திங்கள், நவம்பர் 21, 2011

குயில் தேடல்...

டந்து போன வசந்த காலத்தில் நமது கவனத்தை ஈர்த்த குயிலின் குரல்,

எங்கிருந்தோ கூவும் 
ஒற்றைக் குயில் 
எதிரொலிக்கிறது 
நீ இல்லாத 
என் தனிமையின் 
ஏக்கத்தை.

என என்னை கவிதை எழுத வைத்தது. பேருந்தில் அமர்ந்து கவிதையை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போது, வைரமுத்து "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?" என கேள்வியை எழுப்பினார். அட! அதானே, நாம இது வரை குயிலையே பார்த்ததில்லையே? என சுவாரசியம் பற்றி கொள்ள, குயில் தேட ஆரம்பித்தேன். 

கட்டிடக் காட்டில் குயிலை எங்கே போய் தேடுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்த போது,  "நம்ம கூகுளாரை கேட்டால் என்ன?" என யோசனை மின்னலென தோன்றியது. படங்கள் பிரிவில் அவரை கேட்டால், கௌதாரி, காக்கை, கரிச்சான் குருவி, குயில் பாட்டு பாடிய பாரதி, சின்ன குயில் சித்ரா, லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி என எதை எதையோ காட்ட, எனக்கு தலை சுற்றத் தொடங்கியது.

நண்பர் வெங்கடேசன் "வண்டலூர் ஜூ ல பார்க்கலாமேடா" என அருமையான ஒரு யோசனை சொன்னார். அதானே என ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் கேமரா சகிதம் ஆர்வத்துடன் கிளம்பினோம்.

வண்டலூரில், வெள்ளை நிறத்தில் மயில், மரம் ஏறும் கரடி (!), தங்க நிற சேவல் என எத்தனையோ விலங்குகள் இருந்தன. குயிலுக்கு கூண்டு மட்டும் இருந்தது. பெருத்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்.

சிதம்பரத்தில் இருக்கும் பறவை ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியத்தின் நினைவு வர, அவரிடம் தொலை பேசிக் கேட்ட போது, அவர் சொன்னார். "சொந்தமாக கூடு கட்டத் தெரியாத குயில், காகத்தின் கூட்டில் தனது முட்டைகளை இடும். இது தெரியாமல் குயில் குரலெடுத்து பாடும் வரை தன் குழந்தை என்றே காகம் குயிலை வளர்த்து வரும். குயிலில் ஆண் குயில் கருப்பாக காகம் போன்றும், கண்கள் சிவந்தும், பெண் குயில் கௌதாரி போல வரிகளுடனும் இருக்கும் என்றார். (கூகுளார் சரியாத்தான் காட்டி இருக்கார்)

குயிலை எங்கே பார்க்க முடியும் என்றேன் நான். வசந்த காலத்தின் காலை வேளையில் சென்னை மவுண்ட் ரோடில் கூட குயிலின் குரலை கேட்கலாம். ஆனால் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் என முடித்துக் கொண்டார். (அதனால தான் வைரமுத்து அப்படி கேட்டாரோ?)

அவர் அப்படி சொல்லி விட்டாலும் குயில் தேடல் மனதில் இருந்து அகலவில்லை. ஒருமுறை சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது, மதுராந்தகம் அருகே, நண்பர் சொன்ன அடையாளங்களோடு ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக, தட தடக்கும் ரயிலுக்கு அஞ்சாமல் தண்டவாளத்தின் சமீபத்திலேயே நின்றிருந்தது. உடனே ஆர்வ மிகுதியில் அவரை அழைத்து அடையாளம் சொன்னேன். "பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்ததா?" என கேட்டார். ஆமாம். ஒரு ஓடையின் ஓரமாகத் தான் நின்று கொண்டிருந்தது என்றேன். "அது நீர் காக்காங்க" என சொல்லி எனக்கு ஏமாற்றம் தந்தார்.

தேடி சலித்து கிட்ட தட்ட குயிலை மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு வசந்த காலம் வந்ததும், குயில் தனது இனிய குரலால் தன்னை எனக்கு நினைவு "படுத்தியது".

கருப்பாக எந்த பறவையை பார்த்தாலும் இது குயிலாக இருக்குமோ? என யோசிக்கும் அளவிற்கு குயில் என்னை தேட வைத்தது. இந்த சூழலில் நண்பர் சீனுவாசன் தனது வீட்டுக்கு நண்பர்கள் எங்களை - ஒன்று கூடல் - விருந்துக்கு அழைக்க, நாங்கள் சென்று விருந்தை சிறப்பித்தோம். உண்டு முடித்து, பாடிக் களித்து, விளையாடி மகிழ்ந்து வீடு திரும்ப வெளியே வந்த போது, கொஞ்சம் தூரத்தில் முள் புதரில், கருப்பாய் ஒரு பறவை. குயிலா? என விழித்துக் கொண்டிருக்கும் என் மனம் கேட்க, உடனே கையிலிருந்த கேமராவால் ஒரு மின் படம் எடுத்தேன்.


அடுத்த படம் எடுக்க எத்தனிக்கும் போது அது காணாமல் போயிருந்தது. நண்பர் பாலசுப்ரமணியத்திடம் கேட்ட போது சொன்னார். சாட்சாத் அது குயிலே தான்.

அது குயிலே தான் என அவர் சொன்ன வார்த்தையே, குயிலின் குரலாய் என் காதில் தேன் பாய்ச்சியது. அப்புறமென்ன என் ஓராண்டு கால தவம் இனிதே நிறைவடைந்தது. இப்போது நினைத்தாலும் குயில் குதுகலம் தருகிறது.

நன்றிகள்: குயில் குறித்து நிறைய சொன்ன நண்பர் பாலசுப்ரமணித்திற்கும், விருந்து வைத்து குயில் பார்க்க வகை செய்த நண்பர் சங்கீதா சீனுவாசனுக்கும்.



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

குயிலையே விருந்தாக்கும் இந்த காலத்தில்...குயில் பார்க்க விருந்து...அபூர்வ பகிர்வு...

ஷைலஜா சொன்னது… [Reply]

குயில் பற்றிய பதிவு அருமை ரசிகன்...ஒற்றைகுயிலின் சோக கீதம் கேட்டிருக்கிறேன் அது மனசைப்பிழியும்....குயில்மேல் உள்ள அபிமானத்தில் பெரிய கவிஞர் ஒருவர் (என் அப்பாவின் நண்பர்) தான் கருப்பாக இருப்பதாலும் கவிதை பாடுவதாலும் குயிலன் என்றே புனைபெயர்வைத்துப்புகழ் பெற்றிருந்தார். மயிலைப்பற்றி எழுதிய நான் ரொம்ப நாளா குயிலைப்பத்தி எழுத நினச்சிருந்தேன் நீங்க எழுதினதுல மகிழ்ச்சி படமும் அருமை

SURYAJEEVA சொன்னது… [Reply]

அழகாக இருந்தது உங்கள் பதிவு.. கடைசி வரை விறு விருப்புடன் எங்கும் தோய்வில்லாமல் தட்டி சென்றது எழுத்துக்கள்... புகைப்படம் பார்க்கும் வரை.. புகைப் படத்தில் இருப்பது குயில் அல்ல, செம்போத்து அல்லது ஜம்போத்து என்று அழைக்கப் படும் ஒரு வகை காகம்...
ஆங்கிலத்தில் இதை peasant crow என்று அழைப்பார்கள்...
குயில் புகைப்படம் கூகிளில் தேடி பாருங்கள் கண்டிப்பாக கிடைக்கும்...
நல்ல கரிய நிறத்தில் இருக்கும், கண்கள் படத்தில் உள்ளது போலவே சிவப்பாக தான் இருக்கும்... ஆனால் ரெக்கை சிவப்பாக இருக்காது அதுவும் கன்னங்க கரேல் என்று இருக்கும்...

பால கணேஷ் சொன்னது… [Reply]

குயிலின் குரல் அழகு பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சில கட்டுரைகளில் படித்துமிருக்கிறேன். ஆனால் இதுவரை எப்படியிருக்கும் எனப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. உங்களின் குயில் தேடலை ரசனையுடன் தொடர முடிந்தது. பிரமாதம்!

shanevel சொன்னது… [Reply]

குயில்....! ஒரு பறவை என்று மட்டும் தான் தெரியும். அது எப்படி இருக்கும் என்பது இப்போதே எனக்கே, ஏன் நமக்கே புதிர் தான். இந்த விசயத்தில் சிட்டுக்குருவிக்கு அடுத்து காணாமல் போனது குயிலாகத்தான் இருக்கும். அடுத்து இப்படி ஒவ்வொரு பறவையாக காணாமல் போனால், மனிதகுலம் தெண்டமாக த்தான் தெரியும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி

குயிலை சாப்பிடுகிறார்களா? பாக்கவே முடியலையேங்க!

மனிதன் இன்னும் மிருக நிலையிலேயே தான் இருக்கிறான். :(

ரசிகன் சொன்னது… [Reply]

@suryajeeva
அப்படியா!!!!!!!!! அடக் கடவுளே! அப்போ இன்னும் என் தேடல் முடியலையா?
நன்றி நண்பரே, ஒரு புதிய பறவையை அறிமுகப் படுத்தியதற்கு.

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா
எங்க, நீ பார்த்தது குயிலே இல்லைன்னு நம்ம சூர்ய ஜீவா சொல்லிட்டாரு. நான் குயிலன் அய்யாவ பாத்து தான் மனச தேத்திக்கணும் போல இருக்கு.

ஒரே தலைப்பில் தொடர் பதிவு எழுதறோம். நீங்க குயிலை பத்தி எழுதுங்க. ஆவலோடு காத்திருக்கிறேன்.

ரசிகன் சொன்னது… [Reply]

@கணேஷ்
நீங்களும் பார்த்ததில்லையா! தேடுங்கள் தோழரே. பார்க்க கிடைத்தால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்பார்க்கிறேன்.

ராஜா MVS சொன்னது… [Reply]

தங்களின் தேடலின் அனுபவத்தை மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்...
படிக்கும்போது எங்களுக்கும் உள்ளார்ந்த பழையநினைவுகளூக்கு இட்டுச் செல்கிறது... நண்பா...

ராஜா MVS சொன்னது… [Reply]

[im]https://lh6.googleusercontent.com/-A10uPGp1Q1k/TstbnTnwNZI/AAAAAAAABpw/-GYxQLHxt18/s227/images.jpg[/im]

பூங்குழலி சொன்னது… [Reply]

குயில் குருவி ஓணான் ன்னு எல்லாமே தொலைந்து போனது ...அழகான பதிவு மெல்லிய நகைச்சுவையோடு

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

குயில் தேடும் அனுபவம் புதுமை நான் 20- வர்டங்கள் முன்பு சந்த்ரபூரென்னும் ஊரில் 15- வருடங்கள் இருந்திருக்கேன் அங்கு இதுபோல பறவையைத்தான் குயில் என்போம் குரலும் அப்படியேதான்.காலை வாக் போகும் போது குரல் சத்தத்தை பின் தொடர்ந்துபோவோம் மரத்தின்மேல் இந்தப்பறவைதான் இருக்கும். நாம குக்கூ என்றாள் அதுவும் குக்கூ என்று பதில் குரல் கொடுக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

Angel சொன்னது… [Reply]

asian koel or cuckoo bird என்று கூகிளில் தேடுங்கள்
இதோ ஆண் குயில் இங்கே http://www.webindia123.com/wildlife/gallery/birds.htm

Angel சொன்னது… [Reply]

http://www.ecoindia.com/animals/birds/cuckoo-the-koel.html
நான் நிறைய குயில் பார்த்திருக்கேன் திருவள்ளூர் அருகில்
இதோ இன்னொரு படம் இங்கே

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
கூட்டில் வசிக்காமல்
அலைந்து திரியும்
குயில் முகம் எதற்கு?

அடடா
கூட்டை சுமப்பது
சுகமெனக்கருதி
நகரும் நத்தை முகம் அழகு!

அம்பலத்தார் சொன்னது… [Reply]

முப்பது வருசங்களுக்கு முன் தாயகத்தில் இருந்தபோது நம்ம வீட்டுப்பக்கம் அடிக்கடி காணமுடிந்த பறவையினமாயிற்றே குயில்.3 தசாப்தங்களில் இவ்வளவு அருகிவிட்டதா ?

radhakrishnan சொன்னது… [Reply]

கடைசியில் குயிலைக் கண்டுவிட்டீர்களே,நகரப் பகுதிகளில்
முன்பு பார்த்த சிட்டுக் குருவிகளைக் கூட
இப்போது பார்க்க முடியவில்லை.கட்டிடப்
பெருக்கத்தால் ,கூடுகட்ட ஓட்டுக் கூரை
இல்லாததால் குருவிகளைப் பார்ப்பது
அரிதாக உள்ளது.சரி,குயில் பாட்டு
கேட்க முடிந்த்தா? நல்ல பகிர்வுக்கு
நன்றி நண்பரே

ரசிகன் சொன்னது… [Reply]

@ராஜா MVS
வணக்கம் ராஜா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@பூங்குழலி
வணக்கம். தங்கள் வரவு நல் வரவாகுக.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi
ஒ! குக்கூ என கூவினால் குயில் தானே! குயிலிலேயே வகைகள் இருக்குமோ?

தகவலுக்கு நன்றி அம்மா.

ரசிகன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன்
வாருங்கள் நண்பரே, முதல் முறை வந்திருக்கிறீர்கள். தங்கள் வரவு நல் வரவாகட்டும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@angelin
வருக தோழி. இணைப்புகளை பார்த்தேன். பயனுள்ள தகவல். எனது குயில் தேடல் தொடரும்.

நன்றி தோழி. சிரத்தை எடுத்து தேடி இணைப்புகளை இணைத்ததற்கு.

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
சரி... சரி... பேசி தீத்துக்கலாம்.

ரசிகன் சொன்னது… [Reply]

@அம்பலத்தார்
உண்மை தான். எவ்வளவோ மாற்றங்கள் கண்ணெதிரே நடந்து கொண்டே இருக்கிறது. அதுவும் கடந்த 15 ஆண்டுகளில், பல தளங்களில்.

நன்றி நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும்.

Radhakrishnan சொன்னது… [Reply]

இந்த லிங்கை சொடுகுக

http://en.wikipedia.org/wiki/Asian_Koel

ரசிகன் சொன்னது… [Reply]

@radhakrishnan
உண்மை தான். குயில் பாட்டு கேட்டதால் தான் கவிதை தோன்றியது.

ரசிகன் சொன்னது… [Reply]

@Radhakrishnan
போ.....து.....ம்ம்ம்ம். குயில் படம் நிறைய பாத்துட்டேன். இன்னும் குயில் மட்டும் தான் பாக்கணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...