திங்கள், ஜூன் 06, 2011

அப்துல் கலாம்...



விழுப்புரத்தில் 22 சமூக நல அமைப்புகள் இணைந்து நடத்திய "LEAD VILLUPURAM 2020" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார், மேதகு முன்னாள் குடியரசு தலைவர் நமது அப்துல் கலாம் அவர்கள். அவருடன் கை குலுக்கி பேசும் சந்தர்ப்பம் அமைந்த, என் வாழ்வில் மறக்க முடியாத அந்த விழாவில் நடந்தது...

விழா நடப்பதற்கு முதல் நாளே விழா நிகழ்விடமான தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி காவல் துறையின் கட்டுப் பாட்டில் வந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரது விலாசமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் காவல் துறை வசம் இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தின் மாணவர்கள் / மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் விழா ஏற்பாட்டாளர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். (அந்த 100 ல் ஒருவராக ஊருக்குள் பலத்த போட்டி பல தளங்களிலும் இருந்தது.) எல்லோருடைய விபரங்களும் முன்னமே காவல் துறைக்கு அளிக்கப் பட்டிருந்தது. 

மதியம் 12.30 மணியளவில் நாயகன் அப்துல் கலாம் வந்தடைந்தார். விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்ட அறிவியல் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டவர் அங்கு நிறைய நேரம் செலவிட்டார். ஏழுமலை தொழில்நுட்பபயிலகத்தின் மாணவி செய்திருந்த காற்றாலையை பார்த்து நிறைய கேள்விகள் கேட்டார். மற்றொரு மாணவர் செய்திருந்த, கைரேகையை பயன்படுத்தி, இணையத்தில் வாக்களிக்கும் எந்திரத்தை பார்த்தவர், தேர்தல் ஆணையத்திடம் தரும்படி கூறினார். (முன்னதாக அந்த மாணவர் ஆங்கிலத்தில் எந்திரத்தை விளக்க, "தமிழ்ல சொல்லுப்பா" என்றார்). அரசூர் அருகே இருந்து பெயர் தெரியாத ஏதோ ஒரு ஊரின் அருட்கொடி நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் செய்திருந்த நீர்மூழ்கி கப்பலை பார்த்து "அடப் போடா!" என வியந்தார். பலரும் அவரிடம் கையொப்பம் வாங்க, மகிழ்வோடு போட்டு விழா மேடைக்குள் நுழைந்தார்.

இவருக்கு இந்த நாற்காலி என ஏற்கனவே எழுதி ஒட்டப் பட்டிருந்த இருக்கையில் அவரவர் அமர்ந்திருந்தனர். விழாவின் வழக்கமான நடைமுறைகள் எல்லாம் முடிந்து, "தானமும் தவமும் தான் செய்தக் கால் வானவர் நாடு வழி திறந்திடுமே" என்ற அவ்வையின் வரிகளை கொண்டு  பேசினார். 

பின் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், "ஊழலை எப்படி ஒழிப்பது?" என்ற மாணவனின் கேள்விக்கு "உங்கள் வீடுகளில், லஞ்சம் வாங்கும் பெற்றோரை பார்த்து, குழந்தைகளாகிய நீங்கள், லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொல்லுங்கள். லஞ்சத்தால் வரும் எந்த வசதியும் எனக்கு வேண்டாம் என நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என நான் நம்புகிறேன். அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம் உங்கள் கையில் இருக்கிறது. பெற்ற பிள்ளைகள் இழிவாக நினைக்கும் ஒரு செயலை எந்த ஒரு பெற்றோரும் செய்ய மாட்டார்கள். எனவே இளைய சமுதாயம் ஊழலுக்கு எதிராக திரும்பினால் நல்ல சமூகம் உருவாகும். சமூக உணர்வுள்ள நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள் என்றார்.

ஊழல் என்பது, எனக்கு வேண்டும் என்ற எண்ணத்தால் வருவது. அதை மாற்ற "நான் என்ன கொடுக்க முடியும்? / உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற எண்ணத்தை இளையவர்கள் மனதில் உண்டாக்க, தலைவரற்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளதாகவும், அதில் உறுப்பினராக http://www.whatcanigive.info/ என்ற தளத்தை தொடர்பு கொள்ளவும் சொன்னார்.

சுமார் இரண்டரை மணியளவில் கிளம்பியவர், வந்திருந்த அனைவர் மனதிலும் நம்பிக்கையை விதைத்திருந்தார். அவர் சொன்ன ஒரு வாக்கியம் ஆழமாக மனதுள் இறங்கியது.

என்னால் முடியும்.
நம்மால் முடியும்.
இந்தியாவால் முடியும்.


குறிப்பு: மேடையில் அவரால் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் இணைய பாதுகாப்பு ஆலோசகர், விழுப்புரம் மண்ணின் மைந்தர், திரு.பாலகிருஷ்ணன் அவர்கள், மறுநாள் தன் மலரும் நினைவுகளில் எங்கள் தெரு வழியே நடந்து சென்ற போது, எனது அழைப்பை ஏற்று என் வீட்டில் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது மேலும் மகிழ்வளித்தது.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

edhu nammai thoonga vidaamal seigiradho adhuthaan kanavu yendru sonnavaraayitre!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
உனக்காக நான்
என்ன கொடுக்க முடியும்?
நீயே சொல்!

எப்போதோ
உனக்காக நான்
என்னை கொடுத்து விட்ட
பிறகும் கூட!

Related Posts Plugin for WordPress, Blogger...