ஞாயிறு, அக்டோபர் 30, 2011

முன்னுறை முக்கியம்




வணக்கங்க, எம் பேரு ராமகிருஷ்ணன். ITI வரைக்கும் படிச்சிருக்கேன். பக்கத்து ஊர் சக்கரை ஆலையில மெஷின் ஆப்பரேட்டரா வேலை செய்யறேன். எம் பொண்டாட்டி செங்கமலம், பெரிய பொண்ணு எட்டாவது படிக்கிறா. சின்னவ ஆறாவது. பூர்வீக சொத்துன்னு எதுவுமில்லைன்னாலும், சம்பாதிச்ச பணத்தில ஒரு வீடு, கொஞ்சம் நிலம், ஒரு வண்டின்னு வசதியாத்தாங்க போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை.

ராமகிருஷ்ணனுக்கு நல்ல மனசுங்க. யாருக்கு கஷ்டம்னாலும் ஓடி வந்து உதவி செய்வான். கஷ்டம்னு கேட்டா காசு குடுப்பான். பொறந்த நாள், தீபாவளி மாதிரி நல்ல நாள்ல அனாத புள்ளைங்களுக்கு சோறு போடுவான். கேசவன் பசங்களுக்கு கூட ஸ்கூல் பீஸ் இவன் தான் கட்டினான். கஷ்டப் பட்டு வளந்தவன் இல்லையா, அதனால மத்தவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு நெனைப்பான். அவன் பிரச்சினையே அது தான். நானா, நான் துளசிங்கம். ராமகிருஷ்ணன் கூட வேலை செய்யறேன்.

ஒருநாள் ஆலையில வேலை செஞ்சுகிட்டிருக்கும் போது துளசிங்கத்துக்கு அடி பட்டுடுச்சு. அடி கொஞ்சம் பலம் தான். ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போனோம். ரத்தம் ஏத்தணும்ன்னாங்க. நான் தான் குடுத்தேன். ரெண்டு நாள் கழிச்சு ஆஸ்பத்திரியிலிருந்து எனக்கு போன் பண்ணாங்க. ICTC ங்கற எடத்துக்கு வர சொன்னாங்க. என்னன்னு தெரியலயே, துளசிங்கத்துக்கு இப்போ பரவயில்லையேன்னு யோசனையோடவே போனேங்க."முன்னுறை இல்லன்னா முடிவுரை எயிட்ஸ்" அப்படின்னு சுவத்துல எழுதி இருந்ததுங்க. கூட்டம் அவ்வளவா இல்லை. டாக்டரை போயி பாத்தேங்க. அவர் சொன்னது தான் என் தலையில இடி விழுந்த மாதிரி ஆகிருச்சு. ஆமாங்க. எனக்கு எயிட்ஸ் இருக்குன்னார். செத்துடலாமான்னு ஒரு நிமிஷம் தோணிச்சு. டாக்டர், குடும்பத்தை ஞாபகப் படுத்தி, இதுவும் சாதாரணமான வியாதி தான். ஒழுங்கா மருந்து சாப்பிட்டா, கூட பத்து வருஷம் இருக்கலாம்னு தைரியம் குடுத்தார். என் குடும்பத்துக்கு என்னை விட்டா யாருங்க இருக்கா. நான் தானே அவங்கள பாத்துக்கணும்.

லாரி டிரைவர் சரவணன், ஒரு நா ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டான். அவன் பொண்டாட்டி சரசு, பொறந்த ஊருல ஆதரிக்க ஆள் இல்லாததால இங்கயே இருந்துட்டா. புள்ள குட்டி எதுவுமில்ல. பாவம், தனியா தான் கஷ்டப்பட்டா. வயல் வேலைக்கு போயி வயித்த கழுவிகிட்டிருந்தா. நம்ம ராமகிருஷ்ணனுக்கு தான் யாரு கஷ்டப் பட்டாலும் ஆவாதே, அதனால அவளுக்கு அப்பப்போ பணம் காசு குடுப்பான். அவன் அதோட நிறுத்தி இருக்கலாம். தயாள குணம் ரொம்ப அதிகமாகி ராமனா இருந்தவன், கிருஷ்ணனாயிட்டான். அவ மூலமா தான் இந்த வியாதி இவனுக்கு வந்துருக்கு. அவ மட்டும் என்ன பண்ணுவா பாவம். சரவணன் லாரிய எங்க பார்க் பண்ணானோ!

டாக்டர் கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவர் சரசுவ கூட்டிகிட்டு வர சொன்னார். அவளையும் பரிசோதிச்சு பாத்துட்டு அவளுக்கும் எயிட்ஸ் இருக்குன்னார். சரசு மூச்சு முட்ட அழுதா. என்னால தானே உனக்கு வந்தது. நான் உன் வாழ்கையை பாழாக்கிட்டேனேன்னு கதறி அழுதா. நம்மால வேற என்னங்க செய்ய முடியும். டாக்டர் அடுத்து சொன்ன விஷயம் கொஞ்சம் பயங்கரமா இருந்தது. செங்கமலத்தையும் கூட்டிகிட்டு வர சொன்னார். செங்கமலத்துக்கு சரசு விஷயம் தெரியாது. ஆனாலும், அவளாவது நல்லா இருக்கணுமே அப்படின்ற நப்பாசையில, எங்கே போறோம்னு எதுவுமே சொல்லாம அவளையும் கூட்டிகிட்டு டாக்ட்டர்ட்ட போனேன். அவளுக்கும் எயிட்ஸ் இருக்குனு டாக்டர் சொல்லிட்டார். சத்தியமா சொல்றேன். சாமியெல்லாம் இல்லீங்க. இருந்தா இப்படி நடக்குமா? ஒரு வாரத்துக்கு அவ யார் கூடவும் பேசலைங்க. என்னால அவ மொகத்த கூட பாக்க முடியல. ஒரு வாரம் கழிச்சு என் கிட்ட சொன்னா, "அவ ஏன் அங்க தனியா கஷ்டப் படணும். அவளையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுங்க". ச்ச! எப்பேர்பட்ட பொண்டாட்டி. இவளுக்கு போய் நான் துரோகம் செஞ்சேனே. இன்னும் ஏழு ஜென்மத்துக்கு எனக்கு நல்ல சாவே வராதுங்க.

சாதாரண ஜுரம் வந்தாலே சரியாக ஒரு மாசம் ஆகும். நிக்காம வயத்தால போகும். ஒரு சின்ன விஷயம்னாலும் உடம்பு தாங்காது. அடிக்கடி ஆஸ்பத்திரி போயி வருவாங்க. இதனால இவங்களுக்கு இந்த வியாதி இருக்கறது அரசால் புரசலா ஊருக்கு தெரிஞ்சு போச்சு. அண்ணே அண்ணேன்னு சுத்தி வந்தவன் எல்லாம் தூர போயிட்டான். அடிக்கடி லீவு போட்டதால வேலை போச்சு. உடம்புல பழைய தெம்பு இல்லாததால, தொடர்ச்சியா எந்த வேலைக்கும் போக முடியல. நிலத்தை வித்து, வண்டியை வித்து சாப்பிட்டாங்க. என்னால முடிஞ்சத அப்பப்போ குடுப்பேன். அதெல்லாம் பத்தாம கஜேந்திரன் கிட்ட கடன் வாங்கினான். கஜேந்திரனா? அவர் ராமகிருஷ்ணனுக்கு பக்கத்து வீட்டுக்காரர். வட்டிக்கு பணம் குடுக்கறவர். வீட்டு பத்திரத்தை வச்சு அப்படி, இப்படின்னு ரெண்டு வருஷத்துல லட்ச ரூபாய்க்கு மேல வாங்கிட்டான். கஜேந்திரனுக்கு பயம் வந்திருக்கும் போல. பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா தங்க இடம் வேணும்னு சொல்லி, இவன் வீட்டை எழுதி வாங்கிட்டார். தர வேண்டிய மீதி காசுக்கு ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்க ஒண்ணுக்கும் உதவாத ஆறு ஏக்கர் நிலத்த இவன் பேருக்கு கிரயம் பண்ணி குடுத்துட்டார்.

நாம யார என்னங்க சொல்ல முடியும்? எல்லாம் விதி. பேசவே பயந்த கிராமத்துல குடியிருக்க வீடு தருவாங்களா? அதான் இங்க பக்கத்து டவுனுக்கு, துளசிங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்துகிட்டு வந்துட்டோம். இங்க நம்ம கதை யாருக்கும் தெரியாதுங்கறதால பிரச்சினை எதுவுமில்லாம நல்லபடியா போயிகிட்டிருக்குது. நான் இப்போ பழ வியாபாரம் செய்யறேன். செங்கமலமும், சரசுவும் வீட்டு வேலை செய்யறாங்க. பசங்க இங்கயே ஸ்கூல்ல படிக்கிறாங்க. பணம் பத்தலன்னா துளசிங்கம் தான் தந்துகிட்டிருக்கான். நாம நல்லா(!) இருந்தா தான் கடவுளுக்கு புடிக்காதே! அங்க கிராமத்துல புதுசா பை-பாஸ் ரோடு வருதாம். நம்ம நிலத்து மேல தான் அது வருதுன்னாங்க. இன்னும் எவ்வளோ கஷ்டப்பட வேண்டி இருக்கோ தெரியலையே. ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா, அடுத்த நாளே செத்துடலாம். ஆனா எப்படி? அந்த நிலம் தான் இருக்கற ஒரே சொத்து, நம்பிக்கை.

ஆனா பாருங்க, ஆறு மாசத்துல சட சடன்னு ரோடு வேலை முடிஞ்சது. ரோடு நிலத்து மேல போகாம நிலத்த ஒட்டி போச்சு. இங்க டவுன்லருந்து மூணு கிலோமீட்டர் ஆச்சா, நல்ல இடம். இத பத்தி என் பிரண்டு கணேசன் கிட்ட சொன்னேன். அவர் ஆடலரசன் ரியல் எஸ்டேட்ல வேலை செய்யறார். அவர் விசாரிச்சுட்டு வந்து "ஏக்கருக்கு ஒரு கோடி வரைக்கும் குடுக்கலாம்" ன்னு சொன்னார்.

அப்புறமென்ன, ஒரு மாசத்துல நிலத்த வித்து பணத்த வாங்கி, சொந்தமா எனக்கும் துளசிக்கும் சேத்து பெரிசா ஒரு வீடு வாங்கி, மீதி பணத்த பேங்க்ல போட்டு, வர்ற வட்டியில சாப்டுகிட்டிருக்கோம். துளசி தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம அதே சக்கர ஆல வேலைக்கே போய்க்கிட்டிருக்கான். வைத்தியமெல்லாம் ஒழுங்கா நடக்குது. புள்ளைங்க நல்ல ஸ்கூல்ல நல்ல படியா படிக்கிறாங்க. மவராசன் மாதிரி மாப்பிள்ளைங்களை எங்க புள்ளைங்களுக்கு கட்டி வைப்போம்ங்கற நம்பிக்கை இருக்கு. நான் இன்னைக்கே செத்துட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல. சத்தியமா சொல்றேன்,  சாமி இருக்குங்க.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது… [Reply]

வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள்!

ராஜா MVS சொன்னது… [Reply]

தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்... நண்பா...

ஷைலஜா சொன்னது… [Reply]

வாழ்த்துகள்!

ரசிகன் சொன்னது… [Reply]

@ suryajeeva
@ அன்புடன் அருணா
@ இராஜராஜேஸ்வரி
@ ராஜா MVS
@ ஷைலஜா

அனைவருக்கும் நன்றிகள்.

ஆனால் கருத்து கதையை பற்றியதாக இருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

"கதையின்" முன்னுரையை நீக்கிவிட்டேன்.

VenSan சொன்னது… [Reply]

மாறுபட்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா
கதை சொல்லும் விதம்
பாத்திரங்களே மாறி மாறி விளக்கும் பாங்கு
வேறுபடுத்தி காட்டும் அச்சு
கதை களம்
இதை எல்லாம் மீறி
என் மனதில் பாரமாய்
தொக்கிய ஒன்று
கதை என்று நினைத்து ரசிக்க முடியாமல்
நம் சக மனிதர்கள் இதுபோலும் இன்னமும் கூட
அடுத்த வீட்டிலோ
தெருவிலோ
வாழ்ந்து
வதை பட்டு
நம்மால் வதைக்க பாட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வே..
தனக்கு வந்தால் தான் தெரியும்
தலை வலி என்பார்கள்.
உன் கதை ஒரு
கற்பனையோ
நிஜமோ-- எதுவாகினும்
சக மனிதனின் வலியை
எனக்குள் பரப்புகிறது...
வெற்றிடம் பரவுகிறது மனதில்...
வெற்றி உனதே நண்பா..
போட்டி முடிவுகள் எப்படி போனாலும்
உணர்த்த வேண்டிய உண்மையை
வெளிச்சம் போட்டு
உணர்த்துகிறது உன் கதை
வாழ்க வளமுடன்..

பெயரில்லா சொன்னது… [Reply]

மணிரத்னத்தின் சமீபத்திய படத்தினை நினைவு படுத்தியது...
வித்தியாசமாய் இருந்தது...பிடித்தது நண்பரே...

shanevel சொன்னது… [Reply]

ஒழுக்கம் னு ஒரு விஷயம் இருக்கு. அதை அலட்சியப்படுத்தனவங்க வாழ்க்கை போராட்டம் மிகுந்ததா இருக்கும் என்பதற்க்கு சாட்சியா இருக்கிறது உங்க "முன்னுறை".! தெளிவு ப்டுத்தியதற்கு நன்றி! வாழ்க்கை வாழ்வதற்கே..!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
மருந்தகத்தில் இருப்பவன்
என்ன வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்!

அடடா
அதற்காக வெட்கப்பட்டால்
அடிவயிற்றில் நெருப்புடன்
அவதிப்படப்போவது யார்?

உலக சினிமா ரசிகன் சொன்னது… [Reply]

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

மனதை தொட்ட சிறுகதை. வாழ்த்துக்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@VenSan என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் உனது வார்த்தைகளுக்கு நன்றி தோழா!

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி நன்றி நண்பரே, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@shanevel சரியாக சொன்னீர்கள். ஒழுக்கம் விழுப்பம் தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் பட வேண்டும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு எப்படி உங்களால் இந்த வார்த்தைகளை உங்களவளிடம் சொல்ல முடிந்தது!?!

ரசிகன் சொன்னது… [Reply]

@உலக சினிமா ரசிகன் வலு சேர்த்து விட்டேன்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi நன்றி அம்மா. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...