சனி, ஏப்ரல் 09, 2011

அன்னா ஹசாரே...




டந்த ஐந்தாம் தேதி மாலை நண்பர் இராம்பாக்கம் அருள் தொலைபேசியில்  அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு ஆதரவாக நாமும் உண்ணாவிரதம் இருப்போமா எனக் கேட்டார். அவர் குறித்தும் அவர் போராட்டம் குறித்தும் ஏற்கனவே கொஞ்சம் அறிந்து வைத்திருந்ததால் உடனே சம்மதம் சொன்னேன். ஆனால் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி, காவல் துறையால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டது வருத்தமான விஷயம்.

அன்னா ஹசாரே என அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 72 வயதாகும்  கிசான் பாபுராவ் ஹசாரே ராணுவத்தில் பணி புரிந்து, காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக பணியில் ஈடுபட்டவர். 

மகாராஷ்டிராவின்  அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் மாதிரி கிராமமாக மாற்றினார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் வலிமையாக மாற்றிய மகாராஷ்டிராவின் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை அடிப்படையாக கொண்டே  கடந்த 2005 ஆம் ஆண்டு நமது இந்திய அரசு  தேசிய அளவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை வலிமையானதாக கொண்டு வந்தது.


இந்நிலையில் ஊழல், லட்சங்களிலிருந்து கோடிகளுக்குப் போய், அதிலிருந்து லட்சம் கோடிகளுக்கு போனதை பார்த்து நாடே அதிர்ந்தது. எவ்வளவு உழைத்தாலும் ஊழல் இருக்கும் வரை முன்னேற்றம் வராது என்பதால் இதற்கு முடிவு கட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே (கர்நாடக மாநிலத்தின் லோக் ஆயுக்தா [தேசிய அளவில் லோக் பால். மாநில அளவில் லோக் ஆயுக்தா. - இந்தியாவில் மாநிலங்களின் தன்னார்வத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் டெல்லியில் லோக் ஆயுக்தா இயங்கி வருகிறது] தலைவரான இவர், முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா மூலம் வழக்கு தொடுத்தவர்) உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் [2G அலைக்கற்றை ஊழலில் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இப்போது நடந்து வரும் வழக்கை தொடுத்தவர்.] ஆகியோருடன் இணைந்து 'INDIA AGAINST CORRUPTION' என்ற அமைப்பின் மூலம் மாதிரி லோக் பால் மசோதாவை தயாரித்தார். அரசு தரப்பில் தயாரிக்கப் பட்ட மசோதாவை விட, குற்றவாளிகள் தப்பித்து விடாத வகையில் வலிமையானதாக தயாரித்தார். அரசு தரப்பில் தயாரிக்கப் பட்ட மசோதாவில் நிறைய ஓட்டைகள் இருந்ததால் மக்கள் குழு ஒன்றை அமைத்து அதனோடு கலந்து பேசி மசோதாவை வடிவமைத்து நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல முறை தெரியப் படுத்தியும் ஒழுங்கான பதில் எதுவும் வராததால், இது குறித்த முடிவை ஏப்ரல் 4 ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார். அரசிடம் இருந்து குறிப்பிட்ட நாள் வரை அறிவிப்பு எதுவும் வராததால் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று நூறு பேரோடு நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்.

ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அரசு, அமைச்சர்கள் மூலமாக அவரை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார் அன்னா. உண்ணாவிரதம் தொடங்கியது முதல் அவருக்கு நாடெங்கும் ஆதரவு பெருகத் தொடங்கியது. இளைஞ்ர்களும், இணையமும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் அவருக்கு ஆதரவாக இறங்க, மிரண்டு போன அரசு அன்னா சொன்ன கருத்துக்களை ஏற்பதாக ஏப்ரல் 8 இரவு அறிவித்து உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டது. முறைப்படி அரசு கெஜெட்டில் வெளியிட்டதும் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக அறிவித்தார். அதன்படி இன்று அரசு முறைப்படி அறிவிக்க காலை சுமார் 10.45 க்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் அன்னா ஹசாரே. அவர் உண்ணாவிரதம் முடிக்கும் போது அவருடன் சேர்த்து நாடு முழுதும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் சுமார் 10.5 லட்சம் பேர்.

அன்னா கேட்டு கொண்டதற்கிணங்க அரசு அமைத்துள்ள குழு....


1. பிரணாப் முகர்ஜி (தலைவர்) 2. கபில் சிபல் 3. வீரப்ப மொய்லி 4. சல்மான் குர்ஷீத். 5. ப.சிதம்பரம் 6. சாந்தி பூஷன் (துணை தலைவர்) 7. அன்னா ஹசாரே 8. பிரசாந்த் பூஷன் 9. சந்தோஷ் ஹெக்டே 10. அரவிந்த் கேஜ்ரிவால்.

சாந்தி பூஷன் - 1972 ஆம் ஆண்டு மதிய சட்ட துறை அமைச்சரான இவர் அப்போதே லோக் பால் மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தவர். சமீபத்தில் நீதி மன்றங்களின் நேர்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பியவர்.

அரவிந்த் கேஜ்ரிவால் - தகவல் அறியும் உரிமை சட்ட போராளி.

சுதந்திர இந்தியாவில் சட்டம் ஒன்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன் படி இயற்றப்படுவது இதுவே முதல் முறை. ஜனநாயக நாட்டில் மக்கள் சக்தி நிரூபிக்கப் பட்டுள்ளது. காந்தியம் இன்னும் வாழ்கிறது என்பது மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இவற்றை சாத்தியப் படுத்திய நாயகன் அன்னா ஹசாரே அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

நாயகன் அன்னா ஹசாரே அவர்களை பற்றிய இந்த கட்டூரை உங்கள் வலைப்பதிவுக்கு ஒரு முத்தாய்ப்பு. அருமையோ அருமை!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எதாவது கேள்வி கேட்டால்
பதில் சொல்லாமல்
முறைப்பதை விட்டுவிடு!

தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் மூலம்
யாரும் யாரையும்
கேள்வி கேட்கலாமாம்!

Related Posts Plugin for WordPress, Blogger...