சனி, ஜூலை 09, 2011

நெல்லையப்பர் கோவில்!!!

லகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா? மதியா? என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன்.

சமீபத்தில் பணி நிமித்தம் திருநெல்வேலி செல்ல நேர்ந்தது. அப்போது நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றேன். எனது அந்த அனுபவம் இந்த இடுகையில்...

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப் பட்ட எழில்  கொஞ்சும் சிற்பங்கள் பல உள்ள அற்புதமான கோவில்.இதோ, மேலே உள்ள படத்தை பாருங்கள். அர்ஜுனனோடு சண்டையிட்ட சிவனின் சிற்பம். கோவில் உள்ளே நுழையும் போது, கொடி மரத்தை தாண்டியதும் உள்ள கோபுரத்தின் கீழ் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்றில் இருக்கும் சிற்பம். இந்த சிற்பத்தின் எழில் சொல்ல இந்த ஒரு புகைப்படம் போதாது.

கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்தும், கொஞ்சம் முன்புறம் குனிந்தும் நிற்கிறார் சிவன். அர்ஜுனனோடு முறுக்கிக் கொண்டு நின்றதை சொல்லும் விதமாக சிற்பி, சிவனை இப்படி முறுக்கி கொண்டு நிற்க வைத்திருப்பாரோ!?!

நான் புரிந்து கொண்ட வரையில் அநேகமாக இந்த சிற்பம் - தூணோடு சேர்த்து - ஒரே கல்லால் ஆனதாகத்தான் இருக்கும். புவிஈர்ப்பு விதிகளின் படி இந்த சிற்பம் கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதை சமாளிக்கும் விதமாக தான், தூணின் மேற்புறம் கொஞ்சம் பெரியதாக மேல் தளத்தோடு பொருத்தப்படிருக்கிறது.

நாம் குனிந்து நின்றால் நம் கழுத்தில் இருக்கும் சங்கிலி எப்படி இருக்குமோ, அதே போல சிவனின் கழுத்தில் உள்ள மாலை பூமிக்கு செங்குத்தாக தொங்குகிறது. ஒரு மாலை மட்டுமல்ல, மாலை, சங்கிலி என மூன்று இப்படி தொங்குகிறது. (மெலிதான இவற்றை, உடையாமல் உடலிலிருந்து பிரித்து செதுக்குவது சவாலான செயல் தான்). அதே போலத்தான் அவர் கையில் வைத்திருக்கும் அந்த வில்லும்.

மேலும், பிடிமானம் ஏதுமில்லாமலேயே அந்தரத்தில் நிற்கிறது சிவன் ஏந்தும் வாள். அவர் இடுப்பில் தெரியும் மெல்லிய மடிப்புகள் அவர் ஆரோக்கியத்தை சொல்லுகின்றன. காலில் மூன்று வித அணிகள் அணிந்திருக்கிறார். அதிலும் முழங்காலில் அணிந்திருக்கும் சலங்கை கவனிக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதனை விட உயரமாகவும், நுணுக்கமாகவும், ரசிக்கும்படியும்  படைத்திருக்கிறார் சிற்பி.

இவர் தொடங்கி உள்ளே நிறைய சிற்பங்கள் ரசிக்கும் படியாக உள்ளன. குறிப்பாக காந்திமதி அம்மன். சுமார் 25 நிமிடங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றேன். அப்படி ஒரு வசீகரம். அந்த முகம் காந்தம் போல ஈர்த்தது நிஜம். (மதி வதனம் காந்தமாக ஈர்ப்பதால் தான் காந்திமதியோ?) (இங்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். "நேரமாச்சு கிளம்புங்க" என அங்கிருந்த யாரும் சொல்லவில்லை.)

ஒரு தூணின் இடை பகுதியை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சிறு தூண்களாக பகுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சப்தம் வரும்படி செதுக்கி இருக்கிறார்கள். இதுவே ஆச்சரியமான விஷயம் தான். மேலும் ஆச்சரியம் தரும் படி, இரு சிறு தூண்களுக்கு இடையில் உட்புறத்தில் அணில் சிற்பம் இருக்கிறது. இன்னும் ஆச்சரியம் அந்த சிறு தூண்களுக்கு இடையே கல்லால் ஆன பந்து இருக்கிறது. இந்த பெரிய தூண் ஒரே கல்லால் செய்யப் படவில்லையோ என சந்தேகிக்கும் அளவிற்கு நுணுக்கமான வேலை. (ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் என எந்த அறிகுறியும் தெரியவில்லை.)


பக்தியோ, கலை ஆர்வமோ, மன்னன் அளித்த வெகுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும் காலத்தால் அழியாத காவியத்தை கற்களில் வடித்த சிற்பிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

குறிப்பு: ரதியும் அழகானவள் தான். ஆனால் முருகன் சன்னதியில் இருக்கும் ஒரு தூணில் மன்மதனோடு காட்சி தரும் ரதியின் மூக்கை எந்த முண்டகலப்பையோ உடைத்திருக்கிறான். அதனால் அவள் அழகு குறைந்து காணப்படுகிறாள். (காந்திமதியை விட நீ அழகு கம்மி தான் என சிற்பியிடமே ரதி மூக்குடைபட்டிருப்பாளோ?)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது… [Reply]

மிக அருமையான பதிவு நண்பரே
உண்மையான ரசிகர் நீங்கள்

ரசிகன் சொன்னது… [Reply]

நன்றி நண்பரே...

buddha சொன்னது… [Reply]

25 நிமிடதிற்குமேலே காந்திமதியையே பார்த்துகொண்டு நின்றிருந்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் தம்பி!!!

ரசிகன் சொன்னது… [Reply]

அண்ணா... அம்மாண்ணா.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

உங்களுக்கென்ன
நண்பரே!
அழகி ரதியோ?மதியோ?

என்னவள்
அப்போ நான் இல்லையா?
என்று ஒரே ரகளை!

shanevel சொன்னது… [Reply]

"முண்ட கலப்பை" எவனாவது ரதி யின் மூக்கை உடைத்தது இருக்கட்டும் ... நீங்க ரசித்தது போல் அரசும் கவனம் வைத்திருந்தால் இன்னும் நிறைய பொக்கிஷங்கள் நன்றாக இருந்திருக்கும்... கொஞ்சம் திருவனந்த புரம் பத்மநாப கோவில் பத்தி சொல்லுங்க... இப்போ அங்க தான் உலகமே கவனிக்குதே ..!

Radhakrishnan சொன்னது… [Reply]

அருமையான சிற்பம். அர்ஜுனன் ஒரு சிவா பக்தன் என்று பெரிய புராணம் புத்தகம் சொல்லுகிறது, மற்றும் ஒரு செய்தி அர்ஜுனனின் அடுத்த பிறவி கண்ணப்ப நாயனார்.

வேடுவ வடிவில் வந்த சிவா பெருமானிடம் பன்றி குறித்து சண்டை போட்டு, தான் சண்டை போட்டது சிவபெருமான் என்று தெரிந்தவுடன் சரணம் அடிந்த அர்ஜுனனை சிவபெருமான் வாழ்த்தி வரம் தரும் பொது, அர்ஜுனன் "உன்னை மறவா வரம் கேட்க" பெருமானோ இந்த பிறவியில் உனக்கு பாசுபத அஸ்தரம் தேவை, உனது அடுத்த பிறவியில் வேடுவனாக வந்த என்னுடன் பன்றி குறித்து சண்டை போட்டதால், நீ அடுத்த ஜென்மத்தில் வேடுவனாக பிறந்து எனக்கு பன்றி கறி நைவேத்தியம் செய்வாய் என்றார்.

அதன் படி அர்ஜுனன் அடுத்த பிறவியில் கண்ணப்ப நாயனாராக பிறந்து சிவலோக அடைந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது

Related Posts Plugin for WordPress, Blogger...