ஞாயிறு, ஜூன் 05, 2011

உயிர் சங்கிலி...

''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.'' 

-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.
னித குல அறிவுக்கு எட்டிய வரையிலும் உயிர்கள் வாழ தகுதியான ஒரே கிரகம் நமது பூமி மட்டும் தான். இந்த பூமியில் மட்டும் தான் விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரிகள் என சுமார் 17,50,000 வகைகளில்  உயிரினங்கள் வாழ்கின்றன. அதாவது அமீபா, கரப்பான்பூச்சி, மீன், தவளை, குருவி, குதிரை, மனிதன்... என 17,50,000 வகை உயிரினங்கள். - ஆசிரியர் ராமமூர்த்தி மாணவர்களிடம்  உரையாற்றிக் கொண்டிருந்தார்.

எங்க போய் தொலைஞ்சா இந்த கழுத? காலையிலேயே காணாம போயிட்டா..!  "ஏய்! அம்மா வந்தா கூழ எடுத்துகிட்டு மாந்தோப்புக்கு வர சொல்லு". தன் நான்கு வயது மகனிடம் சொல்லிவிட்டு, விடு விடுவென வேலைக்கு புறப்பட்டான் ஏழுமலை. 

கண்டாச்சிபுரம் அருகில் அரசின் வனத்துறை காட்டை ஒட்டி அமைந்துள்ள தனியார் நிலத்தில் 51 ஏக்கரை செட்டியார் வாங்கி செப்பனிட்டு மா, பலா, வேங்கை, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ் தேக்கு போன்ற பல வகை மரங்களையும் நட்டு பராமரிக்க, ஆரம்பத்திலிருந்தே அவரிடம் துடியாய் விசுவாசமாய் வேலை செய்ததால் செட்டியார் ஏழுமலைக்கு (இன்னும் சிலருக்கும்) நிலத்திலேயே நல்ல வீடு கட்டி கொடுத்திருந்தார்.

...இத்தனை வகை உயிரினங்கள் இருந்தாலும் தன் ஆறாம் அறிவால் இவை அனைத்திலும் மனிதனே சிறந்தவனாக இருக்கிறான். உலகம் மனிதனின் கட்டுப் பாட்டிலேயே இயங்குகிறது... 

"கூழுக்கு தொட்டுக்க தொவையல் செய்ய கீர பறிக்க போனேன். அதுக்குள்ள கிளம்பியாந்துட்ட! கொஞ்ச நேரம் இருந்தா என்னவாம்?" கேட்டுக் கொண்டே கூழை கணவனுக்கு கொடுத்தாள் வள்ளி. இங்க மரத்துக்கு தண்ணி பாச்ச வேண்டி இருந்துச்சு அதான் வந்துட்டேன். என அவளை சமாதானப் படுத்தினான் ஏழுமலை.

...உலகத்தின் உணவு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை மனிதனே அனுபவிக்கிறான். மீதி உள்ள ஒரு பங்கு உணவை மற்ற அனைத்து உயிரினங்களும் உண்ணுகின்றன. இதையும் அவை திருடி தின்பதாக கூறி அவற்றை மருந்து (!) அடித்து சாகடிக்கிறான் மனிதன்...

"ஒனக்கு ஒன்னு தரப் போறேன் வள்ளி" என அவளின் ஆவலை அதிகப் படுத்தினான் அவன். என்னாய்யா அது? விழிகள் விரிய கேட்டவளிடம், மரத்தடியில் கவிழ்த்து வைத்திருந்த கூடையை காட்டினான்.

...புலி, துருவக் கரடி, வேட்டை நாய், தேவாங்கு, புனுகு பூனை, காண்டாமிருகம், வௌவால், நட்சத்திர ஆமை, ஆந்தை, கழுகு என பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. ஒரு காலத்தில் இந்த பூமியெங்கும் காணப் பட்ட இந்த உயிர்கள் இப்போது சில நூறு மட்டுமே இருக்கின்றன...

ஆசையோடு கூடையை திறந்தவள் சந்தோஷத்தில் சிரித்தாள். "அட! புனுகு பூனை. எப்படி மாமா புடிச்ச? பகல் நேரத்துல வெளியவே வராதே?" ஆச்சரியத்தோடு கேட்டாள். 

"அது குட்டி. அதனால வழி தவறி வந்துடுச்சு போலருக்கு. மத்தியானத்துக்கு அடிச்சு குழம்பு வை". சொல்லி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

...உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு சங்கிலித் தொடர் போல இணைந்துள்ளன. மனிதன் இதில் ஒரு கண்ணி மட்டுமே...

வேலையை முடித்து விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு போனவன் தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். "பசிக்குது. சீக்கிரம் போடு" என்றான். "மாமா..." என்று தலையை சொரிந்த படி இழுத்தாள் வள்ளி. "என்னடி இழுக்கற?. பசிக்குது சோத்த போடு" என்றான். "இல்ல மாமா, சமைக்கும் போது நாய் கூட  விளையாடிகிட்டிருந்த நம்ம பய எம்மேல விழுந்து, உப்பு டப்பா குழம்பு சட்டில விழுந்துடுச்சு மாமா. குழம்ப வாயிலேயே வைக்க முடியல." சொல்லி விட்டு அப்பாவியாய் நின்றாள் வள்ளி. உழைத்த களைப்பும், பசியும், ஒரு சேர கோபமாய் அவளை பார்த்தவன், சோற்றில் தண்ணீர் ஊற்றி கரைத்து குடித்து விட்டு, "அதை அந்த நாய்க்கே போடு" என சொல்லி அகன்றான்.

...எந்த ஒரு உயிரினம் அழிந்தாலும் சங்கிலியின் ஒரு கண்ணி அறுபடும். மனித இனம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், மற்ற அனைத்து உயிரினங்களும் போற்றி பாதுகாக்கப் படவேண்டும்". ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது… [Reply]

nice.keep it up brother

K சொன்னது… [Reply]

..உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு சங்கிலித் தொடர் போல இணைந்துள்ளன. மனிதன் இதில் ஒரு கண்ணி மட்டுமே...


நமது நண்பரின் நல்லென்னதின்படி உயிர் இனங்களை அழிக்காமல் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மனிதகுளம் மென்மேலும் வளர்ச்சியடையும். வாழ்க விசு வளர்க அவரின் சமூகப்பணி

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

super!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நீண்ட நாட்களாய்
எனக்கொரு சந்தேகம்
கேட்கட்டுமா?

தேவதை
வசிக்கும் இடத்தை
சுவர்க்கம் என்று சொல்லாமல்
பூமி என்கிறார்களே?

குட்டிபிசாசு சொன்னது… [Reply]

ரதித்தேன். கதையையும் தகவல்களையும்.

Related Posts Plugin for WordPress, Blogger...