய்தாப்பூர்ல கட்டுற அணு உலையால ஏதாவது பிரச்சினைன்னா, அத கட்டுற கம்பெனி பிரான்ஸ்-ஐ சேர்ந்ததுங்கறதால பிரான்ஸ் தான் அந்த கம்பெனிக்கு அபராதம் போடுமாமே! இது என்னங்க நியாயம்? நம்ம போபால்ல நடந்த கொடுமைக்கே, நம்ம சட்டத்தால, நம்ம நாட்டிலேயே ஒன்னும் செய்ய முடியல. அப்புறம் நாம எங்க பிரான்சுக்கு போயி வழக்காடறது?! அட, பொணமான பின்னால அவன் குடுக்கற பணம் நமக்கு எதுக்குங்க?

இந்தியாவுல இருக்கற அத்தனை அணு உலையையும் மூடணும்னு நாடு தழுவின அளவுல போராட்டம் நடத்தப் போறதா பாபா அணு ஆராய்ச்சி மையத்தோட முன்னாள் விஞ்ஞானி பரமேஸ்வரன் சொல்லுதாரு.  

எப்படி பாத்தாலும் அணு தொழில்நுட்பத்தால உலகத்துக்கு நல்லது இல்லை, அணு சக்திய உபயோகிக்காதீங்கன்னு நோபல் பரிசு வாங்கின பத்து விஞ்ஞானிங்க உலகத்துக்கு வேண்டுகோள் வச்சிருக்காங்க. அவங்களும் விஷயம் தெரிஞ்சவங்க தானே!

இது இப்படி இருக்கும் போது, இந்தியாவில் இருக்கற எல்லா அணு உலைகளுக்கும் கொடுத்திருக்க அனுமதிய ரத்து செய்யனும்னு முன்னாள் எரிசக்தி துறை செயலர் சர்மா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.கே.வேணுகோபால், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எல்லாரும் சேந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்காங்க.


எல்லாம் சரி, கரண்டுக்கு என்ன செய்ய? ன்னு எல்லாரும் கேக்குதாக. பெரும்பாலான வீட்டுல மொட்ட மாடி இருக்குல்ல, அதுல சூரிய தகட பொருத்தினா சூரியன் இருக்க வரைக்கும் நம்ம யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாம கரண்டு கெடைக்குமே. என்ன, செலவு கொஞ்சம் அதிகமாகும். உசுர விட காசா முக்கியம்?

இந்த உலை வந்தா நாங்க மட்டும் கஷ்டப்பட போறதில்லைங்க. யாருக்குமே புண்ணியம் இல்லாம அநியாயத்துக்கு கடல்ல கெடக்குற மீனெல்லாம் வேற செத்து மெதக்க போகுது.

பத்து நாள்ல உங்க கருத்த நீங்க சொல்லப் போறதா பேப்பர்ல பார்த்தேங்க. நீங்க நல்லவங்க. சாதனையாளனான சாமானியன்.எங்க மண்ணோட மைந்தன். இந்தியாவோட பெருமைக்குரிய அணு விஞ்ஞானி. உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியும். நீங்க பொறுப்புல இருந்த போது பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்சீங்க. எங்களுக்கெல்லாம் நல்ல புத்தி சொல்லுற நீங்க உங்க வேலையோட காரணத்தால, மனசு விரும்பாம தான் செஞ்சிருப்பீங்கனு நம்பறோம். அய்யா பரமேஸ்வரன் போல நீங்களும் உங்களோட கருத்த வெளிபடையா இப்போ பேசலாமே.

நீங்க சொல்லப் போற வார்த்தையில தான் எங்க புள்ளைங்களோட உசுரு இருக்குதுங்க....

                                                                                       இப்படிக்கு,

இடிந்து போய் கரையிலேயே உட்கார்ந்திருக்கும் 

                                                                                        மீனவன்


An Open letter to Mr.Manmohan Singh...



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், அக்டோபர் 18, 2011

புத்தம்புது பூமி வேண்டும்.




மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மா மழை போற்றுதும்...



பேருந்தின் 
ஜன்னலோரத்தில் நான்.

மேகம் கறுத்து 
என் தோளில் 
ஒரு துளி விழுந்த 
அதே நேரம் 
மண்ணிலும் ஒரு துளி. 
எது முதல் துளி?

வானில் 
பறவைக் கூட்டம் ஒன்று 
உற்சாக ஒலி எழுப்பி 
கடக்கிறது.

அவரைப் பந்தலின் கீழ் 
அண்ணி வயதொத்த பெண்ணுக்கு 
தலை சீவும் சிறுமி 
வானம் பார்த்து சிரிக்கிறாள்.

பேருந்தின் ஜன்னல்கள் 
பட படவென மூடப் படுகின்றன.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், அக்டோபர் 03, 2011

எருமையின் எமன்




கதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள் யாவும் உண்மையே.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கோடம்பாக்கம் ஆற்காட் ரோட்டின் போக்குவரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த போது, கைப்பேசி அழைத்தது. சாலையில் வண்டி ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்ற நல்ல விஷயத்தை நான் கடைபிடிக்க முயற்சி செய்வதால், யார் கூப்பிட்டது என்பதை கவனிக்கவில்லை. (கலெக்டரா கூப்பிட்டிருக்கப் போறார்? நம் உயிரை / நல்ல உடலை விடவும் கலெக்டரா முக்கியம்?) வீட்டுக்கு வந்த பின்யாரோ அழைத்தது குயிலா…” பாடிக்கொண்டே பார்த்தேன். பிரகாஷ் ஆனந்த் கூப்பிட்டிருந்தான்.

பிரகாஷ் ஆனந்த் - தினமும் விழுப்புரத்தில் இருந்து சிங்கார சென்னைக்கு (சிங்காரம் தானே உலக பணக்காரரா இருக்கணும்!) வேலைக்கு வந்து போகும் எனது நண்பன். வார விடுமுறைக்கு நானும் ஊருக்கு போவேன் என்பதால் கூப்பிட்டிருப்பான் என யோசித்துக் கொண்டே அவனை கைப்பேசியில் அழைத்தேன். “ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ல போறேன். வர்றியா?” என்றான். “முயற்சி பண்றேன். முடியலன்னா பாண்டிச்சேரில வர்றேன்என கூறி வைத்தேன்.

முகம் கழுவி, (துவைக்க வேண்டிய) துணிகளை எடுத்துக் கொண்டு, நண்பன் வெங்கடேசன் உதவியுடன் ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து, கோடம்பாக்கம் மின்வண்டி நிலையத்தில் இறங்கி, விழுப்புரம் வரைக்குமான பயணச்சீட்டு அங்கேயே எடுத்துக் கொண்டு, தாம்பரம் வந்து சேர்ந்த போது மணி மாலை 5.45. ஒன்பதாம் நடைமேடையில் 6.05 க்கு கிளம்ப வேண்டிய விழுப்புரம் பாஸஞ்சர் நின்று கொண்டிருந்தது.

அஞ்சு நிமிஷம் முன்ன வந்திருந்தா ராமேஸ்வரத்த பிடிச்சிருக்கலாம், நினைத்துக் கொண்டே எனது வண்டிக்காக காத்திருந்தேன். அதே தேநீர் வியாபாரி, அதே பார்வை இழந்த பிச்சைக்காரர், அதே காலை சுற்றும் நாய், இதனிடையே அருகிருந்த எல்லோரிடமும் ஓடி சென்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காத்திருத்தலின் அவஸ்த்தையை காணாமல் போகச் செய்திருந்தான். (குழந்தையின் அம்மா, வழியனுப்ப வந்த தனது தகப்பனிடம் பேசிக் கொண்டிருந்தாள்). ஆறு மணிக்கு எட்டாவது நடைமேடைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.

குழந்தையை கவனித்துக் கொண்டே இருந்ததில் கவனிக்க தவறி, சட்டென கவனித்தேன். மணி 6.12. கன்னியாகுமரியும், விழுப்புரம் பாஸஞ்சரும் இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆறு மணிக்கே கன்னியாகுமரி கிளம்பி இருக்கணுமே!, ஏன் இன்னும் கிளம்பல? என்ற சிந்தனையுடன் காதை தீட்டிக் கொண்டு அறிவிப்பை கவனித்தேன். நேரம் குறிப்பிடாமல் தாமதமாக கிளம்பும் என்று மட்டும் சொன்னார்கள். என்ன ஆச்சு என தெரிந்து கொள்ள பிரகாஷ் ஆனந்த்க்கு போன் செய்தேன்.

பெருங்களத்தூர் கிட்ட டிராக்ல எருமை மாடு வந்து அடிச்சு, ராமேஸ்வரம் எஞ்சினோட பிரேக் வால்வு உடஞ்சு போச்சு. அதான் எல்லா வண்டியும் நிக்குதுஎன்றான். “ஸ்பேர் எஞ்சின் தாம்பரத்துல இருக்குமாடாஎன்றேன். “இல்லைடா, எக்மோர்ல இருந்து வரணும். இல்லன்னா விழுப்புரத்துல இருந்து வரணும்என்றான்.

கன்னியாகுமரி, அடுத்தது விழுப்புரம் பாஸஞ்சர், அப்புறம் நிஜாமுதீன், அதுக்கப்புறம் தான் பாண்டிச்சேரி. என்னடா இது, எப்போ போய் சேருவோம்னே தெரியலயே, பஸ்ல போலாம்னாலும் இன்னைக்கு நிக்க கூட இடம் கிடைக்காது. மறுநாள் இரத்த தான முகாம் நடத்த வேண்டி இருந்ததால திரும்பியும் போக முடியாது. வேற வழியே இல்லை என காத்திருக்க முடிவு செய்தேன். இந்த களேபரங்களுக்கு நடுவில் என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்த அந்த குழந்தையை தொலைத்து விட்டிருந்தேன்.

நடைமேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது. காற்று வீசவே இல்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் இருந்தோம். அந்த தேநீர் வியாபாரியும், பார்வை இழந்த பிச்சைக்காரரும் தங்கள் வேலையில் மும்முரமாயிருந்தனர். அந்த நாயை காணவில்லை. பிரகாஷ் ஆனந்த் போன் செய்தான்.

வண்டிய மெதுவா நகத்தி வண்டலூர்ல லூப்ல போட்டுட்டான். இப்போ கன்னியாகுமரி எடுத்திடுவான். நான் அதில தான் போகப்போறேன். நீயும் வர்றதுன்னா வா.” என்றான். “இல்லைடா, நான் சூப்பர் ஃபாஸ்ட் டிக்கட் எடுக்கலடா. பாண்டிச்சேரி, விழுப்புரம் பாஸஞ்சர் எதை முதல்ல எடுக்கறானோ அதில வர்றேன்என்றேன்.

சரியாக 7.16-க்கு கன்னியாகுமரி கிளம்பியது. கூட்டம் கொஞ்சம் குறைந்தது. லேசாக காற்று வீசியது. 7.30-க்கு விழுப்புரம் பாஸஞ்சர் கிளம்பியது. நான் அதில் ஏறிக்கொண்டேன். எனது பக்கத்தில் கல்லூரி தோழர்கள் மூன்று பேரும், கணனி ஆசாமி ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் விடுமுறைக்காக ஊருக்கு செல்பவர்கள் தான்.

வழக்கம் போல பஸ்லயே போயிருக்கலாம். இவன் பேச்சை கேட்டு புதுசா டிரெயின்ல வந்தது தப்புடா.” கல்லூரி மாணவன் ஒருவன் குறை பட்டுக் கொண்டான். “ஒம்பது மணிக்கு மேல எங்க ஊருக்கு பஸ் இல்லைடாகவலைப் பட்டான் இன்னொருவன். “எங்க வீட்டுல தங்கிட்டு காலைல போடாஇது மூன்றாமவன்.

அஞ்சு டிரெயின் லேட். ஒரு ட்ரெயினுக்கு ஆயிரம் பேர்னு கணக்கு வச்சாலும் ஐயாயிரம் மணி நேரம் வேஸ்ட். இதுக்கெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாதா?” அலுத்துக் கொண்டார் சாஃப்ட்வேர் ஆசாமி.

கிளம்பும் அவசரத்தில் படிக்க புத்தகம் எடுத்து வைக்க மறந்து விட்டேன். எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. நான் மேலே ஏறி படுத்துக் கொண்டேன். ஒருவழியாய் வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்த போது மணி 10.30. ரொம்ப தாமதம் ஆனதால் என்னை அழைத்து செல்ல அப்பா ஸ்டேஷனுக்கே வந்திருந்தார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டதும் அம்மா கேட்டாள், “என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ லேட்?”. நான் நடந்ததையெல்லாம் சொன்னேன்.

அம்மா சொன்னாள், “பாவம்டா மாடு.”

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...