செவ்வாய், மார்ச் 15, 2011

கேட்டது கிடைத்தது!!!
1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்குரிய அய்யா திரு.கிருஷ்ணன் அவர்கள் "எண்பது, ஒன்பது... எண்ணூறு, தொண்ணூறு... எட்டாயிரம், தொள்ளாயிரம்... எண்பதினாயிரம், ஒன்பதினாயிரம்... இது தானே சரி. எப்படி எல்லாம் வரிசை மாறி வருகிறது?" என ஒரு கேள்வி கேட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எத்தனையோ கணித ஆசிரியர்கள் சொல்லாத பதிலை, நான் சற்றும் எதிர்பாராமல் என் தாய் தமிழ் சொன்னது. சுமார் இருபது ஆண்டு தேடல் இனிதே நிறைவடைந்தது.  [என் கணித ஆசிரியர் அய்யா கிருஷ்ணன் அவர்கள் இந்த பதிலால் மகிழ்ந்தது என் மகிழ்ச்சிக்கு மகிழ்வளித்தது] 


தமிழக அரசின் அரசவை புலவராக இருந்த திருக்குறளில் தோய்ந்த அனுபவம் உடைய பதின் கவனகர் அய்யா திரு.பெ.இராமையா அவர்களது மேடை நிகழ்வில் கேட்கப் பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் அடங்கிய புத்தகத்திலிருந்து...

......பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த பெற்றுள்ள சொல் "தொண்டு" என்பதாகும். தொண்டு என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது ஓட்டைகளை கொண்டது. 

இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழெனக் காலென பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
                                                     - பரிபாடல் 3 , வரி 75 -79


"தொண்டு" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...
                                                    - தொல்காப்பியம், 1358


"தொண்டு" படு திவவின் முண்டக நல்யாழ்.
                                                    - மலைபடு  கடாம் - 21


இந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப் பெற்றுவிட்டது. இந்த 'தொண்டு' என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாக சொல்லிப் பாருங்கள். ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும். அதாவது,

எட்டு
தொண்டு (சறுக்கிய சொல்)
பத்து.


எண்பது
தொண்பது (இது தான் இன்றைய ஒன்பது)
நூறு

எண்ணூறு
தொண்ணூறு
ஆயிரம்

எண்ணாயிரம்
தொள்ளாயிரம்
பத்தாயிரம்

எண்பதினாயிரம்
தொண்பதினாயிரம் 
இலட்சம்.

ஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ந்ததால் அதை நிரப்ப, எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது, ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்து இருந்த தொண்ணூறு என்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.

உங்களிடம் என் அன்பான வேண்டுகோள். இனிமேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களை காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலை சரி செய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.

நன்றி: கேட்டதும் கிடைத்ததும் - கவனகர் முழக்கம். 044 - 24490826  

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

ஹும் அருமை அருமை!... சரியா சொன்னீங்க! :)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
மல ஜலம் கழிக்க
பார்க்க கேட்க நுகர
ஜோடிகளை படைத்தான் இறைவன்!

நல்ல வேளை
வாயை விட்டுவிட்டு
பிறவற்றை மட்டும்
ஒரு ஜோடி படைத்தான்!

Related Posts Plugin for WordPress, Blogger...