புதன், நவம்பர் 30, 2011

மகிழ்ச்சி...மாலை வேளை. வானம் நீர் தூவிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய சுப்பிரமணி உற்சாகமாக காணப்பட்டார். தலை துவட்ட துண்டு கொடுத்து விட்டு காபி போடப் போன மனைவி காயத்ரியிடம் கையோடு வாங்கி வந்திருந்த குலாப் ஜாமூனையும், பூவையும் கொடுத்தார்.

"என்னங்க விசேஷம்? மாசக் கடைசியில இனிப்பெல்லாம் தடபுடலா இருக்கு!" ஆவலுடன் கேட்டாள் காயத்ரி.

"ரொம்ப நாளா வர வேண்டி இருந்த அரியர்ஸ் பணம் இன்னிக்கு வந்துது. அதான்" என்றார்.

"எவ்வளவுங்க!"

"லட்சத்துக்கு நாலாயிரம் கம்மி"

"ஏங்க! தமிழ்நாடு பூரா கிளை வச்சிருக்க அந்த பெரிய நகை கடை நம்ம ஊர்லயும் கடை திறந்திருக்காங்களாம். நல்ல பெரிய கடையாம். மூணு மாடி. தங்கம், வெள்ளி, வைரம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாடியில. நெறைய டிசைன் இருக்காம். செல்வராணி சொன்னாங்க. நானும் என்னோட இந்த சங்கிலிய மாத்தணும்னு எவ்ளோ நாளா நெனச்சிக்கிட்டிருக்கேன். நகை கடைக்கு போகலாமாங்க?" காபியை கொடுத்துக் கொண்டே கேட்டாள் காயத்ரி.

"இந்த சங்கிலிக்கு என்ன, நல்லாத் தானே இருக்கு?"

"இல்லைங்க, இது பத்து வருஷத்துக்கு முன்ன நம்ம கல்யாணத்துக்கு அப்பா அம்மா செஞ்சு போட்டது. இப்போ இத விட அழகா நெறைய டிசைன் வந்துடுச்சி. வைரம் மாதிரியே ஜொலிக்கிற ஜிர்க்கான் கல்லு வச்சு, மரகதம், மாணிக்கம், கெம்பு எல்லாம் வச்சு, ரோடியம் பாலிஷ் போட்டு, பாம்பே கட்டிங், கேரளா மாடல் அப்படின்னு என்னென்னவோ வந்துருக்குங்க. வாங்க போயி பாத்துட்டு வருவோம்" ஆர்வமாக இருந்தாள் காயத்ரி.

நகை கடைக்காரன் ரேஞ்சுக்கு பேசறாளே! என நினைத்துக் கொண்டே, "தங்கம் இப்போ விக்கற வெலையில வாங்கித் தான் ஆகணுமா?" எனக் கேட்டார்.

"என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கறப்ப, கிராம் நானூறு ரூபாய்க்கு வாங்கினோம். இப்போ பாருங்க ஒரு கிராம் ரெண்டாயிரத்து ஏழு நூறு ரூபாவுக்கு விக்குது. தெனமும் ஏறிகிட்டே தான் இருக்கு. ஆனாலும் மக்கள் வாங்கி கிட்டே தான் இருக்காங்க. இப்போ கிரீஸ், அமெரிக்கா, இத்தாலி இங்கல்லாம் பொருளாதார நெருக்கடி இருக்கறதால தங்கம் இன்னும் விலை ஏற்றத்துக்கு தான் வாய்ப்பிருக்கறதா சொல்றாங்க."

நல்ல தெளிவா இருக்கா. ஒன்னும் பேச முடியாது என நினைத்துக் கொண்டே, "சரி போகலாம். நீ சொன்னா சரியாத் தான் இருக்கும்" என்றார்.

"சமத்து" என கணவன் முதுகில் செல்லமாய் தட்டி விட்டு நகை கடைக்கு கிளம்ப ஆயத்தமானாள். வானம் வெளுத்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் நகை கடையில் இருந்தனர்.

ஊழியர்களின் முக மலர்ச்சியும், ஏசியின் குளிர்ச்சியும் கூடவே மஞ்சள் வெளிச்சத்தில் தங்கம் தக தக வென மின்ன தேவ லோகத்தில் இருப்பதாக உணர்ந்தார் சுப்பிரமணி. "இவ்வளவு தங்கம் இந்தியாவுல இருந்துமா நாம வளரும் நாடு?" என ஆச்சரியப் படுமளவிற்கு தங்கத்தை குவித்து வைத்திருந்தார்கள்.

இரண்டு மணி நேரம், இருக்கும் எல்லா நகைகளையும் பார்த்து விட்டு முடிவாக ஒரு சங்கிலியை காயத்ரி தேர்ந்தெடுக்க, பழைய நகையை கொடுத்து கணக்கு போடும் போது, அதன் தரம் குறைவு என கடைக்காரர் அதன் மதிப்பை குறைக்க, கணக்கு சீட்டை வாங்கி பார்த்தார் சுப்பிரமணி. சீனுவாச ராமனுஜம் வந்தால் கூட கணக்கு புரியுமா என்பது சந்தேகம் தான். விளக்கம் கேட்ட போது எப்படி எப்படியெல்லாமோ விளக்கினார்கள், கடைசி வரை புரியவில்லை. வேறு வழி இல்லாமல் இருந்த பணத்தை கொடுத்து விட்டு, குறைந்த பணத்தை நண்பன் பாலுவை கடைக்கு கொண்டு வந்து தர சொல்லி (கடன் தான்) கொடுத்தார் சுப்பிரமணி.

இரண்டு லட்சத்துக்கு மேல விழுங்கிய அந்த சங்கிலி ஏனோ சுப்பிரமணிக்கு நிறைவை தரவில்லை. "இதுக்கா ரெண்டு லட்சம்!?" என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்கி இருந்தது.

வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். நகையை அழகிய பெட்டியில் வைத்துக் கொடுத்தார்கள். கூடவே சாப்பாட்டை சூடாக வைத்திருக்கும் ஹாட் பேக்கை பரிசாக கொடுத்தார்கள். உடனே காயத்ரி உச்சி குளிர்ந்து போனாள். "நாம வழக்கமா வாங்கற கடையில பர்ஸுக்கு மேல எதுவும் தர மாட்டாங்க. ரொம்ப கேட்டா கொஞ்சம் பெரிய பர்ஸா தருவாங்க. ஆனா இங்க நாம கேக்காமயே ஹாட் பெக்கேல்லாம் தராங்க!" சிலாகித்து பேசினாள் காயத்ரி.

நகை கடையிலேயே பார்த்த பாலு, அங்கிருந்து ஹோட்டலுக்கு போன போது அங்கே சந்தித்த இருவர், வேலை செய்யும் இடத்தில் குறைந்தது பத்து பேர், போன் பேசும் போது சிலரிடம் என பார்க்கும் எல்லோரிடத்தும் ஹாட் பேக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 கருத்துகள்:

ஷைலஜா சொன்னது… [Reply]

சின்ன மீன் பெரிய மீன் கதைதான்! மகிழ்ச்சியை இப்படியெல்லாம் சிலர் பெற்றுக்கொள்கிறார்கள் நல்ல கதை ரசிகன்...ஆமாம் நான் என் ஒரு இடுகைல (மெய்மறந்தகாதல்) உங்க பேரையும் ஹீரோக்கு நண்பனா எழுதினதை கவனிக்கலையே நீங்க இன்னும்?:)

Lakshmi சொன்னது… [Reply]

வரவு எட்டணான்னா செலவு பத்தணாவா?

பெயரில்லா சொன்னது… [Reply]

நல்ல கதை ரசிகன்...தொடர்ந்து கலக்குங்கள்...வாழ்த்துக்கள்...

suryajeeva சொன்னது… [Reply]

ஹ ஹா.. நல்ல நகைச்சுவை... நகை வாங்க போனதால் நகை வாங்கியது பெரிதாக தெரியவில்லை... எதிர்பாராமல் வந்த ஹாட் பாக் பேச்சுப் பொருளாக ஆகி விட்டது

ஷைலஜா சொன்னது… [Reply]

மடல் படிச்சேன் பிசியா இருக்கிங்கன்னு தெரியுது நிதானமா வாங்க பரவாயில்லை ப்ரதர்

ராஜா MVS சொன்னது… [Reply]

மிக ஆழமான கருவை கொண்ட கதை... நண்பா...

ஆனால் கரு படிப்பவரின் மனதில் ஆழமாக பதிய சற்று தாமதமாகிறது...
காரணம் கதையின் முடிவில் மட்டுமே கரு நிற்கிறது...

தங்களின் ஆக்கம் மிக அருமை... வாழ்த்துகள்... நண்பா...

சம்பத் குமார் சொன்னது… [Reply]

வணக்கம் நண்பரே..

இந்த கதை அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது என நினைக்கிறேன்..

என்ன தொகை மட்டுமே வேறுவேறாக..

பகிர்ந்த உரைநடை அருமை..

A.R.ராஜகோபாலன் சொன்னது… [Reply]

இலவசம், இல்லாரை மட்டுமல்ல இருப்பவரையும் வசமாக்கும் மந்திரம், அருமையாக சொன்ன கதை.

Radhakrishnan சொன்னது… [Reply]

பவம் Mr மணி(சுப்பிரமணி), வந்த அரியர் பணம் எல்லாம் சின்ன மஞ்ச உலோகமாக மாறியது. காயத்ரி லாக்கரில் ஒரு செயின் மாறியது மட்டும் மிச்சம்.

அனாலும் ஓசியில் வந்தாக நம்பும் ஹாட் பாக் காசு சேர்த்து கொடுத்தது கூட தெரியவில்லை.

மற்றும் ஒரு பார்வையில் பார்த்தல் வாங்கும் போது எந்த நகையின் தரமும் சோதித்து பார்த்து செர்டிபிகேட் தருவது இல்லை, விற்கும் போது மட்டும் எதற்கு உரசி பார்த்து தரம் கூட குறைவு என்றல் என்ன ஒரு நியாயம்? இதை எப்போது சரிசெய்ய போகிறது அரசாங்கம்?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா
@Lakshmi
@ரெவெரி
@சம்பத் குமார்
@A.R.ராஜகோபாலன்

எனது இடுகையை தவறாமல் வாசித்து, மறக்காமல் கருத்துரையிட்டு என்னை உற்சாகப் படுத்தும் உங்களுக்கு நன்றி நண்பர்களே.

ரசிகன் சொன்னது… [Reply]

@suryajeeva
சரியான அலைவரிசையில் புரிந்து கொண்டீர்கள். நன்றி தோழர்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ராஜா MVS
அது ஏனோ எனக்கு அப்படி தான் எழுத தெரிகிறது. அது என்னுடைய பாணி என நினைக்கிறேன் நண்பா. (அப்படி ஒன்னு இருக்கா!?)

ரசிகன் சொன்னது… [Reply]

@Radhakrishnan
அதானே! அரசாங்கம் எதை செய்திருக்கிறது?!. நகை வாங்கும் கடையிலேயே விற்றால் மட்டுமே மதிப்பு குறையாமல் விற்க முடியும். ஆனால், அங்கேயே புது நகை வாங்க வேண்டிய நிர்பந்தம் அப்போது ஏற்படும்.

வாங்கும் நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் எப்படி? அது தான் தெரியவில்லை.

ரசிகன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன்
அவசியம் பார்க்கிறேன். நண்பர் சூர்யா ஜீவா அவர்களது பதிவில் கமாடிட்டி சந்தை பற்றி பெரிதாக ஒரு கருத்துரை எழுத வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும் பார்க்கிறேன்.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
ஐம்பதாயிரத்தை இரண்டாக்கி
கணினியும் கழுத்துஅட்டிகையும்
வாங்கி ஐந்து வருடமாகிறது!

அடடா
இன்றைய மதிப்பீடு உண்மைதான்
என் பங்கு பாதி உனது இருமடங்கு
நீ பூட்டியல்லவா வைத்திருக்கிறாய்?

Bharath Computers சொன்னது… [Reply]

'நகை'சுவை- (சுவையா இருக்கனும்னா, சமையல் சுட,சுட இருக்கனும், சுட சுட இருக்க ஹாட்பேக்)

Related Posts Plugin for WordPress, Blogger...