திங்கள், பிப்ரவரி 07, 2011

அத்திக்காய் காய்...


தமிழ் தவிர வேறு சில மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருந்தாலும் தமிழின் நுட்பம் புரியுமளவிற்கு பிற மொழிகளில் ஆளுமை எனக்கில்லை.  பலே பாண்டியா (1962)  திரைப்படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட அத்திக்காய் காய் காய்... என்ற நான் மிகவும் ரசித்த பாடல், நான் ரசித்த படி...

பெண்: 
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ?
(அந்த திசையில் [அத் திக்கு - அந்த திசை] காய் [காய் - எரி]. விஷம் [ஆலகாலம்] போன்ற துன்பத்தை தரக் கூடிய வெண்ணிலவே, என்னை போல நீயும் பெண்ணானதால் என் துன்பம் உனக்கு தெரியுமாதலால், அந்த [அவர்]  திசையில் காய். என் பக்கம் காயாதே) 

ஆண்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..


பெண்: கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக்காய்
(கன்னிக்காக, கன்னியின் ஆசைக்காக, காதல் கொண்ட பெண்ணிற்காக [பாவை - பெண்] அவரை, எந்தன் மன்னனை [கோ - அரசன்] காய்.)

ஆண்: மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
பெண்: இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
(மாது [பெண்] உள்ளம் காய் [இறுக்கமானது] ஆனாலும் என் உள்ளம் இறுக்கமானது அல்ல. அதனால் என்னை நீ காயாதே.)ஆண்: இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
(இரவுக்காக, உறவுக்காக ஏங்கும் இந்த ஏழைக்காக நீ தினமும் என்னவளை காய்.)பெண்: உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
(உருவம் சிறியதானாலும் [பிஞ்சு, காய்] பருவம் சிறியதல்ல. எனக்கும் வேதனைகள் உண்டு என்பதால் என்னை நீ காயாதே.)


இருவரும்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெண்: ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

(ஏலக்காய் வாசனை போல எங்கள் உள்ளம் வாழும் படி ஒளி வீசு.) 


ஆண்: சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
(தூது வழங்காத வெண்ணிலவே! சொன்னதெல்லாம் நீ விளங்கி கொண்டாயா? என்னை நீ காயாதே.)


இருவரும்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆண்: உள்ளமெலாமிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ?

வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
( [இவ்வளளவு சொல்கிறேனே!] உன் உள்ளம் இளகாயோ [கரைய மாட்டாயா?] ஒரே ஒரு வார்த்தை பேச மாட்டாயா? வெள்ளரிக்காய் பிளந்தது மாதிரி வெள்ளையாக நீ சிரிக்க மாட்டாயா?)

பெண்: கோதையெனைக் காயாதே கொற்றவரை காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
(பெண் என்னை காயாதே. பெண்ணாகிய நான் அணுகுதல் பண்பாடு மீறிய செயல் ஆதலால், என் அரசனை [கொற்றவன் - அரசன்] காய். உனது செயலால் அவர் என்னை அணுகும்படி செய். [அவர் அணுகியதால்] இருவரையும் காயாதே, தனிமையிலே ஏங்காதே வெண்ணிலா)

இருவரும்: அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 கருத்துகள்:

buddha சொன்னது… [Reply]

சிறு வயதில் கேட்ட செவி வழி வந்த உன்னதமான உணர்வுகளை திரும்ப தட்டி எழுப்பி மனதிற்குள்ளேயே சிருஷ்டித்து ரசிக்கும் படி, வித்தான செயல்களை சாத்தியப் படுத்தும் ஒரு பெண்ணை கண் முன் நிறுத்தியது உங்கள் விளக்கம். நன்றி.

shanevel சொன்னது… [Reply]

காய் பற்றி திடீரென பாட்டை போட்டு, ஒரு கவிதையாய் தமிழை சிலாகித்து... சிற்பத்தை வடிக்கிற உளி போல உன் எழுத்துக்கள் அருமையாய் விவரித்துள்ளது... வெங்"காய்"ம் விலை உயர்வு பாதிச்சுட்டதோ...! :)

K சொன்னது… [Reply]

என்னப்பா தூங்க விடமாட்டேன்கிற ...........

K சொன்னது… [Reply]

WHAT A POETRIC TRANSLATION.....

K சொன்னது… [Reply]

ஹலோ கவிஞரே பின்னிடிங்க போங்க ......

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
அத்திக்காய் இத்திக்காய்
எத்திக்காய் இருப்பினும்
மாதுளம் காய் என்றேன்

அடடா
தனக்காய் வாழாது
பாவைக்காய் வாழக்காய்
மாதுளம் கனியாகும் என்கிறாய்!

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு தியாகி சார் நீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...