திங்கள், நவம்பர் 14, 2011

மழலை உலகம் மகத்தானது..!


சமீபத்தில் என் சகோதரியின் வீட்டிற்கு என் அம்மாவும், நானும் போயிருந்தோம். அது விடுமுறை சமயம் என்பதால், தங்கள் குழந்தைகளை (தமிழ் குமரன் [3 ம் வகுப்பு], தணிகை குமரன் [UKG]) என் சகோதரியின் வீட்டில் விளையாட விட்டு விட்டு, அவர்களின் பெற்றோர் அலுவல் காரணமாக வெளியில் போயிருந்தனர். 

சகோதரியின் மகன் பிரணவ் சம வயது உடையவன் ஆகையால் அவர்கள் அவனோடு ஓடிப் பிடித்தும்,  கணினியிலும், பாட்டியிடம் (என் அம்மாவிடம்) கதை கேட்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

உணவருந்தும் நேரம் என்பதால் என் அம்மா அவர்களை சாப்பிட கூப்பிட, அவர்கள் விளையாட்டிலேயே ஆர்வமாக இருக்க, அம்மா சொன்னார்கள், "ஒரு தோசை சாப்பிட்டா ஒரு முந்திரி பருப்பு தருவேன்(வறுத்தது). எத்தனை தோசை சாப்படறீங்களோ, அத்தனை தருவேன்" என்று சொல்ல, குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், அம்மா அவர்களுக்கு சொன்னபடியே முந்திரி பருப்பு கொடுக்க, தணிகை குமரன், அந்த நான்கு வயது குழந்தை சொன்னான், "பாட்டி, நான் ரெண்டு தோசை தான் சாப்பிட்டேன். எனக்கு நீங்க மூணு முந்திரி பருப்பு குடுத்திருக்கீங்க. இந்தாங்க." 

என் அம்மா: "பரவாயில்லை. சாப்பிடு"

தணிகை குமரன்: "இல்ல, இல்ல. எனக்கு ரெண்டு போதும்"



ஆம் நண்பர்களே. மழலைகள் உலகம் மகத்தானது. அவர்கள் எதிர்பார்ப்பது நம் அன்பையும், அரவணைப்பையும் தான். நாம் தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் பணம் துரத்துகிறோம். தேவையான பணம் கிடைத்த பின்னரும், துரத்துவதை நிறுத்த நமக்கு தெரிவதில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கு  அதிகமான எல்லாமே ஆடம்பரம் தான். 

நம்மில் எத்தனை பேர் ஒரு நாளில்  குறைந்தது ஒரு மணி நேரமாவது தங்கள் குழந்தைகளோடு (குழந்தைகளுக்காக அல்ல) செலவிடுகிறோம்? எத்தனை பேர், அவர்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்கிறோம்? அவர்களுக்கு இந்த உலகம் புதியது. அவர்களின் சந்தேகங்களை அவர்கள் நம்மிடம் தானே கேட்டு தெளிய முடியும். அவர்களுடன் பேசுவதில் நீங்கள் சுணக்கம் காட்டினால், யார் அவர்களிடம் ஆர்வமாக பழகுகிறார்களோ, அங்கே அவர்கள் ஈடுபாடு காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த சூழலில் இயல்பாகவே ஒரு இடைவெளி, நம்மோடு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த இடைவெளி சரி செய்யப்படாவிட்டால், காலப் போக்கில் நம்மிடமிருந்து அவர்கள் விலகி செல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

புகை பிடித்தல், மது அருந்துதல், வீட்டை மறந்து நண்பர்களே கதி என கிடத்தல், பெண்கள் பின்னால் சுற்றுதல் என எல்லா தவறுகளுக்கும் காரணம், அன்பு குறைபாடு தான். வீட்டில் சரியாக அன்பு கிடைக்கும் போது அவர்கள் அதை வெளியில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. 

குழந்தைகள் நலனுக்காக என நாம் அவர்களுக்கு சொத்து சேர்ப்பதை விட, நல்ல குணத்தை, பழகும் தன்மையை, பொருள் ஈட்டும் கலையை அவர்களுக்கு கற்று தரலாம். பொருள் ஈட்டும் கலையை கற்பது எவ்வளவு அவசியமோ, அதை விட அவசியம், நல்ல மனிதனாக வாழப் பழக்குவது. அதை உங்களை தவிர வேறு யாரால் அவர்களுக்கு கற்று கொடுக்க முடியும்? உங்களை விட அவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? 

அவனுக்காக நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் ஓடி ஓயும் போது, அவன் உங்களிடமிருந்து ஓடியிருப்பான். எனவே அவனோடு ஓடுங்கள். ஓடி விளையாடுங்கள். நண்பனாக அவன் உங்களை கருதும் படி அவனோடு பழகுங்கள்.

"நானென்ன அவனோடு பேசாமலா இருக்கிறேன்?" என கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளோடு உங்கள் மொழியில் பேசாதீர்கள். அவர்கள் மொழியில் பேசுங்கள். நீங்கள் சரியானபடி பேசி இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் படி உங்கள் குழந்தை இருப்பான். அவன் அப்படி இல்லை என்றால் நீங்கள் அவனோடு சரியாக பேசவில்லை என்று தான் பொருள்.

எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான இரு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று, அவனுக்காக நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறீர்கள் என்பதை அவனிடம் சொல்லாதீர்கள்.அவன் உணரும்படி, குறிப்பால் உணர்த்துங்கள். இரண்டு,அவன் உங்கள் குழந்தையாகவே இருந்தாலும், அவன் ஒரு உயிர். அவனுக்கென தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். 

எல்லோரும் இப்படி வாழ தொடங்கும் போது, உலகம் குற்றங்கள் அற்றதாக,  இனிமையானதாக மாறும்.


ஒரு கவிதை:

   றைவன் படைத்து 
   இயல்பு கெடாமல் 
   தொடரும் பட்டியலில் 
   இன்னமும் இருக்கிறது 
   குழந்தையின் சிரிப்பு.
                  (எங்கேயோ படித்தது)



குறிப்பு: நமது ஷைலஜா அக்கா ஒரு தொடர் பதிவை, தொடர சொல்லி இருந்தார்கள். இந்த இடுகை அதன் பேரில் எழுதப் பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எழுத சொன்னதற்கு அவருக்கு நன்றிகள். இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.


நால்வருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள். நல்லது நடக்கும். நம்புவோம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

குழந்தைகள் தின வாழ்த்துகள்...

பெயரில்லா சொன்னது… [Reply]

கவிதை..அருமை..
சொந்தக்காரர்ட்ட பாராட்டை சேர்த்திருங்க...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

குருவி தலையில் பனங்காய்?
முயற்சிக்கிறேன்!

ஷைலஜா சொன்னது… [Reply]

ரசிகன்! நல்ல பாயின்ட்டை பிடிச்சீங்க அதான்குழந்தைகளோடு அவங்க மொழில பேச சொன்னது! சூபர்ப் ரியலி!
மிக்க நன்றி ரசிகன் நான் கேட்டதும் பதிவிட்டதுக்கு ,,,

பால கணேஷ் சொன்னது… [Reply]

குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கணும்னு நீங்க சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சது. என் கருத்தும் அதுதான். ஆனா குழந்தைகளோட அவங்க மொழியிலயே பேசணும்னு நீங்க சொன்னது புது விஷயம். ரொம்ப நல்லா இருக்கு ரசிகன். நல்ல பகிர்விற்கு நன்றி.

SURYAJEEVA சொன்னது… [Reply]

தலைவரே, ஏன் இந்த கொல வெறி.. நான் எதோ அரசியல வச்சு காமடி பண்ணி கிட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா மழலை உலகம் அப்படின்னு பதிவிட சொல்றது நல்லாருக்கா? சரி சொல்லிட்டீங்க.. என் பாணியில் என்ன செய்ய முடியும்னு பாக்கிறேன்...
உங்கள் பதிவில் ஒரு இடத்தில் முரண்பட்டேன், அதை இதன் தொடர்ச்சியில் சொல்கிறேன்...

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

ரசிகன் ரொம்ப அழகா தெளிவா சொல்லிட்டீங்க. என்னால உங்க அளவுக்கு எழுத முடியுமா தெரியல்லே. முயற்சி செய்கிரேன். நன்றி

ராஜா MVS சொன்னது… [Reply]

பணம் பணம் என்று பணம் சேர்க்கும் குணமும், சூதாட்டம் ஆடும் மனமும் கிட்டத்தட்ட ஒன்று தான்.
சூதாட்டத்தில் தோற்றவன் விட்டவதை பிடிக்கவேண்டும் என்று ஆர்வத்திலும், ஜெயித்தவன் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலும் ஆட்டத்தை எங்கு நிறுத்துவது என்றே தெரியாமல் போகிறது. முடிவில் ஒருவன் ஆண்டியாவதை தடுக்க முடிவதில்லை...
இதுவே தான் பணம் சேர்க்கும் போது தன் பிள்ளைகளின் பாசம், மனைவியின் அன்பு எதையுமே ருசிக்காமல் காகிதத்தை மட்டுமே சேர்த்து பின் திரும்பி பார்த்தால் இவன் மட்டுமே ஜடமாய் நிற்பதை இறுதில் தான் உணர்வான்...

ராஜா MVS சொன்னது… [Reply]

நல்ல ஆழமான அலசல்... ரசிகன்...

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...

பகிர்வுக்கு நன்றி... நண்பா...

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி
என்னை குழந்தையாக மதித்து எனக்கு வந்த ஒரே வாழ்த்து உங்களிடமிருந்து தான். :P உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

கவிதையின் சொந்தக்காரரை கண்டுபிடித்ததும் கட்டாயம் உங்கள் பாராட்டை சொல்கிறேன்.

//கவிதை..அருமை..//
கட்டுரை?

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு அற்புதமான இரு குழந்தைகளின் தந்தை, உங்களால் முடியாததா? நல்ல படி செய்வீர்கள். வாழ்த்துக்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா நன்றி தோழி. நல்ல ஒரு கட்டுரை எழுத வாய்ப்பளித்ததற்கும், கருத்துக்கும். மறுபடி இதே போல ஒரு தொடர் இடுகையில் தொடர்வோம்.

ரசிகன் சொன்னது… [Reply]

@கணேஷ் நன்றி ஐயா. இப்படி ஒரு (தொடர் இடுகை) யோசனை இதற்கு முன் செயல்படுத்தப் பட்டிருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் இதை துவங்கினீர்கள் என நான் நம்புகிறேன். சாயம் போன வார்த்தைகளால் பாராட்டிக் கொண்டிருந்த பதிவுலகத்தில், இந்த தொடர் இடுகை ஒரு இணக்கத்தை, இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக உணர்கிறேன். நன்றி, உங்கள் யோசனைக்கும் கருத்துக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@suryajeeva அண்ணா, உலக அரசியலெல்லாம் பேசறோம்! வீட்டுல நடக்கிற விஷயம் தானே, கலக்கிடுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.

//உங்கள் பதிவில் ஒரு இடத்தில் முரண்பட்டேன்//
முரண்பாடுகளால் தானே உலகமே இயங்கிகிட்டிருக்கு. வரவேற்கிறேன்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi கருத்துக்கு நன்றிம்மா. உங்க அனுபவத்துக்கு, என்னை விட நீங்க சிறப்பாவே எழுதுவீங்க. வாழ்த்துக்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ராஜா MVS மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே. நீங்கள் சொன்ன அதே கருத்தை பழங்காலப் பாடல் ஒன்றும் சொல்கிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன்
நாலாறு (4 +6 ) மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி.(குழந்தை) அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

நன்றி நண்பரே, உங்கள் ஆதங்கத்திற்கும், கருத்திற்கும், குழந்தைகள் தின வாழ்த்திற்கும்.

SURYAJEEVA சொன்னது… [Reply]

தோழர் உங்கள் அழைப்பை ஏற்று குழந்தைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவின் என் பங்களிப்பை செய்திருக்கிறேன்.. இத்தனை நாள் தாமதமானதற்கு மன்னிப்பும்... யாரையும் தொடர் பதிவு இட அழைக்கவில்லை என்பதற்காக அடுத்த மன்னிப்பும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

http://kathaikkiren.blogspot.com/2011/11/blog-post_13.html

SURYAJEEVA சொன்னது… [Reply]

முரண் பட்ட இடம் வேறு ஒன்றும் இல்லை.. ரொம்ப சின்ன விஷயம்.. தோசை சாப்பிடுவதற்காக லஞ்சம் கொடுத்து பழக்கனுமா?

ரசிகன் சொன்னது… [Reply]

@suryajeeva
மன்னிப்புக்கெல்லாம் அவசியமே இல்லை தோழரே. அழகாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

முரண் பட வேண்டிய அவசியமே இல்லை. லஞ்சம் கொடுத்தது மழலை உலகத்தை சாராதவர். லஞ்சத்தை மறுத்தது மழலை. athanaal தான் "மழலை உலகம் மகத்தானது" என்கிறோம்.

SURYAJEEVA சொன்னது… [Reply]

//நான் படித்த காலத்தில் ஒன்பது கிரகங்கள், இன்று எட்டு தான் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இல்லை நான் படித்தது ஒன்பது ஆகையால், ஒன்பது தான் என்று பழைய நம்பிக்கைகளை சந்தேகப் படாமல் பகுத்தறிவு வளராது..//

என் மழலை உலகம் பதிவில் புரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. மொத்தமாக படிக்க வேண்டும்.. மேலும் நாம் படிக்கும் பொழுது ஒன்பது கிரகங்கள் என்று பாடம் நடத்தினார்கள்.. இப்பொழுது எட்டு கிரகம் தான் இருக்கிறது என்று பாடம் நடத்துகிறார்கள்...

ரசிகன் சொன்னது… [Reply]

@suryajeeva
நான் படித்த காலத்தில் ஒன்பது கிரகங்கள், இன்று எட்டு தான் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இல்லை நான் படித்தது ஒன்பது ஆகையால், ஒன்பது தான் என்று பழைய நம்பிக்கைகளையே நம்பிக் கொண்டிருந்தால் பகுத்தறிவு வளராது.

அல்லது

நான் படித்த காலத்தில் ஒன்பது கிரகங்கள், இன்று எட்டு தான் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்..
நான் படித்தது ஒன்பது ஆயிற்றே, எட்டு தான் என்பது சாத்தியமா? என்று பழைய நம்பிக்கைகளை சந்தேகப் படாமல் பகுத்தறிவு வளராது.

என இருந்திருக்கலாம். உங்கள் வார்த்தைகள் இடறியதால் புரியவில்லை என்றேன். விளக்கியதற்கு நன்றி.

radhakrishnan சொன்னது… [Reply]

மிக அருமையான பதிவு.என் இள வயதில் மிகுந்த வேலையாலும்,நாளின்
பெரும் பகுதி வெளியே சுற்ற வேண்டிய
எக்ஸிகியூட்டிவ் வேலையாக இருந்ததாலும் என் குழந்தைகளுடன்
அதிக நேரம் செலவிட முடியவில்லை.
ஆனால் அவர்களுக்கு குறை அதிகம்
தெரியாவண்ணம் (மனைவி வழி)தாத்தா
பாட்டி ,மனைவி ஆகியோர்உடன் இருக்கும்படி செய்தேன்.முடிந்தவரை
அவர்களிடம் கண்டிப்பு கலந்த அன்பைப்
பொழிந்துவந்தேன். இப்போது வயதுவந்த்தும் தோழர்களைப் போல்
நடந்துகொண்டு வருகிறேன்.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.குழந்தைகளிடம் அவர்கள்
மொழியில்தான் பேசவேண்டும்.
இதை சரியாக உணராததால் மிககஃ கண்டிப்பாளரான என் தந்தை எங்களிடம் கடைசி காலங்களில் சற்றுத்தனிப்பட்டுப்போய் அவர் விரும்பியும் எங்களால் நெருங்கிப் பழக முடியவில்லை.அம்மா அதற்கு
நேர்மாறு.பகிர்வுக்கு மிக்க நன்றி.

shanevel சொன்னது… [Reply]

குழந்தைகள் உலகத்திற்கு அருமையான வழியை சொல்லிருக்கீங்க... குழந்தைகள் படைப்புகள் அதனால் தான் இப்போதும் வெற்றிப்பெற்று கொண்டே இருக்கிறது..!தொடராக இந்த பதிவு வரும் என்பது புதுமை தான்...!

ரசிகன் சொன்னது… [Reply]

@radhakrishnan
முகம் தெரியாத, மாயம் நிறைந்த இணைய உலகில், தனிப்பட்ட விஷயங்களையும் தாங்கள் பகிர்ந்து கொண்டது, மகிழ்வளிக்கிறது. நன்றி அய்யா. வருகைக்கும். கருத்துக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@shanevel
வாங்க. நல்லா இருக்கீங்களா? இந்த தொடர் பதிவு விஷயம் நமக்கு தான் புதுசு. ஏற்கனவே இங்க பல பேர் பழம் தின்னு விதை விதைச்சுட்டங்க. நீங்க எங்களையே குழந்தை மாதிரி பாத்துக்கறீங்க. உங்களுக்கு தெரியாத குழந்தை வளர்ப்பா! உங்க குழந்தை குடுத்து வச்சவர் தான்.

Angel சொன்னது… [Reply]

முழு பதிவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் அந்த கவிதை மிக அருமை .எனக்கு சில பெற்றோரை பார்க்கும்போது நந்தவனத்தில் ஆண்டி பாட்டுதான் நினைவுக்கு வரும் .

ரசிகன் சொன்னது… [Reply]

@angelin
வருக தோழி. முதன் முறை வந்திருக்கிறீர்கள். தங்கள் வரவு நல் வரவாகட்டும்.

A.R.ராஜகோபாலன் சொன்னது… [Reply]

இந்த ரசிகனின் ரசிகன் நான்
அருமையான பதிவு
குழந்தைகளிடமிருந்துதான் பெரியவர்கள் அரிய பெரிய செய்திகளை அறிந்து கொள்கிறார்கள், அதில் பாட்டியின் பேரன்பும், தெரிந்தது.

ரசிகன் சொன்னது… [Reply]

@A.R.ராஜகோபாலன்
ஹா... ஹா... நன்றி நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...