சனி, ஜனவரி 21, 2012

கண்டேன் குயிலை...

(இணையத்தில் எடுத்தது)

கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த குயில் தேடல் பதிவை படித்து விட்டு பலரும் நான் பார்த்தது குயில் அல்ல என குயில் குறித்த பல தகவல்களை அளித்திருந்தீர்கள். அதன் மூலம் குயில் படம் பார்க்க முடிந்தாலும், குயிலை பார்க்க முடியாத ஏக்கம் நெஞ்சுக்குள் கூடு கட்டி கூவிக் கொண்டே இருந்தது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் அந்த குயில் தேடல் இடுகையை படித்து விட்டு வளர்மதி அக்கா தொலைபேசினார்கள். "குயிலை பாக்கணும்னா நம்ம வீட்டுக்கு வாங்க. தினமும் காலையில காக்கைக்கு வைக்கிற சாப்பாட குயிலும் வந்து சாப்பிடும். அதனால காலை வேளையில இங்க  வந்தீங்கன்னா நீங்க குயில் பாக்கலாம்" நம்பிக்கை தந்த இந்த வார்த்தைகளே என்னை இறக்கை இல்லாமல் பறக்க செய்தது. இங்கே அவர்கள் வீடு குறித்து அவசியம் சொல்ல வேண்டும். கிண்டியில் டிபென்ஸ் காலணியில் உள்ள அவர்கள் வீட்டின் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவிற்கு மரங்களடர்ந்த பராமரிப்பில்லாத நிலம். பல வித பறவைகளும் சிறு விலங்குகளும் சர்வ சாதாரணமாக வளைய வரும் பிரதேசம். நரக சந்தடிகளுக்கு நடுவே ஒரு சொர்க்க பூமி. சென்னையில் அப்படி ஒரு வீடு ஏழு பிறவி புண்ணியம் செய்தவர்களுக்கு தான் வாய்க்கும்.

ஆனால் அரபிக் கடலோரம் பத்து நாள் நான் பயணம் போனதால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை. திரும்ப வந்ததும் பொங்கல் பண்டிகை களை கட்ட துவங்கி இருந்தது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான மாட்டுப் பொங்கலை ஏதாவது கிராமத்தில் கொண்டாடலாம் என புதுக்கருவாட்சி என்ற கிராமத்திற்கு எனது இருசக்கர தேர் ஏறி சென்றேன். 

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கீழ்வாலை என்னும் இடத்திலிருந்து (கீழ்வாலையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியம் இன்றும் காணக் கிடைக்கிறது) வலப்புறம் நெடுந்தொலைவு உள் சென்றால் புதுக்கருவாட்சி வரும். போகும் வழி எங்கும் பசுமை, பாறை, குன்று என இயற்கை ஆட்சி செய்யும் இடம். மனிதர்கள் நடமாட்டம் அபூர்வமாக தென்படும் பகுதி. அந்த சாலையில்(!) சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தன் கிளை நீட்டி மறித்தபடி நின்றிருந்தது ஒரு ரௌடி மரம். அந்த கிளையை குனிந்து கடக்கும் சாத்தியம் குறித்து யோசித்துக் கொண்டே கிளையை கவனித்த நான், சத்தமின்றி வண்டியை நிறுத்தினேன். கிட்டத்தட்ட கைக்கெட்டும் தூரத்தில் கிளை. கிளையில் நான் பல காலமாக தேடி வந்த குயில். இவ்வளவு அருகில் குயிலை பார்ப்பேன் என கனவிலும் நான் நினைக்கவில்லை. கருப்பாக இருந்தாலும் குயில் மிகவும் அழகாக மைனா அளவுக்கு இருந்தது. (சின்ன குயிலா?). பல படங்களில் பார்த்திருந்தாலும் இது குயிலில்லாமல் வேறு ஏதோ பறவையாக இருக்கவும் வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகத்தில் அதன் குரல் கேட்க காத்திருந்தேன். நான் அசையவே இல்லை. அதுவும் தான்.

சிறிது நேர காத்திருப்பில், எனது தலைக்கவசத்தை நான் கழற்ற முனைந்த போது அது பறந்து அதே மரத்தின் வேறொரு கிளையில் அமர்ந்துக் கொண்டது. நான் இப்போது வசதியாக அமர்ந்து கொண்டு அதை கவனிக்கத் துவங்கினேன். சென்னை புத்தக கண்காட்சியில் பறவை பார்த்தல் என்றொரு புத்தகம் சுமைக்கு பயந்து வாங்காமல் வந்தது நினைவுக்கு வந்தது. சுமார் கால் மணி நேரம் கடந்தும் அது எந்தவிதமான சப்தமும் எழுப்பவில்லை. ஒருவேளை ஊமைக் குயிலாக இருக்குமோ என சந்தேகமும் வந்தது.

அதை கூவ செய்யும் விதமாக நான் அதைப் போலவே சீட்டி அடித்தேன். அது என்னை மதித்ததாகவே தெரியவில்லை. அசையாமல் எங்கேயோ அது பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தல் யாருக்காகவோ அது காத்திருப்பதாக தோன்றியது. 

இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் பொறுமை இழந்து விடுவேன் எனும் சூழலில், அது பொறுமை இழந்தது. விருட்டென கிளம்பி பறக்க துவங்கியது. அதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் கூவிக் கொண்டே பறந்தது. மறுக்கவே வாய்ப்பில்லாமல் அது குயில் தான். 

அடடா... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆளில்லா அந்த காட்டுப் பாதையில் எனது குதியாட்டத்தை எந்த மனிதனாவது பார்த்திருந்தால் என்னை மனநிலை சரியில்லாதவன் என மதிப்பிட்டிருப்பான். 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 கருத்துகள்:

Lakshmi சொன்னது… [Reply]

ஒருவழியா குயில் தரிசனம் கிடைச்சுதா. சந்தோஷம்தான்.

bala சொன்னது… [Reply]

nee eppadi santhosa pattuiruppai endru naan ninaithen athuvea santhosam nanba

கோகுல் சொன்னது… [Reply]

ஒரு வழியா குயில் தேடல் முடிவுக்கு வந்தாச்சு போல.

ஷைலஜா சொன்னது… [Reply]

?????? ??????? ????? ??????????? ????? ????????? ?????? ???????? ??????? ???????? ???????? ???? ??????? ?????? ????????????. ???? ?????? ?????? ???????? ??????????. ????? ?????????? ?????????? ?????? ????????????? ??????? ????? ???????? ????????????????! ?????? ??????. ????????????? ?????? ???? ?????????????? ????????? ??????? ???? ????????? ?????? ??? ????????????!

ஷைலஜா சொன்னது… [Reply]

என்னாச்சு நான் அனுப்பினது க்ளிக் செய்றப்போ கேள்விக்குறியாகிவிட்டதே

veedu சொன்னது… [Reply]

குயிலை கண்டு குதியாட்டம் போட்டீர்களா குயிலாட்டம் போட்டீர்களா...தேடல் தொடரட்டும்...

பெயரில்லா சொன்னது… [Reply]

உங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி நண்பரே...குயில் பாட்டு வந்ததென்ன...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
அனுமனைப் போல
கண்டேன் சீதையை என்று
குறிப்பறிந்து பேச எனக்கு தெரியாது!

அடடா
எது எப்படியோ
நீ கேட்டாலும் விட்டாலும்
என்னால் பேசுவதை நிறுத்த இயலாது!

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi
@bala
@கோகுல்
@ஷைலஜா
@veedu
@ரெவெரி
@சீனுவாசன்.கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.

Related Posts Plugin for WordPress, Blogger...