அய்யா வணக்கங்க,
நல்லா இருக்கீயளா? நீங்க நல்லா இருக்கணுங்க. ஆனா நாங்க இங்க நல்லா இல்லீங்க.எங்க எல்லாருக்கும் சோலி கொடுக்கப் போகுதுன்ற நெனப்போட இருந்த அணு உல , உசுருக்கு உல வச்சிடுமோங்கற பயத்துல நாங்க சோறு தண்ணி இல்லாம கெடக்கோம். சப்பான்ல வந்த சுனாமி எங்க தூக்கத்த காணாக்கிருச்சி.
கொஞ்ச நாள் முன்ன வரை எம் புள்ள கூட படிக்க முனுசாமி மவ அனு-வ தவிர வேற எந்த அணு பத்தியும் எனக்கு அவ்வளவா தெரியாது. சப்பான்ல சுனாமி வந்து அதனால அங்க ஆளுங்க பட்ட கஷ்டத்த பாத்து, அய்யய்யோ நம்ம பக்கத்திலேயே பயங்கரத்த வச்சிருக்கமேன்னு அந்தான்னிக்கு ஒறக்கம் போச்சு.
அந்தால ரெண்டு பேர் சேந்து பேசினா கூட இத பத்தியே பேச்சுனு ஆகிப் போச்சுங்க. அவங்கவங்க தனக்கு தெரிஞ்சத சொல்லுதாங்க. தெரியாதத தெரிஞ்சவங்கள்ட்டயிருந்து தெரிஞ்சிகிட்டோம்.
அணு தொழில்நுட்பம் எவ்வளவு ஆபத்தானதுன்னு, இப்போ எங்கள்ள ஒருத்தரா இருந்து எங்களுக்காக போராடிக்கிடிருக்க அய்யா உதயகுமாரன் ஜூ.வி-ல அணு ஆட்டம் னு எழுதின தொடர் கட்டுரை அணுவோட கோர முகத்த புரிய வச்சுது.
வந்த சுனாமியில ஜப்பான் பட்ட கஷ்டத்த பாத்து இனிமே அணு சக்தியே உபயோகிக்க கூடாதுன்னு ஜெர்மனி முடிவு செஞ்சிடுச்சாம். சீனா சூரிய மின்சாரத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருச்சாம். நமக்கு எப்பங்க புத்தி வரும்?
உலகத்தோட மின் தேவையில வெறும் ஏழு சதம் மட்டுமே பூர்த்தி செய்யுற இந்த அணு உலைகளுக்காக நாம தர்ற விலை ரொம்ப அதிகம்னு சொல்லுதாங்க. இதுல விலைங்கறது பணம் மட்டுமில்லைன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அணுக்கழிவை என்ன செய்யறதுன்னு யாருக்குமே இன்னும் தெரியாதாமே! அதை வச்சுக்கிட்டு என்னங்க செய்யறது?
அமெரிக்காவுல 30 வருஷத்துக்கு முன்னாலேயே அணு உலை கட்டறத நிறுத்திட்டாங்களாமே! (அப்புறம் எதுக்கு அந்த கருமாந்திரத்த நம்ம தலையில கொட்டறான்?) இப்போ செயல்பட்டுகிட்டிருக்க அணு உலைகளால வருஷத்துக்கு சுமார் 21000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் வருதாம். அதனால இயங்கிகிட்டிருக்கிற அணு உலையையும் நிறுத்துங்கன்னு சொல்லி நியுயார்க் கவர்னர் போராடிக்கிட்டிருக்காராம்.
ஜெய்தாப்பூர்ல கட்டுற அணு உலையால ஏதாவது பிரச்சினைன்னா, அத கட்டுற கம்பெனி பிரான்ஸ்-ஐ சேர்ந்ததுங்கறதால பிரான்ஸ் தான் அந்த கம்பெனிக்கு அபராதம் போடுமாமே! இது என்னங்க நியாயம்? நம்ம போபால்ல நடந்த கொடுமைக்கே, நம்ம சட்டத்தால, நம்ம நாட்டிலேயே ஒன்னும் செய்ய முடியல. அப்புறம் நாம எங்க பிரான்சுக்கு போயி வழக்காடறது?! அட, பொணமான பின்னால அவன் குடுக்கற பணம் நமக்கு எதுக்குங்க?
இந்தியாவுல இருக்கற அத்தனை அணு உலையையும் மூடணும்னு நாடு தழுவின அளவுல போராட்டம் நடத்தப் போறதா பாபா அணு ஆராய்ச்சி மையத்தோட முன்னாள் விஞ்ஞானி பரமேஸ்வரன் சொல்லுதாரு.
எப்படி பாத்தாலும் அணு தொழில்நுட்பத்தால உலகத்துக்கு நல்லது இல்லை, அணு சக்திய உபயோகிக்காதீங்கன்னு நோபல் பரிசு வாங்கின பத்து விஞ்ஞானிங்க உலகத்துக்கு வேண்டுகோள் வச்சிருக்காங்க. அவங்களும் விஷயம் தெரிஞ்சவங்க தானே!
இது இப்படி இருக்கும் போது, இந்தியாவில் இருக்கற எல்லா அணு உலைகளுக்கும் கொடுத்திருக்க அனுமதிய ரத்து செய்யனும்னு முன்னாள் எரிசக்தி துறை செயலர் சர்மா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.கே.வேணுகோபால், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எல்லாரும் சேந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்காங்க.
எல்லாம் சரி, கரண்டுக்கு என்ன செய்ய? ன்னு எல்லாரும் கேக்குதாக. பெரும்பாலான வீட்டுல மொட்ட மாடி இருக்குல்ல, அதுல சூரிய தகட பொருத்தினா சூரியன் இருக்க வரைக்கும் நம்ம யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாம கரண்டு கெடைக்குமே. என்ன, செலவு கொஞ்சம் அதிகமாகும். உசுர விட காசா முக்கியம்?
எல்லாம் சரி, கரண்டுக்கு என்ன செய்ய? ன்னு எல்லாரும் கேக்குதாக. பெரும்பாலான வீட்டுல மொட்ட மாடி இருக்குல்ல, அதுல சூரிய தகட பொருத்தினா சூரியன் இருக்க வரைக்கும் நம்ம யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாம கரண்டு கெடைக்குமே. என்ன, செலவு கொஞ்சம் அதிகமாகும். உசுர விட காசா முக்கியம்?
இந்த உலை வந்தா நாங்க மட்டும் கஷ்டப்பட போறதில்லைங்க. யாருக்குமே புண்ணியம் இல்லாம அநியாயத்துக்கு கடல்ல கெடக்குற மீனெல்லாம் வேற செத்து மெதக்க போகுது.
பத்து நாள்ல உங்க கருத்த நீங்க சொல்லப் போறதா பேப்பர்ல பார்த்தேங்க. நீங்க நல்லவங்க. சாதனையாளனான சாமானியன்.எங்க மண்ணோட மைந்தன். இந்தியாவோட பெருமைக்குரிய அணு விஞ்ஞானி. உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியும். நீங்க பொறுப்புல இருந்த போது பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்சீங்க. எங்களுக்கெல்லாம் நல்ல புத்தி சொல்லுற நீங்க உங்க வேலையோட காரணத்தால, மனசு விரும்பாம தான் செஞ்சிருப்பீங்கனு நம்பறோம். அய்யா பரமேஸ்வரன் போல நீங்களும் உங்களோட கருத்த வெளிபடையா இப்போ பேசலாமே.
நீங்க சொல்லப் போற வார்த்தையில தான் எங்க புள்ளைங்களோட உசுரு இருக்குதுங்க....
நீங்க சொல்லப் போற வார்த்தையில தான் எங்க புள்ளைங்களோட உசுரு இருக்குதுங்க....
இப்படிக்கு,
இடிந்து போய் கரையிலேயே உட்கார்ந்திருக்கும்
27 கருத்துகள்:
இந்த இடுகைக்கு உதவிய அணு ஆட்டம் தொடர் எழுதிய, மக்களோடு இருந்து களமாடிக்கொண்டிருக்கும் அய்யா சுப. உதயக்குமாரன் அவர்களுக்கும், தொடரை வெளியிட்ட ஜூனியர் விகடனுக்கும், இதை மின் நூலாக எனக்கு தந்த திரு.சண்முக வேலுவிற்கும் எனது நன்றிகள்.
வலைப்பூவில் கூடங்குளத்தின் நிலை குறித்தும் அணு உலையின் அபாயம் குறித்தும் எனக்கு பல தகவல்களை தந்து உதவிய திரு.கூடல் பாலா, திரு.சூரிய ஜீவா, திரு.ரெவெரி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
உண்மையிலேயே திரு கலாம் அவர்கள் இதைப்படித்தால் உருகிப் போய்விடுவார் போல உள்ளது ...அருமை !
நண்பருக்கு வணக்கம் , தங்களின் கடிதம் படித்தேன். தங்களின் ஆதங்கம் உணர்ந்தேன். உங்களின் அநேகம் கேள்விகளுக்கு இந்த வலைத்தளத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்.
http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_22.html
நன்றிகள் பல
nalla sirappana kaditham
intha pathivil sonna mathiri abdul kalam avarkal anu ulaiyal aerpadum pirachanaiyai velippadiyay theriviththal nalla irukkum
நல்லதொரு கடிதம் நண்பரே...அவர் மேல் எனக்கும் அசாத்திய நம்பிக்கை உண்டு..எதிர்பார்க்கிறேன் அவர் பதிலை...
வாழ்த்துக்கள் நண்பரே...
என் வலையிலும் இதைப்பகிர்ந்துள்ளேன்...
வெற்றி நமக்கே...
உலை கொதிக்குது,..
பலரது உள்ளத்திலும் கொதிக்கும் பொது உலை....
உருக்கமான கடிதத்திற்கு வாழ்த்துக்கள் .
நன்றி சகோ பகிர்வுக்கு ...........
என்னவளே
எல்லா ஆயுதங்களையும்
பயன் படுத்த தெரிந்தவனே
மிகப்பெரிய வீரன் என்று சொன்னேன்
நீயோ
ஆயுதங்களின் தீமையறிந்து
அதை பயன்படுத்த தெரிந்தும்
தொடாதவனே மாவீரன் என்கிறாய்!
@koodal bala
நன்றி நண்பரே. களத்தில் இருக்கும் நண்பர்களிடம் நம்பிக்கை விதையுங்கள், நியாயத்தின் பக்கம் நிறைய பேர் இருக்கிறோம் என.
கலாம் அய்யா அவர்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பி உள்ளேன்.
http://www.abdulkalam.com/kalam/jsp/SendToKalam.jsp
நல்லது நடக்கும். நம்புவோம்.
@வைரை சதிஷ்
நன்றி சதீஷ். உண்மை நிச்சயம் வெல்லும்.
@ரெவெரி நன்றி நண்பரே.
நல்லது நடக்கும். நம்புவோம்.
@Bharath Computers
உலை அடங்கும். உணவு கிடைக்கும்.
@இருதயம்
அன்பே சிவம் என்ற திரைப்படம் வரும் பொழுது சுனாமி என்ற ஒன்றை நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. அதில் கமல் தமிழகத்திற்கு சுனாமி வரும் என்பார். அதே போல சுனாமி வந்தது.
இன்றைக்கு இலங்கை எனப்படும் பகுதி (போல 13 மடங்கு பெரிய பகுதி) முன்னொரு காலத்தில் இந்தியாவோடு இணைந்த நிலப்பரப்பாயிருந்தது. அப்போது அந்த பகுதிக்கு கோண்டுவானா எனப் பெயர். மேடான இலங்கை தவிர மற்றதெல்லாம் நீரில் மூழ்கி போக காரணம் சுனாமி.
நமக்கு சுனாமி என்ற வார்த்தை தான் புதிது. ஆனால் சுனாமி புதிதல்ல. அதன் பழைய தமிழ் பெயர், ஆழிப் பேரலை, கடற்கோள்.
1964 இல் புயல் காற்று சூறையாடிப் போக, 2000 பேரை பலி கொண்ட பேரிடரில் மீட்பு நடவடிக்கை செய்யாமல் வாழத் தகுதியற்றதாக அறிவித்ததோடு தனது கடமையை முடித்துக் கொண்டது அரசு. இன்றளவும் தனுஷ்கோடி வாழ தகுதியற்றதாகத்தான் இருக்கிறது. அணு உலை செயல்படத் தொடங்கும் பட்சத்தில் கூடங்குளமும் ஒரு நாள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப் படலாம்.
குளிரூட்டிக்காக நன்கு மூடப்பட்ட, காற்று வர வாய்ப்பில்லாத மகிழுந்துக்குள்ளும் கைப்பேசியின் காந்த அலைகள் வந்து சேருகிறது. அதை விடவே வலிமையானது அணு கதிர்வீச்சு.
எத்தனை நாளைக்கு பாம்பின் பல்லை அது நம்மை கடிக்காதபடி பிடித்துக் கொண்டிருக்க முடியும்?
காரீய கொள் காலன் அணுக் கதிர்வீச்சை தடுக்கும் என்றால், கல்பாக்கம் பகுதி மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது எதனால்?
உங்கள் profile இந்த வலை பூ தெரியவில்லையே... இன்று தான் பார்க்கிறேன்... அருமையான பதிவு
@அம்பாளடியாள்
உலை அடங்கும். உலகம் சுகிக்கும். கருத்துக்கு நன்றி சகோதரி.
@இருதயம் மன்னிக்கவும். அது கோண்டுவானா அல்ல. லெமூரியா.
@சீனுவாசன்.கு
உண்மை. அலெக்சாண்டர், மகாவீரர் இருவரது படத்தையும் வைத்துக் கொண்டு யார் மகாவீரர் எனக் கேளுங்கள். குழந்தை கூட சரியாக சொல்லும். :p
நெல்லை தமிழ் தந்த நண்பர் மருத்துவர் சிவக்குமாருக்கு நன்றிகள்.
@suryajeeva
நன்றி தோழர். ஆனால் என்ன செய்தால் Profile இல் வலைப்பூ தெரியும் என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
நண்பருக்கு வணக்கம் , தங்களின் கடிதம் படித்தேன். தங்களின் ஆதங்கம் உணர்ந்தேன். உண்மையிலேயே கலாம் அவர்கள் படித்தால் மகிழ்ந்து போவார்
@Lakshmi
அனுப்பி இருக்கிறேன் அம்மா. நாமெல்லாம் மகிழும் படியாக அவர் பேசுவார் என நம்புகிறேன்.
விழிப்புணர்வளிக்கும் தேவையான இடுகை நண்பா..
தேவையான இடுகை நண்பா..
இதோ..
எனது அணு பற்றிய இடுகை..
http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_23.html
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
அணு இன்றி அமையாது உலகு....
கலாம் அணு உலைகளை ஆதரிக்கிறார்...
அணு உலைகள் வேண்டாம் என கூறுவதற்கு பதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும்,பாதிக்கப்படும் நபர்களுக்கு மாற்றும் கோரி அரசிடம் கேட்கலாம்...
சூரிய ஒளி மின்சாரம் மூலம் போதுமான அளவு மின்சாரம் கிடைக்காது தோழா...
@Reply for ரசிகன் said...
அணு மின் நிலையங்கள் வேண்டவே வேண்டாம் என நீங்கள் கூறுகிறீர்கள்...
மின்சாரம் தற்போது அனல் மின் நிலையங்க்களில் இருந்தே அதிகம் பெறப்படுகிறது.
நன்பா அனல் மின் நிலையம் இயங்குவதற்கு நிலக்கரி எரிக்கப்படுகிறது.இதன் மூலம் வெளியாகும் புகை நச்சு தன்மை மிகுந்தது உயிரினங்களுக்கும் சுற்று சூழலுக்கும் மிகுந்த பாதிப்பை வழங்கியபடியே செயல்படுகிறது..(புற்றுநோய்,ஆஸ்துமா,என பட்டியல் நீளும்)
அணு மூலம் கிடைக்கிற மின்சாரம் சுத்தமானது என் கலாம் போன்ற அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.அதுவே உங்கள் பார்வையில் தீங்க்கானது என்றால் தற்போது நம் மின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகிற அனல் மின் நிலையங்க்களையும் சேர்த்தே மூட வேண்டும்...
தீ சுடும் என்பதால் அதை சமைக்க பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது உங்கள் பேச்சு..
@விஜயன் தோழரே, அனல் மின்சாரத்தில் குறைகள் இல்லை என நான் சொல்லவில்லை. ஆனால் அதன் விளைவுகளை, முயன்றால் நம்மால் கட்டுப் படுத்த முடியும். ஆனால், அணு சக்தி அப்படியல்ல. அனல் மின் நிலையத்தால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் சம்பந்தப் பட்ட நபரை மட்டுமே பாதிக்கும். அணு கதிரியக்கம் தலைமுறையையே சீரழிக்கும். கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யும் தொழில் நுடபம் கண்டறியப் படாதவரை அணுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படக் கூடாது என்பது எனது கருத்து. உறுதி. திண்ணம்.
கருத்துரையிடுக