செவ்வாய், டிசம்பர் 27, 2011

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!!!


மீபத்தில் பெருமழை பெய்த நாளின் மாலை வேளை அய்யா துரை.கருணாநிதி அவர்கள் தொலைபேசினார். தனது வீட்டின் எதிரில் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருக்கும் மனிதர்களின் இருப்பிடம் நீரால் நிரம்பி, உடைமைகள் எல்லாம் நனைந்து கையறு நிலையில் அவர்கள் இருப்பதால் முடிந்த அளவு ஏதாவது உதவுவோம் வாருங்கள் என அழைத்தார். நண்பர் ரங்ககுமாரையும் உடன் அழைத்துக் கொண்டு அவர் இருப்பிடம் சென்றேன்.

வளரும் நகரப் பகுதியில் காலியான மனைகளில் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருந்த சகோதரர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள். பிழைப்பு தேடி ஊர் ஊராய் அலைந்து கொண்டே இருப்பவர்கள். அதிக பட்சம் ஆறு மாதத்திற்கு மேல் ஒரே ஊரில் தங்காதவர்கள். பெங்களூருவிலிருந்து கிலோ கணக்கில் கை கடிகாரம் வாங்கி வந்து சில்லறையில் விற்பவர்கள்.  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற அளவு விற்பார்கள். மிகவும் சிறியவர்கள் வீட்டிலேயே விளையாடுவார்கள்.கூட்டமாக வாழ்பவர்கள் ஆதலால் துணைக்கு பலர் உண்டு. சில சிறுவர்கள் எப்போதாவது பிச்சை எடுத்து உண்பதும் உண்டு. இப்படியாக 120 பேர் - இருபத்து மூன்று குடும்பத்தினர் எல்லா வயதிலும் இருந்தனர்.

நாங்கள் போன போது அய்யா துரை.கருணாநிதி அவர்களும் அவரது மனைவியும் அவர்கள் அனைவருக்குமான உணவை  தயாரித்துக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் காய்கறி வெட்டி, பாத்திரத்தை (வாடகைக்கு எடுத்தது) அடுப்பில் ஏற்றியும் உதவிக் கொண்டிருந்தனர். பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்(!) நிறைந்திருந்த தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே ஊற்றிக் கொண்டிருந்தனர். அது திரும்பவும் உள்ளே வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் நனைந்திருந்ததால் சிறுவர்களும் ஆண்களும் வாய்ப்புள்ள அளவு ஆடை குறைந்திருந்தனர்.

அவர்கள் இரவு தங்க அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் அனுமதி பெற்றோம். அவர்களுக்கு துணி வாங்க, பொருளுதவிக்காக நண்பர் பாலாஜி அவர்களின் அறிவுரை படி வர்த்தமான் துணிக்கடை முதலாளியை சந்தித்தோம். விஷயம் சொன்னதும் உடனே நேரில் வந்து பார்த்தார். எங்கள் இரு சக்கர வாகனத்தை தவிர்த்து விட்டு சைக்கிளில் வந்தார். (அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தும் அவர் பயன்படுத்துவதில்லையாம்) இவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவர்களோடு நேரடியாக பேசினார். இது போல நடப்பது வழக்கமானது தான், அதனால் உதவி எதுவும் வேண்டாம் என்று அவர்கள் மறுக்க, இவர் குடும்பத்திற்கு ஒரு போர்வையாவது தருகிறேன் என கூறி நகர்ந்தார்.

அவரை வழியனுப்பும் விதமாக அவர் சைக்கிள் வரை நான் கூட போக, பதறி தடுத்தார். "வேண்டாங்க. எனக்காக நடக்காதீங்க. செருப்பு போட்டுருக்கீங்க. புல்லுக்கு வலிக்கும்" என்றார். (அவர் செருப்பு அணிவதில்லை.) எனக்கு ஓங்கி அறைந்தது போலிருந்தது. அவர் மீதான மரியாதை அதிகமானது.

சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சுமார் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள போர்வைகளை அதே சைக்கிளில் அவரே கொண்டு வந்து கொடுத்தார். எங்களையே விநியோகிக்கும்படி சொல்லி எங்களிடமே தந்து விட்டு நிமிடத்தில் அகன்றார். செய்தி தாளின் புகைப் படத்துக்காக சமூக சேவை செய்யும் அரிதார மனிதர்கள் மத்தியில் இப்படி ஒருவரா என நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம்.

எந்த கலவரமும் குழப்பமும் இல்லாமல் ராஜஸ்தானத்து சகோதரர்கள் தங்களுக்கான போர்வையை பெற்றுக் கொண்டு சிநேகத்துடன் சிரித்தார்கள்.

குறிப்பு: போர்வைக்காக காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.அவர்களுக்கு தமிழ் பேசத் தான் தெரியவில்லை ஆனால் புரிகிறது. நடிகர் விஜயின் குத்து பாடல்களுக்கு குதூகலமாக நடனம் ஆடினார்கள். கவலையின் ரேகை கூட அவர்கள் முகத்தில் இல்லை. இவ்வளவு சிரமத்திலும் இன்பமாகவே இருந்தார்கள். அதில் மிகவும் கவனம் கவர்ந்த ஒரு விஷயம், ஆடையே இல்லாத ஒரு சிறுவனின் பெயர்... பில்கேட்ஸ்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 கருத்துகள்:

கோகுல் சொன்னது… [Reply]

இது மாதிரி சில விசயங்களை செய்யும் போது தான் உங்க வலைத்தள தலைப்பு மாதிரி வாழ்வே பேரானந்தம் என்பதை உணர முடிகிறது.
அந்த விசயத்துல நீங்க எல்லோரும் ரொம்ப கொடுத்து வைச்சவங்க.

கணேஷ் சொன்னது… [Reply]

மனிதநேயம் யாவற்றையும் விட மிக உயர்ந்த விஷயம். உங்களுக்கும் துரை.கருணாநிதி அவர்கள் மற்றும் அந்த துணிக்கடைக் காரருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

'புல்லுக்கு வலிக்கும்' என்று நினைக்கும் ஒரு நண்பனைப் பெற்றதற்கு நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Lakshmi சொன்னது… [Reply]

ஒருவருக்கு கஷ்டம்னு வரும்போதுதான் மற்றவர்களின் மனித நேயம் வெளிப்படுகிறது. எல்லார் மனதிலும் மனித நேயம் இருக்குதான் வெளிப்படுத்தவாய்ப்பு கிடைக்கும்போது அதன் பெருமை புரிகிரது பில் கேட் ஸ் பெயர் சூப்பர்.

ஷைலஜா சொன்னது… [Reply]

நல்ல இடுகை ரசிகன். இவர்களால்தான் மழை பெய்கிறது.. இதையெல்லாம் கண்டு நீங்க சொல்றதும் ஒரு சேவைதான் இல்லாட்டி என்னமாதிரி வீட்ல இருக்கற பெண்களுக்கு எதுவும் தெரியவராது..

ரசிகன் சொன்னது… [Reply]

@கோகுல் மிக்க மகிழ்ச்சி கோகுல். உங்கள் புரிதல் எனக்கு மகிழ்ச்சி தந்தது.

ரசிகன் சொன்னது… [Reply]

@கணேஷ் நீங்கள் சொல்வது நூறு சதம் உண்மை. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா.

ரசிகன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன் ஆஹா! அவர் எவ்வளவு பெரியவர்... நண்பர் எனும் அளவிற்கு நாங்கள் நெருங்கவில்லை தோழரே.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi வணக்கம்மா. நீங்கள் சொல்வது உண்மை தான். வெளிப்படுத்தப் படும் மனிதநேயத்திற்கு தான் மதிப்பு.

இந்த இடுகைக்கு தலைப்பு இரந்துண்ணும் உலக பணக்காரர் என்று தான் முதலில் யோசித்தேன். எதிர்மறை வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்பதால் மாற்றிவிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா வாங்கக்கா. அந்த மழை தான் அவங்களை சிரமப் படுத்தியதோ :p

ஆனால் அந்த மழை தான் ஒரு நல்லவரை அடையாளம் காட்டியது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நான் பேகனை விட
ஒருபடி மேல் என்றால்
ஏன் சந்தேகத்துடன் பார்க்கிறாய்?

அடடா
குளிரால் நடுங்குகிறாய்
போர்வைக்கு பதிலாக
போர்த்திக்கொள்ள என்னைத் தரவா?

விமலன் சொன்னது… [Reply]

ஆடைகளற்றபில்கேட்ஸ்களை சுமந்து நிற்கிற நமது தேசமும்,அவர்கள்க்கு போர்வைதந்த பேகன்களும் நமது தேசஸ்த்ஹ்டின் நிறந்தர அடையாளமாகிப்போகிறார்கள்.

கோகுல் சொன்னது… [Reply]

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_24.html

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு நல்ல வேளை... பேகன் உயிருடன் இல்லை.

ரசிகன் சொன்னது… [Reply]

@விமலன் நன்றி விமலன். தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@கோகுல் வலைசரத்தை எனக்கும், வலைசரத்திற்கு என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி கோகுல்.

Related Posts Plugin for WordPress, Blogger...